பராசக்தி: திரை விமர்சனம்

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கும், பீரியட் படம். 1937, 1965 ஆண்டுகள் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கி பிரமிக்க வைத்து இருக்கிறார்கள்.

1959-ம் வருடம்….

ரயில்வே துறை வேலைகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் விளம்பரப்படுத்தப் படுகிறது. இதனால் இந்தி தெரியாத மக்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என கடும் எதிர்ப்பு ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து புறநானூற்றுப் படை என்கிற ரகசிய அமைப்பை உருவாக்குகிறார்கள். இந்தித் திணிப்பு மீதான எதிர்ப்பை வெளிப்படுத்த, ஒரு ரயிலை எரிக்கிறார்கள்.

இதைத் தடுக்க.. அதே ரயிலில் பயணிக்கும் மத்திய அரசின் காவல் அதிகாரி ரவி மோகன் முயல்கிறார். முடியாமல் போவதோடு, தனது கை விரலையும் இழக்கிறார். இதனால் அரசிடம் அவருக்கு கெட்ட பெயர்.

அந்த ரயில் எரிப்பு சம்பவத்தில், செழியனின் நண்பன் பலியாக… போராட்டத்தில் இருந்து விலகுகிறார் செழியன். தனது பாட்டி (குலப்புள்ளி லீலா) , தம்பி சின்னதுரை (அதர்வா) ஆகியோருடன் அமைதியாக வாழ விரும்புகிறார். அப்பா இறந்துவிட, அவரது ரயில் துறை வேலை (எஞ்சினில் கரி அள்ளி போடுவது) கிடைக்கிறது.1964-ம் ஆண்டு, இந்தித் திணிப்பு மீண்டும் உக்கிரமாகிறது. இதை எதிர்த்து செழியனின் தம்பியான கல்லூரி மாணவர் சின்னதுரை தலைமையிலான மாணவர்கள் போராட துவங்குகிறார்கள். இதைத் தடுக்கிறார் செழியன்.

ஆனால் ஒரு கட்டத்தில் செழியன் மீண்டும் புறநானூறு படையுடன், இந்தித் திணிப்பை எதிர்த்து களம் இறங்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இல்லை.. இல்லை.. நிஜம்!

ஜாலி பாய் இமேஜை, அமரன் படத்திலேயே கடந்துவிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் இதில் அந்தப் படத்தைவிடவும் சிறப்பான கதாபாத்திரம். அதை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

அதிகாரத்திற்கு எதிரான இளைஞனின் ஆக்ரோஷத்தை அனலாக வெளிப்படுத்தி இருக்கிறார், தம்பி மீது காட்டும் பாசம், காதலியிடம் வெளிப்படுத்தும் நேசம் என ரசிக்க வைக்கிறார்.ஜெயம் ரவிக்கு வித்தியாசமான.. வில்லத்தனம் மிகுந்த வேடம். தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்ற மன அழுத்தத்தை இறுக்கமான தனது முகபாவத்தில் எப்போதும் வெளிப்படுத்துகிறார். உடல் மொழி, வாய்ஸ் மாடுலேசன் என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டி அசத்தி இருக்கிறார்.

நாயகனை சுற்றிச் சுற்றி வரும் காதலியாக – வழக்கமான ஹீரோயினாகத்தான் – ஆரம்பத்தில் வருகிறார் ஸ்ரீலீலா. ஆனால் பிறகு அவர் வெளிப்படுத்தி இருக்கும் பொது நோக்கம்… அதிரடி.. என அசத்தி இருக்கிறார்.

பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா, முதலமைச்சராகவரும் பிரகாஷ் பெலவாடி, பேரறிஞர் அண்ணாவாக சேத்தன் உள்ளிட்ட அனைவருமே சரியான தேர்வு. சிறப்பாக நடித்து உள்ளனர்.

ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். போராட்டம் நடக்கும் இரவு நேர காட்சிகள், ரயிலில் நடக்கும் சண்டைகள் உள்ளிட்ட காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

முன் பாதியில் வரும் காதல் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி வைத்திருக்கலாம் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. மற்றபடி உணர்ச்சிகரமான காட்சிகளை.. சண்டைக் காட்சிகளை அவர் அளித்திருக்கும் விதம் சிறப்பு.ஜி.வி. பிரகாஷ் குமார் இசை வழக்கம் போல, படத்தை இன்னொரு தளத்தில் உயர்த்தி நிறுத்துகிறது. ‘நமக்கான காலம்’, ‘ரதன்மாலா’, ‘சேனைக் கூட்டம்’ பாடல்கள் ரசிக்க, உற்சாகமூட்ட வைக்கின்றன. பரபர காட்சிகளுக்கு ஏற்ற அதிரடி இசை… காதல் காட்சிகளுக்கு மெலோடி இசை என வழக்கம்போல தனது வித்தையை காண்பித்து இருக்கிறார்.

அந்தக் காலத்திய ரயில் நிலையங்கள், ரயில்கள், அரசுக் கட்டடங்கள், சைக்கிள், ஸ்கூட்டர், உடைகள், மாப்பிள்ளை விநாயகர் சோடா, சினிமா போஸ்டர்கள், என கலை இயக்குநர் எம். ஆர். கார்த்திக் ராஜ்குமாரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

சண்டைக் காட்சிகள் விறு விறு.

வெறும் தகவல் தொகுப்பாக இல்லாமல், காதல், பாசம், நட்பு என பல்வேறு உணர்வுகளுக்குள், ஒரு போராட்ட களத்தை சொல்லி இருப்புத இயக்குநர் சுதா கொங்குராவின் திறமையை வெளிப்படுத்துகிறது.

இந்தி திணிப்பு காரணமாக, இதர மொழி பேசியவர்களுர்ரு ஏற்படும் துயரங்கள், அதிகார வர்க்கத்தின் கொடூர தாக்குதல்கள்,மாணவர்களின் எழுச்சி ஆகியவற்றை மனதில் பதியும்படி சொல்லி இருக்கிறார்.அறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், ‘அண்ணா… அண்ணா..’ என அவரை நினைவூட்டியிருப்பது, பொள்ளாச்சியில் நடந்த கொடூர சம்பவத்தை பதிவு செய்து இருப்பது, இந்தித் திணிப்பின் ஆபத்தை சொல்லி இருப்பது என இது வெறும் கமர்சியல் படமல்ல.. அறிய வேண்டிய பாடம் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

இந்த ‘பராசக்தி’ ரயிலில் அனைவரும் பயணித்து, கடந்த கால போராட்டத்தை அறிய வேண்டும்.

ரேட்டிங்: 4.3/5

Related Posts