புஷ்பா 2: திரை விமர்சனம்

புஷ்பா 2: திரை விமர்சனம்

2021-ல் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆன படம் ‘புஷ்பா’. அதே நேரம், படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களுக்கும் குறைச்சல் இல்லை.

இந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது.

இது எப்படி இருக்கிறது?

முதல் பாகம் நிறைவடைந்ததில் இருந்து இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் அழித்து, செம்மரக் கடத்தலில் ‘கிங்’காக கோலோச்சுகிறார் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்). அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி (ராஷ்மிகா) முதல் பாகம் போவே, ‘சாமி சாமி’ காதலை கொட்டுகிறார்… அடிக்கடி படுக்கை அறைக்கு இழுத்து காமத்தை கொட்டுகிறார்.

இது வீட்டுக்குள் புஷ்பாவுக்கு நடக்கும் பிரச்சினை.  வெளியே அவருக்கு மூன்று பிரச்சினைகள் இருக்கின்றன.புஷ்பாவால் நேர்ந்த அவமானத்தை தாங்கமுடியாமல் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்).

தன்னை அவமானப்படுத்திய ஆந்திர முதல்வரை (ஆடுகளம் நரேன்) பதவியில் இருந்து நீக்க நினைக்கிறார் புஷ்பா.

புஷ்பாவின் அப்பாவின் முதல் மனைவி குடும்பத்தினர், தொடர்ந்து அவமானப்படுத்துகின்றனர்.

இந்த மூன்று விவகாரங்களிலும் புஷ்பா வென்றாரா என்பதே, மூன்ன்ன்ன்ன்ன்ன்றேகால் மணி நேர கதை.

தமன் – சாம் சி.எஸ் இசை. பாடல்கள் ஓகே. அதே நேரம், “ஓ சொல்றியா…” போலவே இதிலும் ஒரு அபத்தபாடல். பின்னணி இசை அங்கங்கே காதை துளைக்கிறது.

ஒளிப்பதிவு சிறப்பு.

படத்தில் தனியாக காமெடி காட்சிகள் இல்லாத குறையை, சண்டைக் காட்சிகள் போக்குகின்றன.

யாராவது (!) அணுகுண்டு வீசினால் கூட, அதை கையிலே கவ்வி ஸ்டைலாக வசனம் பேசி தூக்கி எறிவார் போல அல்லு அர்ஜூன். அதுவும், கை கால் கட்டப்பட்ட நிலையில் வாயாலேயே எதிரிகளை கவ்வி சண்டை போடுவது… யப்பா!

முதல் பாகத்தில் எதெல்லாம் ரசிகர்களை கவர்ந்தது என படக்குழு நினைத்துக்கொண்டார்களோ..  அவற்றை எல்லாம் சேர்த்து அவியலாக்கி இரண்டாம் பாகம் கொடுத்து இருக்கிறார்கள். தவிர ஆரம்பத்தில் வரும் சண்டைக் காட்சி ஜப்பானில் நடக்கிறது என்கிறார்கள். ஆந்திர துறைமுகம்போல் தெரிகிறது.

வில்லனை நாயகனாக்கும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அதில் முக்கியமானது புஸ்பா.

– டி.வி.சோமு

Related Posts