தலைவன் தலைவி: திரை விமர்சனம்

தலைவன் தலைவி: திரை விமர்சனம்

விஜய் சேதுபதி – நித்யா மேனன் தம்பதி பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள குல தெய்வ கோயிலில், தனது பெண் குழந்தைக்கு முதல் மொட்டை போட, பெற்றோர்களுடன் வருகிறார் நித்யா மேனன். இதை அறிந்து அங்கு கிளம்பிச் செல்கிறது விஜய் சேதுபதி குடும்பம்.

‘எங்களுக்குத் தகவல் சொல்லாமல் குழந்தைக்கு மொட்டை போட்டுவிடுவீர்களா’ என்று ஆரம்பிக்கிறது சண்டை. அது பெரிதாகிறது.

இது தம்பதிக்குள் இன்னும் பிரிவை அதிகமாக்குகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை குடும்ப கலாட்டாக்களுடன் ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார்கள்.

அசைவ ஓட்டலில் பிரியாணிக்குத்தானே முக்கிய இடம்! அப்படி, சிக்கன் பிரியாணியாக படம் முழுக்க கமகமக்கிறார் விஜய் சேதுபதி. ஓட்டல் நடத்துவது, நிரவகிப்பது, அம்மாவுக்கும் மனைவிக்கும் டையே அல்லாடுவது என அதகளம் செய்திருக்கிறார்.

அவர் பிரியாணி என்றால் அதற்கேற்ற மட்டல் தால்ஜா, மனைவியாக வரும் நித்யா மேனன். மாமியார் மற்றும் நாத்தனாரிடம் சிடு சிடுப்பது, கணவன் மீது இருக்கும் காதலை மறைத்துக்கொண்டு சிடு சிடுப்பது என அருமையாக நடித்து இருக்கிறார்.ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறாரே என ஒரு கட்டத்தில் அலுப்பு தட்டுகிறது. அவர் என்ன செய்யவார்.. இயக்குநரைத்தான் சொல்ல வேண்டும்.

தவிர.. இவர்களை தம்பதிகளாக ஏற்கலாம்.. இளம் தம்பதி என்பது கொஞ்சம் ஓவர்தான்.

இவர்களை தவிர, நித்யா மேனன் பெற்றோர்களாக வரும்செம்பன் வினோத், ஜானகி, விஜய் சேதுபதி பெற்றோராக வரும் பருத்திவீரன் சரவணன் – தீபா, தங்கையாக வரும் ரோஷிணி என அனைவருமே சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

குறிப்பாக விஜய் சேதுபதியின் மச்சானாக வரும் மச்சனாக வரும் ஆர்.கே.சுரேஷ், மனதில் நிற்கிறார். மாப்பிள்ளையைப் பார்த்தாலே எரிச்சலும், கோபமும் கொப்பளிக்கும் கண்கள், அலட்சியமும் திமிருமான பேச்சு என்று ஈர்க்கிறார்.

அதே போல அவ்வப்போது வந்தாலும் காளி வெங்கட் ஈர்க்கிறார். இறுதியில் அவர் பேசுவது நெகிழ்ச்சி.

படத்துக்கு ரன்னிங் கமெண்ட் கொடுக்கும் கதாபாத்திரம் யோகிபாவுக்கு. அந்த கதாபாத்திரம் இல்லாமலேயே படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

சுகுமாரின் ஒளிப்பதிவு அற்புதம். ஓட்டல், வீடு, கோயில், கிராமம் என அனைத்தையும் பசேல் என கண்முன் நிறுத்தி இருக்கிறது. பாடல் காட்சிகளை கூடுதலாக ரசிக்க வைத்து இருக்கிறது.

சந்தோஷ் சிவனின் இசை, ஒரு கதபாத்திரமாகவே படம் முழுதும் ஓடி வருகிறது. பின்னணி இசை, பாடல் இரண்டும் ரசிக்கவைக்கின்றன.ஒரு இடைவெளிக்குப் பிறகு படத்தை இயக்கி இருக்கிறார் பாண்டிராஜ். அடிதடி, வெட்டுகுத்து, துப்பாக்கி, குண்டு என தமிழ்த் திரையுலகம் வேறு ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க.. தனது வழக்கமான பாணியில் அற்புதமான குடும்பக் கதையை அளித்து இருக்கிறார்.

குடும்பம், முட்டல் மோதல், பஞ்சாயத்து, அடிதடி என நிஜ மனிதர்களை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.

சில காட்சிகளும் மனதில் அப்படியே பதிகின்றன. உதாரணமாக நித்யா மேனன் ஆர்டர் எடுக்கும் காட்சி, முறைப்பெண் வந்து கிண்டலடித்துச் செல்லும் காட்சி ஆகியவற்றைச் சொல்லலாம்.

மொத்தத்தில் இந்த குடும்பக் கதையை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3.3/5