“பெயில் ஆன நான் பாஸ் ஆனேன்!”: ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா தன்னம்பிக்கை பேச்சு!

“பெயில் ஆன நான் பாஸ் ஆனேன்!”: ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா தன்னம்பிக்கை பேச்சு!

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், “‘ரெட்ரோ’ திரைப்படம் மறக்க முடியாத அனுபவத்தை தரும்” என்றார்.

பாடலாசிரியர் விவேக்ல், ” சூர்யாவைப் பற்றி ஒரு பாடலில் சொல்ல வேண்டும்… ஆனால் நேரடியாக சொல்லாமல் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ‘ஒரு தீயில சொல்லெடுத்து ஒளி போடுற கையெழுத்து’ என சொல்லியாகிவிட்டது. ‘ வீரனாம் கர்ணனுக்கே அவ அப்பன்..’ எனும் வரிகளை எழுதியது மறக்க முடியாது. அவருடன் இணைந்து பயணித்ததில் பெரு மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ” முதல் முறையாக சூர்யா படத்தின் முன்னோட்டத்தில் பணியாற்றி இருக்கிறேன். சூர்யா நடித்த அன்புச்செல்வன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘பிதாமகன்’ பட சூர்யாவை பிடிக்கும். ரெட்ரோ படத்தில் அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்றார்.

நடிகர் சிவகுமார், ” சூர்யா, லயோலா கல்லூரியில் படித்து முடித்த பிறகு தனியார் கம்பெனியில் வேலை செய்தார்.
அந்தத் தருணத்தில் நாங்கள் ஒரு கலை விழா நிகழ்ச்சிக்காக மலேசியாவிற்கு சென்றோம். அப்போது இயக்குநர் வசந்தும் உடன் வந்தார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் வைத்து ஒரு முறை இயக்குநர் வசந்த் சூர்யாவை பார்த்திருக்கிறார்.

இரண்டு நாள் கழித்து இயக்குநர் வசந்த் எனக்கு போன் செய்து உங்க பையன் சூர்யாவிற்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறதா? என கேட்டார் இல்லை என்று நான் சொல்லிவிட்டேன். நான் அவரிடம் பேசலாமா? என கேட்டார். அதன் பிறகு இயக்குநர் வசந்த் சூர்யாவை நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடைபெற்றது. ‘நேருக்கு நேர்’ படம் வெளியானது. அதில் இடம்பெறும் ஒரு பாடலில் சூர்யாவின் குளோசப் காட்சி இருந்தது.

அந்த காட்சிகள் தெரிந்த சூர்யாவின் கண்களை பார்த்த இயக்குநர் ஒருவர், ‘இது தமிழ்நாட்டின் வாழும் பெண்களின் தூக்கத்தை கெடுக்கும்’ எனக் குறிப்பிட்டார்.

சினிமாவைப் பற்றி கனவில் கூட நினைக்காத சூர்யாவை இன்று நடிகராக உயர்த்திய இயக்குநர் மணிரத்னத்தையும், இயக்குநர் வசந்தையும் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

அதன் பிறகு இயக்குநர் பாலா, ‘நந்தா’ என்றொரு படத்தை கொடுத்து சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடனமாடுவார். அதன் பிறகு நான்கு மணிக்கு எழுந்து கடற்கரைக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சூர்யாவிற்கு முன் சிக்ஸ்பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை. தற்போது 28 வருடமாகிவிட்டது. இவரை உருவாக்கிய அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ” ரெட்ரோ எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது.  என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவர்களும் இல்லை. எல்லோரும் கெட்டவர்களும் இல்லை. அதனால் அதுபோன்ற கதாபாத்திரங்களை எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது.

