‘பராசக்தி’ தடை செய்ய வேண்டிய படமா? : பத்திரிகையாளர் டி.வி.சோமு

‘பராசக்தி’ தடை செய்ய வேண்டிய படமா? : பத்திரிகையாளர் டி.வி.சோமு

தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தித் திணிப்பு போராட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி இருக்கும் பராசக்தி படத்தை, தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறி இருக்கிறது.இக்கட்சியின் இளைஞர் பிரிவு, “அந்தப் படத்தில் வரலாறு என்கிற பெயரில் பல புரட்டுகளை சொல்லி இருக்கிறார்கள்” என தடை செய்ய காரணத்தைச் சொல்லி இருக்கிறது. அவர் கூறிய குற்றச்சாட்டுகளும், வரலாற்று உண்மையையும் பார்ப்போம்.

குற்றச்சாட்டு 1:

“1965ல், அனைத்து மாநிலங்களிலும் உள்ள தபால் அலுலகங்களில் இந்தியில் மட்டும் தான் படிவங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று காங்கிரஸ் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்டுக்கதை.”

உண்மை வரலாறு: 

“படிவங்கள் இந்தியில் நிரப்பப்பட வேண்டும்” என்று பராசக்தி படத்தில் காண்பிக்கப்படவில்லை. “படிவங்களில் இந்தி மட்டுமே இருந்தது. அதற்கு முன் படிவங்களில் இருந்த ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றை காணோம்” என்றுதான் காண்பிக்கப்பட்டு இருக்கிறது.

இது உண்மையே.

1963-1965 காலகட்டத்தில், அறிஞர் அண்ணாவின் நாடாளுமன்ற உரையைப் படித்தாலே இதைப் புரிந்துகொள்ளலாம். : “ஒரு தபால் அலுவலகத்திற்குச் செல்லும் சாதாரணத் தமிழன், தன் தாய்மொழியில் படிவத்தை நிரப்ப முடியாத நிலை இருப்பது ஜனநாயகமா?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.

ஆர். கண்ணன் “Anna: The Life and Times of C.N. Annadurai” என்ற தலைப்பில் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

இதில்,பெயர்ப் பலகைகள் மற்றும் படிவங்களில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதே மாணவர் எழுச்சிக்கு முக்கியக் காரணமாக  இருந்ததை சுட்டிக்காட்டி உள்ளார்.

அ.ராமசாமி எழுதிய “இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு” நூலிலும் இத்தகவல் உள்ளது.

இவர்கள் தமிழர்கள்… விடுங்கள்.

ராபர்ட் ஹார்ட்கிரேவ் ( Robert L. Hardgrave, Jr ) என்ற பிரபல ஆங்கில ஆய்வறிஞர், “The Riots in Tamilnad: Problems and Prospects of India’s Language Crisis” என்ற நூலை எழுதினார்.

அவரது புத்தகத்தில் (பக்கம் 14-16 பகுதிகளில்) இது குறித்து இவ்வாறு விவரிக்கிறார்:

“The sudden transformation of the post office—the most visible symbol of the central government—into a Hindi-speaking enclave alienated the common man. Forms that were once bilingual or trilingual suddenly became alien.”

தமிழாக்கம்: “மத்திய அரசின் மிக முக்கியமான அடையாளமாக விளங்கும் தபால் நிலையங்கள், திடீரென இந்தி பேசும் ஒரு தனித்தீவாக மாறியது சாமானிய மக்களை அந்நியப்படுத்தியது. முன்பு இருமொழிகளிலோ அல்லது மும்மொழிகளிலோ இருந்த படிவங்கள் திடீரென அந்நியமாகின. (இந்தி மட்டுமே இருந்தது)”

தவிர அன்றைய காலகட்டத்தில் வெளியான தமிழ், ஆங்கில நாளிதழ்கள், பருவ இதழ்களிலும் “தபால் அலுவலங்களில் முழுதும் இந்தி” என்ற செய்திகள், கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன.

குற்றச்சாட்டு 2 

“படத்தில் இரும்பு மங்கை இந்திரா காந்தி அவர்களை சிவகார்த்திகேயன் சந்தித்து பேசுவது போலவும் மாதிரியும், அதன் பின் இந்திரா காந்தி அவர்கள் வில்லத்தனமாக பேசும் வண்ணம் வசனங்களை வைத்துள்ளார்கள். அவர் இந்தித் திணிப்பில் தீவிரமாகவும் இல்லை.”

