இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டிய ஒன்றிய தலைமை அமைச்சர் நரேந்திரர்!

‘இளையராஜா சிம்பொனி இசைத்து, புதிய சரித்திரம் படைத்துள்ளார்’ என்று ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி புகழாரம் சூட்டி இருக்கிறார்.
சமீபத்தில் லண்டனில் மேற்கத்திய சிம்பொனி இசை அரங்கேற்றம் நடந்தது. இதை செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா பெற்றிருந்தார். இந்நிலையில் டில்லியில் பிரதமர் மோடியை இளையராஜா சந்தித்தார். அவரிடம், சிம்பொனி இசைத்தது பற்றி பிரதமர் மோடி ஆர்வத்துடன் விசாரித்தார்.இது குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது. அவருடன் பேசியபோது, சிம்பொனி வேலியண்ட் உள்ளிட்ட பல கருத்துக்கள் குறித்து பேசினோம். அவருடைய அன்பும், ஆதரவுக்கும் நான் தலை வணங்குகிறேன். இவ்வாறு இளையராஜா கூறி உள்ளார்.
சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
ராஜ்யசபா உறுப்பினரான இசை மேதை இளையராஜாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது இசை மற்றும் கலாசாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். லண்டனில் சில நாட்களுக்கு முன், ‘வாலியன்ட்’ என்ற பெயரில் மேற்கத்திய சிம்பொனியை இசைத்து சரித்திரம் படைத்துள்ளார். உலகப்புகழ் பெற்ற ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அவரது ஈடு இணையற்ற இசைப்பயணத்தில் இது ஒரு பெருமைக்குரிய அத்தியாயம்.இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.