“மெரினாவில் மாட்டுக்கறி/ பன்றிக்கறி வேண்டும்!”: அரசுக்கு பா.ரஞ்சித்தின் நீலம் மையம் கண்டனம்!

“சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை புறக்கணிக்கணிப்பது ஏன்… அங்கு பன்றி இறைச்சியும் வேண்டும்!” என்று பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது. இத்திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநித ஸ்டாலின் துவக்கி வைத்தார் இது டிசம்பர் 24 வரை நடைபெறும்.தமிழ்நாடு முழுவதும் உள்ள 65 சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து 35 அரங்குகளை அமைத்துள்ளனர். இங்கு 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரித்து வழங்குகின்றனர்.
இதில் கோவை கொங்கு மட்டன் பிரியாணி, நீலகிரி ராகி களி, வெண்டைக்காயுடன் கூடிய நீலகிரி ராகி களி, நாமக்கல் பள்ளிபாளையம் சிக்கன், மயிலாடுதுறை இறால் வடை, சென்னை தாஹிப்பூரி, கன்னியாகுமரி பழம் பொறி, மதுரை கறி தோசை, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், தருமபுரி ரவா கஜூர், சிவகங்கை மட்டன் உப்புக்கறி, விருதுநகர் கரண்டி ஆம்லெட், போன்ற உணவு வகைகள் உள்ளன.அரியலூர் வறுத்த முந்திரி, தென்காசி தேன் நெல்லி, சென்னை கடலை மாவு லட்டு, திருச்சி மணப்பாறை முறுக்கு, செங்கல்பட்டு நாட்டுச்சர்க்கரை எள்ளுருண்டை, கோவை பீட்ரூட் மால்ட் பொடி, மதுரை தொத்தல், தருமபுரி குதிரைவாலி ரோஸ் லட்டு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, நீலகிரி ஸ்ட்ராபெர்ரி ப்ளூபெர்ரி, திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட 67 ரெடி-ஈட் பொருட்கள் ஆறு அரங்குகளில் கிடைக்கின்றன.
மேலும் இந்த உணவுத் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45 வகையான கைவினைப்பொருட்கள் மூன்று ஸ்டால்களில் கிடைக்கும்.
அரங்குகள், மதியம் 12:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். அனுமதி இலவசம்.
உணவுத் திருவிழாவுக்கு வரும் மக்கள், தங்கள் வாகனங்களை சென்னைப் பல்கலைக் கழகம், லேடி விலிங்டன் கல்லூரி, ராணி மேரி கல்லூரி வளாகங்களில் இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்.இந்த நிலையில், பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், “மெரினா உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறி உணவு புறக்கணிக்கப்பட்டது ஏன்” என்று அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, அந்த மையத்தின் ட்விட்டவர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
” சென்னை_மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன?பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள்; ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம்பண்பாட்டுமையம் வன்மையாகக் கண்டிக்கிறது.
#உணவு_எங்கள்உரிமை” என்று கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சருக்கு டேக் செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் வாசுகி பாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அவரிடம், “சிலர் பன்றிக்கறி உணவும் வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்களே” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “பன்றிக்கறியும் தமிழ்நாட்டில் பரவலாக உண்ணப்படுகிறது. ஆகவே அந்த உணவும் கண்காட்சியில் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.
கடந்த 2022ல், இதே போன்ற சர்ச்சை ஏற்பட்டு , வேலூரில் பிரியாணி விழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழநாட்டில் புகழ் பெற்றது ஆம்பூர் பிரியாணி. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், ஏற்கெனவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்தது.ஆகவே இந்த உணவை கொண்டாடும் வகையிலும், வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையிலும் 2022ம் வரும், மே மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவை, வேலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டுக் கறி பிரியாணியும் போடவேண்டும் என்று பட்டியலின அமைப்புகள் வலியுறுத்த, இந்த யோசனையை இந்துத்துவ அமைப்பு எதிர்க்க கடைசியில் மழையைக் காரணம் காட்டி, தேதி குறிப்பிடாமல் விழா ஒத்திவைக்கப்பட்டது.