உண்மை வரலாறு: 

இந்திரா தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த 1964-1966 காலகட்டத்தில்தான் இந்தித் திணிப்பு நடவடிக்கைகள் வேகம் எடுத்தன.

அகில இந்திய வானொலியில் இந்திச் செய்திகளுக்கும், இந்திப் பாடல்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

இவரது அமைச்சகத்தின் கீழ் வந்த பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில், படிவங்கள் மற்றும் பெயர்ப்பலகைகளில் இருந்து தமிழை நீக்கிவிட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தை மட்டும் கொண்டு வரப்பட்டது.

1965 ஜனவரி 26 முதல் இந்தி, இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக மாறும் என்ற அரசியல் சாசன சட்டத்தை அமல்படுத்துவதில் அவர் மிகத் தீவிரமாக இருந்தார். அப்போது நேரு இறந்து, லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்புக்கு வந்து இருந்தார். அவரும் இந்தித் திணிப்பில் உறுதியாக இருந்தார். “இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்” என்ற நேருவின் வாய்மொழி வாக்குறுதியைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என அண்ணா கோரியபோது, சாஸ்திரி மட்டுமல்ல…இந்திரா காந்தியும் அதற்கு உடன்படவில்லை.

1965 ஜனவரியில் தமிழகத்தில் போராட்டம் வெடித்தபோது, அவர் உடனடியாகச் சென்னைக்கு விரைந்தார். ஆனால் அவரது அணுகுமுறை போராட்டத்தை அமைதிப்படுத்துவதை விட, இந்தியின் அவசியத்தை வலியுறுத்துவதாகவே இருந்தது.

“இந்தியா போன்ற ஒரு துணைக் கண்டத்தை இணைக்க ஒரு பொதுவான மொழி அவசியம். அந்தத் தகுதி இந்திக்கு மட்டுமே உண்டு” என்று அவர் மேடைகளில் பேசினார்.

போராட்டக்காரர்கள் மீது மாநில (பக்தவத்சலம் ) அரசு நடத்திய ஒடுக்குமுறைகளை அவர் ஒருபோதும் கண்டிக்கவில்லை. மாறாக, அது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்றே சித்தரித்தார்.

1967-ல் தமிழகத்தில் காங்கிரஸ் தோற்று, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்திரா காந்தி தனது உத்தியை மாற்றிக்கொண்டார்.

அலுவல் மொழி திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன் மூலமே ஆங்கிலம் ‘கூட்டு மொழியாக’ நீடிக்கும் என்ற உறுதிப்பாடு சட்டப்பூர்வமானது. இது அவரது “ஆர்வத்தால்” வந்ததல்ல, மாறாகத் தமிழகத்தின் “எதிர்ப்பால்” ஏற்பட்ட கட்டாயமாகும்.

ஆனாலும் இறுதிவரை, “இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை இணைக்க ஒரு பொதுவான மொழி தேவை, அந்த இடத்தைப் பெற இந்திக்கு மட்டுமே தகுதி இருக்கிறது” என்று அவர் பல மேடைகளில் வலியுறுத்தினார்.

தட்சண பாரத இந்தி பிரச்சார சபா போன்ற அமைப்புகளுக்கு மத்திய அரசின் நிதியுதவியையும், ஆதரவையும் இந்திரா காந்தி தொடர்ந்து வழங்கி வந்தார்.இன்னொன்றும் சொல்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில்… “12 பிப்ரவரி 1965 அன்று கோயம்புத்தூருக்கே வராத இந்திரா காந்தியை அங்கு வந்ததாக படமாக்கி அவர் கண் முன் ரயில் எரிந்து வந்து இந்தி திணிப்புக்கு எதிராக கையெழுத்து கொடுக்கும் காட்சி உள்ளது” என்கிறார்கள்.

படத்தில் சில காட்சிகளை சித்தரிக்கப்பட்டவை என குறிப்பிட்டு இருக்கிறார்கள். தவிர ஆரம்பத்திலேயே உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் புனையப்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளனர். இந்திரா சென்னைக்கு வந்தார். அதை கோவை என் காண்பித்து இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

மற்றபடி அவரும் அவர் சார்ந்த காங்கிரஸ் அரசும், இந்தித் திணிப்பில் தீவிரமாக இருந்தார்கள் என்பது வரலாறு. அதைத்தான் பராசக்தி படம் காண்பித்து உள்ளது.

குற்றச்சாட்டு 3

“காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட தமிழர்களை பொள்ளாச்சியில் சுட்டுக் கொன்றது என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லை!”

