’குடிமகான்’ திரைப்பட விமர்சனம்

வங்கி ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் விஜய் சிவன், மது அருந்தாமலேயே போதையாகும் வினோத நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது குளிர்பானங்கள், துரித உணவு, நொறுக்குத்தீனி போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டால் நாயகன் விஜய் சிவனுக்கு ஒரு ஃபுல் அடித்தது போல் போதை தலைக்கு ஏறிவிடும்.
மது அருந்தும் பழக்கம் இல்லாத விஜய் சிவன், இப்படி ஒரு அதிசயமான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதோடு, இதனால் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றில் மாட்டிக்கொள்ள, அதில் இருந்து எப்படி மீள்கிறார், என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘குடிமகான்’ படத்தின் மீதிக்கதை.
விஜய் சிவனின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, நடுத்தர குடும்பத்து பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, மது அருந்தினாலும் அலப்பறை செய்யாமல் இருக்க வேண்டும், என்று மகனுக்கு பாடம் எடுப்பது முதல், இரண்டாவது திருமணம் செய்வது வரை தனது பங்கிற்கு நகைச்சுவை ஏரியாவில் விளையாடியிருக்கிறார்.
நமோ நாராயணின் கூட்டணி நகைச்சுவை காட்சிகள் சிரிப்பு சரவெடியாக வெடிக்க, இவர்களுடன் லவ்லி ஆனந்த், சேதுராமன், பாவாடை ராஜனாக நடித்திருக்கும் டென்னிஸ் ஆகியோர் சேர்ந்ததும் சிரிப்பு சரவெடி, சிரிப்பு அணுகுண்டாக மாறிவிடுகிறது.
மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி இயல்பாக இருப்பதோடு, லைவான லொக்கேஷன்களில் காட்சிகளை படமாக்கி படத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்.
தனுஜ் மேனனின் இசையில் பாடல்கள் ஆட்டமும், தாளமும் போட வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும், காமெடி காட்சிகளுக்கு ஏற்றபடியும் அமைந்திருக்கிறது.
ஸ்ரீகுமாரின் நகைச்சுவை எழுத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் பிரகாஷ்.என், நாயகனின் வினோதமான நோயை கையாண்ட விதமும், அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக நகர்த்திய விதமும் படத்தை ரசிக்க வைப்பதோடு, வயிறு வலிக்க சிரிக்கவும் வைக்கிறது.
விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட ஹீரோவின் அலப்பறைகள் சில இடங்களில் செயற்கைத்தனமாக இருப்பதோடு, முதல் பாதி படம் மிக மெதுவாக நகர்ந்து நம்மை சலிப்படைய செய்தாலும், இரண்டாம் பாதியில் அப்படியே கதையை மாற்றி, காட்சிகளில் காமெடி டோசை ஓவராக கொடுத்து நம் சோர்வை எனர்ஜியாக மாற்றிவிடுகிறார் இயக்குநர் பிரகாஷ்.என்.