விமர்சனம்: டி 3

பீமாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவன சார்பில் மனோஜ் எஸ். தயாரிக்க, பாலாஜி இயக்கி உள்ள திரைப்படம் டி 3. பிரஜீன், வித்யா பிரதீப், காயத்ரி, யுவராஜ், சார்லி,ராகுல் மாதவ், மேத்யூ வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
பணி மாறுதலில் குற்றாலம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்கிறார் இன்ஸ்பெக்டர் பிரஜீன். அவரது லிமிட்டில் இளம்பெண் ஒருவல் லாரி மோதி மரணமடைகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் பிரஜீனுக்கு, தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், நூற்றுக்கணக்கான சாலை விபத்துகள் நடந்துள்ளது தெரியவருகிறது.
ஆகவே ஒட்டுமொத்தமாக – பழைய வழக்குகளையும் – கிளற ஆரம்பிக்கிறார். அப்போது துவங்கும் பரபரப்பு – திகில் காட்சிகள், கிளைமாக்ஸ் வரை தொடர்கின்றன.நாயகன் பிரஜீன் சிறப்பாக நடித்து உள்ளார். காவல் அதிகாரியாக கறார் காட்டுவது, உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போராடுவது, மனைவி மரணத்தைக் கண்டு அலறுவது.. என தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து உள்ளார். அதே போல டாக்டராக வரும் ராகுல் மாதவ் அசத்தல் நடிப்பு. மற்றவர்களும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
க்ரைம் படத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவு. பி.கே.மணிகண்டனுக்கு பாராட்டுகள்.
ராம்போ விமல் அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் சிறப்பு.
ஆபாச, ரத்தக்களறி காட்சிகள் இன்றி, அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லரை தர முடியும் என்பதை நிரூபித்து உள்ளார் இயக்குநர் பாலாஜி.
வாழ்த்துகள்.