“அறிமுகப்படுத்தல.. கதை கேட்கல!”: ‘பேரன்பும் பெருங்கோபமும்’ பட விழாவில் தங்கருக்கு பாராட்டு!

‘இ 5′ என்டர்டெயின்மென்ட்’ காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவப்பிரகாஷ் இயக்கத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் மகன் விஜித் நடிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், சீமான் (நா.த.க), சினேகன், கரு.பழனியப்பன், வசந்தபாலன், தேவயானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், “படம் பார்த்துவிட்டேன். பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவர் என்பதை அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் நிரூபித்து இருக்கிறார். தனது மகன் விஜித்தை தங்கர் பச்சான் தான் அறிமுகப்படுத்தவதாக படம் எடுத்தார். ஆனால் காலம் இந்த படத்தின் மூலமாக அவரை அறிமுகப்படுத்த வைத்திருக்கிறது. இதுவே அவருக்கு கிடைத்த முதல் வெற்றி. ஒரு புதுமுக நடிகருக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அமைவது என்பது பெரிய விஷயம். இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் விஜித்” என்றார்.
இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர், “தங்கர் பச்சானின் படங்களை திரைப்படங்களாக இல்லாமல் காவியங்களாக தான் நான் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர் தன் பையனை அறிமுகப்படுத்த நினைக்கும் போது அவரை நிறைய செதுக்க வேண்டும். அந்த பொறுப்பை இன்னொரு இளைஞரிடம் ஒப்படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நான் கூட அதைத்தான் நினைத்தேன் நடக்கவில்லை. 90களில் நான் பிஸியாக இருந்தபோது என் மகன் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட சமயத்தில் நாமே டைரக்ட் செய்தால் நன்றாக இருக்காது நினைத்து விஜய்யின் ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குநர்களிடம் போய் நின்றேன். ஆனால் தாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரி தான்.. நீங்களே டைரக்ட் செய்யுங்கள் என்றார். வேறு வழியின்றி நானே அந்த படத்தை இயக்கினேன்” என்றார்.இயக்குநர் ஆர்.வி உதயகுமார், ” இன்று ஒரே படம் போல பத்து படம் வெளியே வருகிறது. இப்போதைய படங்களில் அழகியல் என்பது வருவதில்லை. ஒரு காலத்தில் மிக தரமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பெயர் பெற்ற ஹீரோக்கள் எல்லாம் இன்று கமர்சியல் என்கிற வட்டத்திற்குள் புகுந்து விட்டார்கள். இந்தப் படத்தின் கதையைக் கேட்தில் தங்கர் பச்சான் தலையிடவில்லை என்று விஜித் சொன்னார். அப்படி என்றால் நீ ஜெயித்து விட்டாய்” என்றார்.
இயக்குநர் சுசீந்திரன், “சில திரைப்படங்கள் வெற்றியடையும்போது வியாபார ரீதியாக சினிமா நன்றாக இருக்கும். ஒரு படைப்பாளனாக சிவப்பிரகாஷ் மாதிரியான இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் வெற்றி அடையும்போது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். நான் மகான் அல்ல, பாண்டியநாடு போன்ற பழிவாங்கும் திரைப்படங்களை நான் பண்ணி இருந்தாலும், இந்த பேரன்பும் பெருங்கோபமும் படத்தில் பழிவாங்கும் தன்மை, கிளைமாக்ஸ் என்னை உலுக்கி விட்டது. இதுவரை அப்படி ஒரு கிளைமாக்ஸ் நான் பார்த்ததில்லை” என்றார்.
நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், “சுசீந்திரன் போன்ற திறமையான இயக்குநர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு அதன் கிளைமாக்ஸ் பற்றி இவ்வளவு சிலாகித்து பேசும்போது இந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே ஏற்படுகிறது. இதுதான் மக்களுக்கு பிடிக்கும் என இடையில் இருப்பவர்கள் முடிவு செய்யாமல் எல்லா படங்களையும் மக்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அதை உருவாக்க முடிந்தால் மிகப்பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.
