மர்மர்: திரைப்பட விமர்சனம்: மிரட்டல்!

அமானுஷ்ய சக்திகள் உலவுவதாகச் சொல்லப்படும் பகுதிகளுக்குச் சென்று, ஆவணப்படம் எடுக்கும் குழு.
அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைக்கிறது.
அதாவது, ” திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை வனப்பகுதி ஒன்றில், அமானுஷ்ய சக்தி அலைகிறது. சூனியக்காரியான அது, குழந்தைகளை பலி கொடுத்து தனது சக்தியை தக்க வைக்கிறது. அதோடு, அந்த பகுதியில் இருக்கும் கன்னி தெய்வங்கள் எழுருக்கு வருடம் வருடம் செய்ய வேண்டிய பூஜையை செய்யவிடாமல், சூனியக்காரியின் ஆவி தடுக்கிறது” என்பதுதான் அந்த திகில் செய்தி.
உடனே அங்கு புறப்படுகிறது, ஆவணப்படக்குழு. காட்டுக்குள் வழிகாட்ட அங்கிருக்கும் ஒரு பெண்ணையும், துணைக்கு சேர்த்துக்கொள்கிறது.திகில் வனத்துக்குள் செல்லும் இந்த ஐவர் குழு சூனியக்காரி ஆவியை எதிர்கொண்டதா.. அதனால் ஏற்பட்ட ஆபத்துகள் என்ன, அவற்றிலிருந்து தப்பித்ததா என்பதுதான் திகிலான மீதிக்கதை.
முதல் விசயம், மேக்கிங் மிரட்டுகிறது. பாராட்டுகள்.
’ஃபவுண்ட் ஃபூட்டேஜ்’ என்று சொல்லக்கூடிய நேரடியாக கேமராவில் பதிவு செய்யும் முறையில் படமாக்கி இருக்கிறார்கள். இந்த வகையில் இது முதல் தமிழ் திகில் படம்.
இது ஒரு சாதனை என்பதோடு, படத்துக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்கிறது. நிஜமோ என நம்பவைத்து பயமுறுத்துகிறது. அதற்கும், நடுக்கத்துடன் பாராட்டுகள்.
ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் என அனைவருமே சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர். தைரியமாக காட்டுக்குள் செல்வது, பிறகு அங்கு நடக்கும் சம்பவங்களால் மிரண்டு உறைந்துபோவது என நிஜமாகவே பேயறைந்தவர்களாக காட்சி தருகிறார்கள். சிறப்பு.திகில் படத்துக்கு ஏற்ற, மிரட்டல் ஒளிப்பதிவை அளித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ். அதிலும், இரவு நேரத்தில் மிக குறைந்த வெளிச்சத்தில் காட்சிகளை படமாக்கியிருந்தாலும், காட்சிகளை மிக தரமாக அளித்து இருக்கிறார். நமக்கும் திகிலை கடத்தி இருக்கிறார்.
இசை என தனித்து இல்லாத குறையே தெரியாத அளவுக்கு, ஒலி வடிவமைப்பாளர் கேவ்ய்ன் பிரெடெரிக் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியின் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஒலிக்கும் ஓசைகளை துல்லியமாக பதிவு செய்து அளித்து இருக்கிறார். அதோடு இடையிடையே வரும் அமானுஷ்ய ஒலிகள் மூலம் அதிரவைக்கிறார்.
திகில் படத்துக்கு ஏற்ற, கச்சிதமான எடிட்டிங். பாராட்டுகள் ரோஹித்.
படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை, என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பை, பயத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்.
அனைவரும் பார்த்து பயப்படலாம்.