‘மெய்யழகனுக்கு’ முத்தம் கொடுத்த, ‘மெய்யழகன்’!”: சக்திவேலன் நெகிழ்ச்சி!

‘மெய்யழகனுக்கு’ முத்தம் கொடுத்த, ‘மெய்யழகன்’!”: சக்திவேலன் நெகிழ்ச்சி!

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்  பிரேம்குமார் இயக்க, கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்த  ‘மெய்யழகன்’ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிநடை படுகிறது.

இந்நிலையில்,  நன்றி &  வெற்றி விழாவை படக்குழு கொண்டாடியது.  அப்போது, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது, ” மெய்யழகன் படம் நிறைய மிக மெய்யழகன்களால் சேர்ந்து உருவாக்கப்பட்டது. நீங்கள் ஒரு வாழ்க்கையில் ஒரு அங்கமாக வாழ்க்கையை பார்த்தால் மட்டும்தான் இந்த மெய்யழகனை புரிந்து கொள்ள முடியும். மெய்யழகன் படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சிறப்பு காட்சி ஒன்றை திரையிட்டோம். அதில் படம் பார்த்தவர்களின் கருத்து, மனநிலை எப்படி இருக்கிறது என்று என்னிடம் சூர்யா அண்ணா கேட்டார்.

அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரித்து வரும் ஒரு தயாரிப்பாளரும் இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தார். அவர் என்னிடம் கூறும்போது நான் மூன்று படங்களை தயாரித்து வருகிறேன். அந்த அழுத்தம் காரணமாக என்னால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஆனால் இன்று மெய்யழகன் பார்த்ததும் இன்று இரவில் சென்று நிம்மதியாக தூங்குவேன். ஏனென்றால் மனிதர்கள் மேல் நம்பிக்கை வந்திருக்கிறது. மெய்யழகனை போல அட்லீஸ்ட் 20% ஆவது ஆக வேண்டுமென்றால் என்னவெல்லாம் சரி பண்ணிக்கொள்ள வேண்டும் என அந்த மெய்யழகன் கதாபாத்திரத்தை படம் பார்க்கும்போதே இன்ச் பை இன்ச் ஆக பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். என்னை திருத்திக் கொள்வதற்கும் அப்டேட் பண்ணுவதற்கும் முயற்சிப்பேன் என்று கூறினார்.

அவர் கூறியதை தான் நான் சூர்யா அண்ணனிடம் சொன்னேன்.

“2டியில் இது ரொம்ப ரொம்ப முக்கியமான படம். ஏற்கனவே உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும் என்ன மரியாதை இருக்கிறதோ அதற்கு மகுடம் சூட்டியது போல தான் இந்த படம் இருக்கும்” என்றேன். உடனே அவர் இடைமறித்து, “அது என்னய்யா உங்க கம்பெனி… நம்ம கம்பெனி என்று சொல்” என்று கூறினார்.. நான் ஆடிப் போனேன்!

கடைக்கோடியில் இருந்து சினிமாவுக்கு வந்த என்னை மிக உச்சத்தில் இருக்கும் அவர் இப்படி கூறியதை பார்க்கும்போது என் எதிரில் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு மெய்யழகனாகத்தான் சூர்யா அண்ணனைப் பார்க்கிறேன்.

தயாரிப்பாளர் ராஜா அண்ணனிடம் வந்து இதுபற்றி கூறியபோது, “அப்படியா, நீ நம்ம கம்பெனி என்று தானே கூறியிருக்க வேண்டும்” என அவரும் கூறினார். அந்த வகையில் அவர்தான் இரண்டாவது மெய்யழகன்.

பிரேம்குமார் அன்பை மட்டுமே நம்பி இந்த படத்தை பண்ணியிருக்கிறார். அப்படி ஒரு இயக்குனர் வரும்போது அவரை தலைமையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியது நம் திரைத்துறையில் இருக்கும் அனைவரின் கடமை. அதை அனைத்து பத்திரிகையாளர்களும் செய்திருந்தார்கள் அவரும் மெய்யழகன்.

அதே போல இப்படத்தில் நடித்த கார்த்தி, அரவிந்த் சாமியும் மெய்யழகன்கள்தான். இப்படி மெய்யழகன்களால் உருவான திரைப்படம்தான் மெய்யழகன்” என்றார், மெய்யழகன்களில் ஒருவரான சக்திவேலன்.

மேலும் நடிகர்கள் கார்த்தி, அர்விந்த்சாமி, தயாரிப்பாளர் ராஜசேகர், இயக்குனர் பிரேம்குமார் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் மாவீரன் சிலை ஒன்றையும் பரிசளித்தார் சக்திவேலன்.

இயக்குநர் பிரேம்குமாருக்கு சிலையை அன்பளிக்கும்போது, நெகிழ்ந்துபோய் அவருக்கு முத்தம் கொடுத்தார் சக்திவேலன்.

மெய்யழகன்களால் ஆனது மெய்யழகன் படக்குழு என்பது உண்மைதான்!

Related Posts