“என் வாழ்நாள் தலைவர் மேதகு பிரபாகரன் மட்டுமே!”: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

வ. கௌதமன் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம், ‘படையாண்ட மாவீரா’ . இத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘ ‘நிழல்கள்’ ரவி , உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைதது உள்ளார்.
இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வ.கௌதமன், ஈ. குறளமுதன், யு .எம். உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர்.
வன்னியர் சங்க தலைவராகவும், பா.ம.கட்சியின் முக்கிய பிரமுகராகவும் விளங்கிய, காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், ”இப்படத்தின் திரைக்கதையை முதலில் கௌதமன் என்னிடம் கொடுத்தார். தமிழ் தேசிய அரசியல் குறித்த பயணத்தை தொடங்கும் போது அண்ணன் கௌதமன் உள்ளிட்ட பலர் எனக்கு அறிமுகமானார்கள். எந்தவித பிரதிபலனும் இல்லாமல் தமிழக மக்களின் நலன்களுக்காக கௌதமன் களத்தில் இறங்கி போராடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்தப் படத்தின் திரைக்கதையை கொடுத்தவுடன் என் நிறுவனத்தின் கொள்கையை அவரிடம் தெரிவித்தேன். அதாவது எந்த சாதியை பற்றிய படத்தையும் நான் தயாரிப்பதில்லை என சொன்னேன். இருந்தாலும் அண்ணன் மீதான அன்பின் காரணமாக அந்த திரைக்கதையை முழுமையாக வாசித்தேன். நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு காடுவெட்டி குரு பற்றிய பிம்பம் வேறானதாக இருந்தது. மகாபலிபுரத்தில் அவர் பேசிய காணொலிகள் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டிருந்தன. அதனை பார்த்து நான் அவரை ஒரு சாதி தலைவராகத்தான் அவதானித்திருந்தேன். அவரைப் பற்றிய புரிதல் அவ்வாறானதாகவே இருந்தது.
இந்த திரைக்கதையை வாசித்தவுடன் இவர் உண்மையை எழுதி இருக்கிறாரா, அல்லது மிகைப்படுத்தி எழுதி இருக்கிறாரா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள என் நண்பர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். அவர்கள் காடுவெட்டி குருவைப் பற்றி உண்மையான வரலாறை சொல்ல சொல்ல எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஆனால் அவரைப் பற்றிய பிம்பம் இங்கு வேறு மாதிரியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதிக்கு பிறகு தான் தமிழர்கள் என்றால் யார், தமிழ் தேசியம் என்றால் என்ன என்பது குறித்த அரசியல் ரீதியான புரிதல் ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை மட்டுமல்ல என் வாழ்நாள் முழுவதும் தலைவர் என்றால் அது மேதகு பிரபாகரன் மட்டும் தான்.
காடுவெட்டி குரு பற்றிய வாழ்க்கையை படித்ததும் அவரைப் பற்றி எப்படியெல்லாம் தவறாக கட்டமைத்திருக்கிறார்கள் என வருத்தப்பட்டேன். இப்படி தமிழ் சமூகத்தில் மறைக்கப்பட்ட தலைவர்களின் வரலாறு ஏராளமாக இருக்கிறது.
இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். இந்த படம் சாதிய படம் அல்ல. காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு. ஒரு மனிதன் நேர்மையாக எப்படி வாழ்ந்திருக்கிறான் என்பதையும், நேர்மையாக வாழ்ந்ததற்காக அவன் எப்படி வஞ்சிக்கப்பட்டிருக்கிறான் என்பதையும், தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாத, தன் குடும்பத்திற்கு என்று எதுவும் விட்டுச் செல்லாத, தன் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவனை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதையும் கடந்து இப்படத்தில் இடம்பெறும் உரையாடல்களும், பின்னணி இசையும் படத்தின் பலம் என்றே சொல்வேன்,” என்றார்.