தமிழ் நடிகர் கார்த்தியை மிரட்டி மன்னிப்பு கேட்கவைத்த பவன் கல்யாண் படம் இன்று ரிலீஸ்!

தமிழ் நடிகர் கார்த்தியை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த, ஆந்திர நடிகரும் அம்மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் நடித்துள்ள ஹரிஹர வீரமல்லு திரைப்படம் இன்று தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் வெளியாகிறது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம், கார்த்தி நடித்த, மெய்யழகன் திரைப்படம் உருவானது. இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, சத்யம் சுந்தரம் என்ற பெயரில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் வெளியானது.
இதையடுத்து ஐதராபாத் நகரில் நடைபெற்ற பட பிரமோசன் நிகழ்வில் கார்த்தி கலந்துகொண்டார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர், லட்டு கு தொடர்பான ஒரு மீம்-ஐ பகிர்ந்துவிட்டு “உங்களுக்கு லட்டு வேண்டுமா?” என கார்த்தியை பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டார். கார்த்தியும் “இங்கு லட்டு குறித்து பேச வேண்டாம். அது மிகவும் உணர்ச்சிகரமான விஷயமாக இருக்கிறது. லட்டு வேண்டாம்.. இந்த டாபிக்கையே தவிர்த்து விடலாம்” என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
அதாவது, திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டுகளில் விலங்கு மாமிசம் கலந்துள்ளதாக சர்ச்சை எழுந்த நேரம் அது.
இதைத் தொடர்ந்து தெலுங்கு நடிகரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், “சினிமா நிகழ்வு ஒன்றில் லட்டுவைக் கிண்டலடித்துள்ளார்கள். லட்டு சென்சிடிவ் விஷயமாம்.. இதற்குக் கூட பதில் சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லையா அப்படி ஒருபோதும் சொல்லாதீர்கள்.. Don’t ever try dare to say that. நடிகர்களாக அவர்கள் அனைவருக்கும் நான் மரியாதை கொடுக்கிறேன்.. ஆனால் சனாதான தர்மம் என வரும்போது பேசுவதை ஒருமுறைக்கு நூறுமுறை யோசித்து பேச வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
அடுத்து, நடிகர் கார்த்தி தன் எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்தார்.
அதில், ”அன்புள்ள பவன் கல்யாண் சார், உங்கள் மேல் உள்ள அளவுகடந்த மரியாதையோடு இதை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்பாராதவிதமாக தவறான புரிதல் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நான் வருத்தம் கேட்டுக்கொள்கிறேன். நானும் வெங்கடேசப் பெருமானின் பக்தன் என்ற முறையில் எப்போதும் நம் பாரம்பரியத்தை கடைபிடிப்பேன்” என்று பதிவிட்டார்.
அதே நேரம், “லட்டு குறித்து ஆங்கர் தொடர்ந்து வலியுறுத்தியபோதும், அது ஒரு முக்கியமான விஷயம் என்று கூறி பேச மறுத்தார் கார்த்தி. இதை ஏன் பவன் கல்யாண் பிரச்சினை ஆக்குகிறார்” என்று பலரும் கண்டித்தனர்.
இந்த நிலையில்தான், பவன் கல்யாண் நடித்த, ஹரிஹர வீரமல்லு என்கிற தெலுங்கு படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இன்று வெளியாகிறது.