உண்மை வரலாறு:

1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன. இதில் பொள்ளாச்சி வன்முறை மற்றும் உயிரிழப்புகள் குறித்த வரலாற்றுத் தரவுகள் உண்டு.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போ ராட்டத்தில் தமிழகம் முழுவதும் மொத்தம் 70 முதல் 80 பேர் வரை உயிரிழந்ததாக அப்போதைய தமிழக அரசு பதிவு செய்துள்ளது. இதில், பிப்ரவரி 11-12  ஆகிய இரு தினங்களில் பொள்ளாச்சி சம்பவத்தில் 15 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் பதிவு செய்துள்ளது.

ஆகவே இது அரசு ஆவணம்.ராபர்ட் ஹார்ட்கிரேவ் எழுதிய அதே  “The Riots in Tamilnad: Problems and Prospects of India’s Language Crisis” என்ற நூலில் , The Riots in Tamilnad என்ற தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளார். அதில் பொள்ளாச்சியில் மட்டும் ஒரே நாளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்றும், அரசு பல உடல்களை ரகசியமாக அப்புறப்படுத்தியதாக வதந்திகள் பரவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,  “தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரு காங்கிரஸ் அரசு தன் சொந்த மக்கள் மீது ராணுவத்தைப் பாய்ச்சியது” என்று பதிவு செய்து உள்ளார்.

அதே போல, கி.வீரமணி எழுதிய “களத்தில் நின்ற காவலர்கள்” புத்தகத்தில் பொள்ளாச்சி சம்பவங்கள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“The Language War in Gujarat and Tamil Nadu” என்ற நூலை எழுதிய Mohan Ram பொள்ளாச்சியில் ராணுவம் மற்றும் காவல்துறையின் அராஜகம் குறித்துப் புள்ளிவிவரங்களுடன் விளக்கி உள்ளார்.

1965 மார்ச் மாதம் நடந்த சட்டசபை விவாதங்களில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பொள்ளாச்சி படுகொலை குறித்து முதல்வர் பக்தவத்சலத்திடம் எழுப்பிய கேள்விகள் முக்கியமான ஆவணங்களாகும்.

குற்றச்சாட்டு 4: 

“அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் போராட்டக்காரர்களிடம் மூர்க்கமாக படத்தில் காண்பித்து உள்ளனர். இது தவறு.”

உண்மை வரலாறு:

முதலமைச்சர் பக்தவச்சலம்,  மாணவர்கள் – மக்களினஅ போராட்டத்தை பேசித் தீர்க்க முயலாமல்,  சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே பார்த்தார். மாணவர்களை சந்தித்துப் பேசவே மறுத்தார். இரும்புக்கரம் கொண்டு அடக்கவே நினைத்தார்.தமிழக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பொள்ளாச்சி, குமாரபாளையம் எனப் பல இடங்களில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்பட்டது. இதில் அதிகாரப்பூர்வமாகவே சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர்.

போராட்டத்தை ஒடுக்க மத்திய ரிசர்வ் போலீஸ்  மற்றும் ராணுவத்தை வரவழைத்தார்.

போராடும் மாணவர்களை “ரவுடிகள்” என்றும், அவர்களை “தோலுரிப்பேன்” என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்தார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்குத் திமுகவினர் பிரியாணி கொடுத்துத் தூண்டிவிடுவதாக அவர் கூறியது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. “தமிழ் மொழிக்காகப் போராடும் எங்களை இழிவுபடுத்துகிறார்” என்று மாணவர்கள் வீதிக்கு வந்தனர்.  (இந்த பிரியாணி குறித்த வசனம், படத்தில் ஜெயம் ரவி சொல்வது போல வரும்.)

மற்றவர்களை விடுவோம்..  காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  அப்போது  மத்திய அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம்  தனது சுயசரிதையான “Hand of Destiny” நூலில், “பக்தவத்சலம் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதும், அவரது விட்டுக்கொடுக்காத பிடிவாதமுமே நிலைமையை மோசமாக்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய காலகட்டத்தில், சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பக்தவத்சலம், துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகளைத் தொடர்ந்து நியாயப்படுத்தியே பேசினார்.

குறைந்தபட்சம், துப்பாக்கிச் சூடுகள் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கக் கோரிய  கோரிக்கையையும் நிராகரித்தார்.

ஆக.. பராசக்தி படத்தை – எந்தக் காட்சிகளைக் குறிப்பிட்டு – தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கூறுகிறதோ.. அத்தனைக்கும் வரலாற்று ஆதரங்களு உண்டு.