‘இறைவி’ திரைப்படம் ரிலேஷன்ஷிப்பில் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதாக இருந்தது. பெண் என்பவள் எப்போதும் தன்னுடைய சுதந்திரத்தை ஏன் ஒரு ஆணிடம் ஒப்படைக்கிறார் என்ற கேள்வி என்னுடைய சின்ன வயதில் இருந்தே இருந்தது. ஒரு காதல் கதையை எழுத வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய வீட்டில் மனைவி கூட ஏன் எப்போதும் வன்முறையான படங்களை பார்த்துக் கொண்டே இருக்கிறாய்… எடுத்துக் கொண்டே இருக்கிறாய்…. ஒரு காதல் திரைப்படத்தை எடுக்க மாட்டாயா..? எனக் கேட்பார்.

‘ரெட்ரோ’ படத்தின் கதையை நான் பல வருஷத்திற்கு முன் எழுதினேன். நான் கதையை பற்றி முழுமையாக சொல்ல விரும்பவில்லை.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படத்தை நிறைவு செய்த பிறகு நானும் சூர்யா சாரும் சந்தித்தோம். நான் சூர்யா சாரின் ரசிகன். அவருடைய நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ என்னுடைய ஃபேவரைட்டான படம். அதன் பிறகு ‘நந்தா’, ‘காக்க காக்க’ படத்தை பார்த்த பிறகு சிறந்த நடிகர் என்பதை புரிந்து கொண்டேன். இவருடன் எப்படியாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என கனவு கண்டேன். ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் இணைந்தோம். இந்த திரைப்படம் ஏதோ ஒரு வகையில் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

படத்தின் படப்பிடிப்பை 90 நாட்கள் நடத்த திட்டமிட்டோம். ஆனால் 82 நாட்களில் தொடர்ச்சியாக பணியாற்றி நிறைவு செய்தோம். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் சூர்யா, ” ரெட்ரோ’ என்பது ஒரு காலத்தை குறிக்கிறது. நாம் கடந்து வந்த காலத்தை குறிப்பது. சினிமாவுக்கு வந்து 28 வருஷம் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். அந்த காலத்தை என்னால் மறக்க முடியாது. இந்த அழகான நினைவுகளை கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

சிறிது நாட்களுக்கு முன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்திருப்பேன். அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். இது நான் பிறந்த நாளில் சொன்ன வாக்குறுதி. நீங்கள் அனைவரும் உங்களைக் கடந்து மற்றவர்களுக்காக… நீங்கள் செய்த ஒரு காரியத்திற்காக … உங்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னிடம், ‘நீங்கள் நல்லா இருக்கீங்கல்லே.. ‘என உரிமையுடன் நலம் விசாரித்திருக்கிறீர்கள். அந்த அன்பு மட்டும்தான் என்னை தொடர்ந்து இயங்க செய்து கொண்டிருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் நீங்கள் அனைவரும் 20 வயதில் இருக்கிறீர்கள். என் மீது நீங்கள் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இந்த நாளை…. இந்த தருணத்தை… கொண்டாட வேண்டும் என்று இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். இந்த அன்பு ஒன்றே போதும்.. நான் எப்போதும் நன்றாகவே இருப்பேன். இங்கிருக்கும் தம்பிகளுக்கும் , தங்கைகளுக்கும் சொல்லும் ஒரே விசயம் இதுதான். அப்பா இந்த மேடையில் சொன்னது தான்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சப்ஜெக்ட்டில் மட்டும் தான் பாசானேன். பன்னிரண்டாம் வகுப்பிலும் எல்லா சப்ஜெக்டிலும் பெயில் ஆனேன். பப்ளிக் எக்ஸாமில் மட்டும்தான் பாஸானேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல். வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும். வாய்ப்புகள் வரும்போது அதை தவற விடாதீர்கள். வாழ்க்கையில் ஒரு முறை ..இரண்டு முறை அல்லது மூன்று முறை வாய்ப்பு கிடைக்கும். அதனைத் தவற விட்டு விடாதீர்கள். இந்த வயதில் எல்லோரும் ரிஸ்க் எடுக்கலாம்.‌ தவறில்லை. பேரார்வத்துடன் இருந்தால் மட்டும் போதாது. முழுமையான ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். எல்லோருக்கும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் வெற்றி பெறலாம்” என்றார்.

Related Posts