தணல்: திரை விமர்சனம்

காட்டுப் பகுதியில் பெரும் கொலைகாரக் கும்பலிடம் சிலர் சிக்கிக்கொண்டாலே பதைபதைப்பாக இருக்கும்.
இங்கே, பெரும் நகரத்தின் மையப் பகுதியில் ஆளே இல்லாத குடிசைப் பகுதியில் கொடூர கொள்ளைக் கும்பம் மையம் கொண்டு இருக்கிறது. அன்று இரவு நகரின் பெரும்பாலான வங்கிகளை ஒரே நேரத்தில் கொள்ளையடிக்க திட்டம் வைத்து இருக்கிறது.
அந்த குடிசைப் பகுதியில் சிக்கிக் கொள்கிறார்கள் சில கான்ஸ்டபிள்கள். அவர்களில் ஒவரை கொலைக்கும்பல் கொடூரமாகக் கொலை செய்ய.. இதர கான்ஸ்டபிள்கள் நடுங்கிப்போய் ஓடுகிறார்கள்.
அவர்கள் அந்த கொலைகாரக் கும்பலை பிடித்தார்களா, வங்கிக் கொள்ளையை தடுத்தார்களா என்பதுதான் கதை.
கான்ஸ்டபிளாக வரும் அதர்வா எப்போதும்போல் இயல்பாக நடித்து இருக்கிறார். பெற்றோர்களை புரிந்துகொள்ளாமல் சிடுசிடுப்பது, காதலியிடம், “உன் அப்பன் சொன்னா என்ன.. வா ஓடிப்போயிரலாம்” என சீறுவது, வில்லன்கள் கூடாரத்தில் சிக்கி தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் என ரசிக்க வைக்கிறார் அதர்வா.
நாயகி லாவண்யா திரிபாதி அழகுப் பதுமையாக வந்து போகிறார். ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனிடம் பயந்து நடுங்கும் போது நமக்கும் பதைபதைப்பை கொண்டு வந்துவிடுகிறார்.
நாயகனின் தாயாக வரும் சோனியா, தந்தையாக வரும் இருவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.
வில்லன் ( போல வரும்) அஸ்வின் அசத்தி இருக்கிறார். அவர் தனது பின்னணியைச் சொல்லும் நேரத்தில் கலங்க வைக்கிறார்.
மற்றவர்களும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு மிரட்டல். அதுவும் அந்த குடிசை பகுதி… அதில் வில்லனின் கூடாரம்… இரவு நேரக் காட்சிகள்… அசத்தி இருக்கிறார் சக்தி சரவணன்.
அதே போல ஜஸ்டின் பிரபாகரன் இசையும் படத்துக்கு பலம்.படத்தின் நாயகனாகவே வருகிறது, அந்த குடிசைப் பகுதி செட். கலை இயக்குநருக்கு பாராட்டுகள்.
எடுத்துக்கொண்ட கதை, அதற்கான களம் என்பதில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் ரவீந்திர மாதவா. கொள்ளையடிப்பவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை அவர் சொன்ன விதம், நகரின் மையப்பகுதியில் குடிசைப் பகுதி, அங்கே போன்கள் வேலை செய்யாத காரணம்.. என நம்பத் தகுந்த காட்சிகளை சுவாரஸ்யமாக வைத்து இருக்கிறார்.
அதோடு காவல்துறை கருப்பு ஆடுகள், அரசியல் – கார்ப்பரேட்டுகள் கூட்டு, அப்பாவி மக்களை ஒடுக்குவது என பல விசயங்களையும் கதையோடு சொல்லி இருக்கிறார்.
ஆனால் திரைக்கதையில் இன்னும் இறுக்கம் காட்டி, நீளத்தைக் குறைத்து இருக்கலாம்.
மற்றபடி ரசிக்க வைக்கும் படம்தான்.