இன்னும் இரண்டு குற்றச்சாட்டுக்களையும் பார்ப்போம்…

“இந்திரா காந்தி கோவைக்கு வரவில்லை..” என்கிறார்கள். அவர் சென்னைக்கு வந்ததை கோவை என படத்தில் காண்பித்து இருக்கிறார்கள். புனைவு படம் என்கிற போது இயல்புதான்.

அதே போல, “படத்தின் இறுதியில் காங்கிரஸ் தலைவர்கள் மீது ரயில் புகை படிவது போல காண்பித்து உள்ளனர்” என்கிறார்கள்.

இதற்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை.  1967லேயே மக்கள் சொன்னார்கள்.  இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.\

கடந்த 2014ல்தான் காங்கிரஸ் (தமிழ்நாட்டில்) தனித்து போட்டியிட்டது. அது பெற்ற வாக்கு 4.3% மட்டுமே!

கூடுதல் தகவல்:

அந்த காலகட்டத்தில், காங்கிரஸுக்கு நிகராக – அதைவிட அதிகமாகக்கூட –  இந்தி ஆதிக்கத்துக்கு ஆதரவாக நின்ற கட்சிகள்/ அமைப்புகள் உண்டு.அவற்றில் முக்கியமானது ஜனசங்கம்.

1963-ல் ஜவஹர்லால் நேரு, “இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்” என்று உறுதி அளித்ததை எதிர்த்தது. “சிறுபான்மையினரின் (தமிழர்களின்) விருப்பத்திற்காகப் பெரும்பான்மை மக்களின் மொழியான இந்தியைத் தள்ளிப்போடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று வாதிட்டது.

1965ல், தமிழகத்தில் திமுக மற்றும் மாணவர்கள் தபால் நிலையங்களில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்தபோது, அதற்குப் பதிலடியாக வடமாநிலங்களில் இருந்த ஜனசங்கத்தினர் ஆங்கிலப் பெயர்ப்பலகைகளை அழித்தனர்.

1967-ல் கொண்டுவரப்பட்ட அலுவல் மொழி திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. “இந்திரா காந்தி இந்திக்குத் துரோகம் செய்தவர்” என்று விமர்சித்தனர்.

அக்காலகட்டத்தில் ஜனசங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பால்ராஜ் மாதோக், “இந்தியை எதிர்க்கும் தமிழர்கள் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார்கள்” என்றார். இன்னொரு தலைவரான தீனதயாள் உபாத்யாயாவும் இதே தொணியில் பேசினார்.

இவர்களுக்கெல்லாம்.. அதாவது, ஜனசங்கத்தில் தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக இருந்தவர் யார் தெரியுமா… அல் பிஹாரி வாஜ்பாய்!

ஆம்.. அந்த ஜனசங்கம்தான், பாஜகவாக உருமாறியது.

நாடாளுமன்றத்தில், “இந்தியை உடனடியாக ஆட்சி மொழியாக்க வேண்டும்” என்று வாதிட்டார். 1967-ல் ஆங்கிலம் தொடர வழிவகை செய்யும் திருத்தச் சட்டம் வந்தபோது, அதனை எதிர்த்து வடமாநிலங்களில் போராட்டம் நடத்தினார்.

ஜனசங்கத்தின் உருமாற்றமான பாஜகவும் அதே நிலைபாடு கொண்டதுதான். மத்திய பாஜக அரசு, இந்தித் திணிப்பில் தீவிரமாக உள்ளது. இந்தி, சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி. தமிழுக்கு மிகக் குறைவு.

தவிர ‘புதிய கல்விக் கொள்கை’ மூலம் மும்மொழிக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த முயன்று வருகிறது. இதை ஏற்காத தமிழ்நாட்டுக்கு நிதி அளிக்க மறுக்கிறது.

மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் விருதுகளுக்கு இந்தி அல்லது சமஸ்கிருதப் பெயர்களை வைப்பதில் தீவிரமாக உள்ளது.

இந்தி மொழியை ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இணைக்க சர்வதேச அளவில் தூதரக ரீதியான முயற்சிகளை எடுத்து வருகிறது.

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில், அலுவல் பூர்வ கடிதப் பரிமாற்றங்களுக்கு ஆங்கிலத்திற்குப் பதில் இந்தியையே அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, , “பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆக.. இந்தித் திணிப்பில் காங்கிரஸும் பாஜகவும் ஒன்னு.. இதை அறியாதவன் வாயில் பான் பராக்!

– டி.வி.சோமு

Related Posts