நடிகை தேவயானி, “விஜித்தை சின்ன குழந்தையில் இருந்து பார்த்து வருகிறேன். அவரது தம்பி குழந்தையாக நட்சத்திரமாக அழகி படத்தில் என்னுடன் நடித்திருக்கிறார். இப்போது அண்ணன் கதாநாயகனா மாறி இருக்கிறார். தங்கர் பச்சான் சாருடன் காதல் கோட்டையில் துவங்கி எத்தனையோ நல்ல நல்ல படங்கள் நான் பணியாற்றி இருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
இயக்குநர் வசந்தபாலன், “இயக்குநர் தங்கர் பச்சானின் படங்களை பார்த்து வியந்து இருக்கிறேன் என்னுடைய அங்காடித்தெரு, வெயில் படங்களை பார்த்துவிட்டு வீடு தேடி வந்து என்னை பாராட்டினார். தங்கர் பச்சனின் படங்கள் மீது மக்கள் கொண்ட பேரன்பு விஜித்துக்கு வாழ்த்துக்களாக கைமாறும் என நம்புகிறேன். தீண்டாமை பெருங்குற்றம் என்று தான் சொல்கிறோமே தவிர தீண்டாமையை உருவாக்குகிற ஜாதியை பெரும் குற்றம் என்று சொல்வதில்லை. இது முழுவதுமாக அழியும் வரை இதுபோன்ற படைப்புகளை கொடுத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்” என்றார்.
நாயகன் விஜித், “இந்த படத்தில் ஒரு பங்காக இருப்பதை நானும் பெருமையாக நினைக்கிறேன். இந்த படத்தில் நான் என்ன அனுபவித்தேனோ, படம் பார்க்கும்போது நீங்களும் அதை அனுபவிப்பீர்கள். துரோகம், வலி, வெறுப்பு, ஏமாற்றம் எதையும் பார்க்காமல் வளர்ந்த பையன் நான். ஆனால் இந்த படம் எனக்கு அதை எல்லாம் கற்றுக் கொடுத்தது. தனிமைக்கும் சத்தம் இருக்கிறது என்பதை இந்த பேரன்பும் பெருங்கோபமும் படம் எனக்கு கற்றுக் கொடுத்தது. நான் தனிமையாக இருக்கும் போது இந்த ஜீவா கதாபாத்திரம் என் கூடவே இருந்தது. நடிப்புக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை இந்த கதாபாத்திரம் என் மீது ஏறும்போது பார்த்தேன். நான் சாமியை எல்லாம் பெரிதாக நம்புபவன் அல்ல. ஏதோ ஒன்று நடந்தது. இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் பொருந்துகிற மாதிரி நான் இந்த படத்தில் பயணித்தேன். இசைஞானி இளையராஜா சார் இந்த படைப்பிற்கு உயிர் கொடுத்திருக்கிறார்” என்றார்.
நாயகி பேசும்போது, “இந்தக் கதை குறித்து இயக்குநர் சிவப்பிரகாஷ் என்னிடம் சொன்ன அந்த காட்சி இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. இந்த கதை ஏதோ ஒரு தாக்கத்தை எனக்குள் உருவாக்கியது. கொஞ்ச நாள் சாராவாக வாழ்ந்துபார்ப்போமே என்கிற எண்ணம் ஏற்பட்டது. என் பெற்றோருக்கு நடந்தது கலப்பு திருமணம் தான். அப்பா மலையாளம்.. அம்மா தமிழ்.. என் அம்மா சொன்னதை வைத்து எல்லா கலப்பு திருமணங்களிலும் இருப்பது போன்ற சிறு மனக்கசப்பு என் அம்மாவிற்கு இருப்பதையும் தெரிந்து கொண்டேன்.
ஆனால் அவர்கள் எனக்கு பாலூட்டி வளர்த்ததுடன் பாரதியின் வரியையும் ஊட்டியே வளர்த்திருக்கிறார்கள். ஓடி விளையாடு பாப்பா பாடலில் குழந்தை, அம்மா, பிற உயிர்கள், தேசம், தமிழ் என எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசியில் சாதிகள் பற்றியும் சொல்லி இருப்பார். பாரதியின் இந்த வரிகள் என் மனதில் வளரும் பருவத்தில் என்னிடம் உண்டாக்கிய தாக்கத்தை போல, பேரன்பும் பெருங்கோபமும் படம் கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் ஏதாவது ஒரு விஷயத்தை விதைக்கும். சில கேள்விகளை எழுப்பவும் வாய்ப்பு உண்டு. இந்த படத்தில் சாராவாக நான் வாழ்ந்தபோது நிறைய சிரித்தேன்.. கொஞ்சம் அழுதேன்.. ரொம்ப வலியை அனுபவித்தேன்.. அதெல்லாம் நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன்” என்றார்.