காதல் + காமெடி: அசத்த வரும், ‘மிஸ்டர் பாரத்’!
யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கக் காத்திருக்கிறது புதிய கூட்டணி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் தயாரிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் பாரத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் மாஸ்டர் பீஸ் என்று வைக்க நினைத்த தலைப்பை மாற்றி லோகேஷ் கனகராஜ் பரிந்துரையின் பேரில் மிஸ்டர் பாரத் என்று மாற்றினர். ரஜினிகாந்த் நடித்த வரலாற்று சிறப்புமிக்க படத்தின் தலைப்பு என்பதால் ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி பெற்றே இந்த பெயர் சூட்டப்பட்டது.
இந்தப் படத்தின் மூலம் ஆறு புதிய திறமையாளர்கள் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்கள். பிரின்ஸ் மற்றும் லவ் டுடே போன்ற படங்களில் நாயகனின் நண்பனாக நடித்த பாரத் இதில் முதன்மை நாயகனாக அறிமுகமாகிறார். பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் வெகுளித்தனமான இளைஞனாக அவர் நடித்துள்ளார். அவருடன் ஆர் சுந்தர்ராஜன் தாத்தாவாக சேர்ந்து பழைய கால நகைச்சுவை விருந்து படைக்கவுள்ளார்.
பொம்மை வடிவமைப்பாளராக கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். இயக்குநர் நிரஞ்ஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை காதல் உணர்வுகள் நிறைந்த அருமையான பொழுதுபோக்கு படமாக தயாராகியுள்ளது.
பால சரவணன் நிதி பிரதீப் லிங்கா ஆதித்யா கதிர் எனப் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் திரையை அலங்கரிக்கவுள்ளது.

