சோழர்களுக்கு சிலைகள் வேண்டாம்! இதைச் செய்யுங்க மோடியாரே!

நேற்று, சோழ மன்னன் ராஜேந்திரனுக்கு, கங்கைகொண்ட சோழபுரத்தில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் நரேந்திரர் கலந்துகொண்டு உற்சாகமாகப் பேசி இருக்கிறார்.
அப்போது, “மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும்” என்றார்.
கடந்த 24ம் தேதி இதே கருத்தை மாநில அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். அவர், “தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு 35 அடியில் முழுஉருவ சிலை அமைக்கப்படும்” என்றார்.
ராஜராஜன், ராஜேந்திரனுக்கு இங்கே சிலை வைத்துத்தான் இவர்கள் புகழைத்தேடித் தரவேண்டும் என்பதில்லை. அந்த மன்னர்கள் கட்டிய பெரும் கோயில்களே அவர்களை நினைவூட்டும்.
தேவையானால், ஹீல்ஷ் அவர்களுக்கு தஞ்சையில் சிலை வையுங்கள். சோழர் ஆட்சிகாலத்துக்குப் பிறகு பல நூறு ஆண்டுகாலம் வெளியுலகுக்கு தெரியாமல் கிடந்த தஞ்சை கோயிலை கண்டறிந்தவர் இந்த ஹீல்ஷ்தான். ஜெர்மானிய அறிஞரான இவர்,1886-ம் ஆண்டில், இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வுசெய்யும் பணியில் இறங்கினார். ஆறு ஆண்டுகால தீவிர உழைப்பில் கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆராய்ந்த ஹீல்ஷ், கோயிலைக் கட்டியது ராஜராஜன் என்கிற மன்னன் என உலகுக்கு அறிவித்தார்.
அதே நேரம் ராஜராஜன், ராஜேந்தின் ஆகியோருக்கு சிலை வைக்க வேண்டும் என மோடி – ஒன்றிய அரசு விரும்பினால் தலைநகர் டில்லியில் முக்கிய இடத்தில் வைக்கட்டும். அல்லது நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவட்டும். அந்த இருவரின் புகழை உலகம் அறிய ஏதுவாகும்.
அடுத்து மோடி அவர்கள் செய்ய வேண்டியது, இந்திய அளவிலான தொல்பொருள் இலாகா எனபதை ஒழிப்பதே.
இந்த இலாகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளாவின் ஒரு பகுதியை ஒரு மண்டலமாக பிரித்து ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்குகிறது. அதே நேரத்தில் புராதன சின்னங்கள் தமிழ்நாட்டை விட குறைவாக உள்ள கர்நாடகாவை மூன்று மண்டலங்களாக பிரித்து ரூ.30 கோடி ரூபாய் வழங்குகிறது.
அது மட்டுமல்ல, கடந்த 2020ம் ஆண்டு, “தமிழ்நாட்டில் உள்ள சுமார் 7,000 கோயில்களை ஒன்றிய தொல்பொருள் இலாகா கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போகிறோம்” என அறிவித்து அதிரவைத்தார் ஒன்றிய பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் சிங்.
இதற்கு தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
வரலாற்று ஆய்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.
ஒரு சிலர், “ஒன்றிய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வந்தால் கோயில்கள் சிறப்பாக பராமரிக்கப்படும்” என்றனர்.
ஆனால் உண்மை அதுவல்ல.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் ஆகியவற்றின் சிறப்பான பராமரிப்பிற்காக ஒன்றிய அரசு, யுனெஸ்கோ விருதுகளைப் பெற்றிருக்கின்றன. இவை மாநில அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களே!
தவிர இப்போது கையில் எடுத்திருக்கிறார்களே திருப்பரங்குன்றம்.. அந்த மலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முருகன் கோயிலையும் அருகிலேயே ஒன்றிய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் சமண கோயிலையும் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். சமண கோயில் பராமரிப்பே இன்றி சிதைந்து கிடக்கும்.
lஅது மட்டுமல்ல… இந்திய தொல்லியல் துறை, தமிழ்நாட்டை பாரபட்சமாக பார்க்கிறது. ஆம்.. சென்னையைத் தவிர வேறு எங்குமே இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் மாநிலத்தில் வேறு எங்கும் இல்லை.
தவிர, “இந்திய தொல்லியல்துறை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கைகளை முறையாக வெளியிடுவதில்லை” என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
ஆய்வறிக்கையை மாற்றித் தர வற்புறுத்துவதையும் கீழடியில் ஆய்வில் கண்டோம்.
மேலும், கோயில் நிர்வாகம் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டது என்றால், தில்லி வரை சென்று அனுமதி வாங்கித்தான் செய்ய முடியும்.
இதற்கு பிரபலமான ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்.
1976-ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, தஞ்சை பெரிய கோயிலின் உள்ளே – அதை கட்டிய – மாமன்னன் ராஜராஜனுக்கு சிலை வைக்க முயன்றார். ஆனால் இந்திய தொல்லியல் துறை, “புதிய கட்டுமானங்கள் கூடாது” என தடை விதித்தது. ஆகவே கோயிலுக்கு வெளியேதான் ராஜராஜன் சிலை இன்றும் நிற்கிறது.
ஆனால் அதே காலகட்டத்தில், பெரிய கோயிலின் உள்ளே வராக சந்நிதி புதிதாக கட்டப்பட்டது. அதற்கு தொல்லியல் துறை எந்தத் தடையும் விதிக்கவில்லை. இதை கருணாநிதி சுட்டிக்காட்டி பிறகு, கட்டிடம் இடிக்கப்பட்டது.
ஆக ஒன்றிய தொல்லியல் துறை வைத்ததே சட்டம் என்ற நிலைதான்.
அந்தந்த மாநிலத்துக்கு என்று தொல்லியல் துறை உள்ளன. அவையே புராதண சின்னங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இதை மோடி – ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும்.
அடுத்து..
வட இந்திய பாடத்திட்டத்தில் தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர்களைப் பற்றி குறிப்புகள் இல்லை. இங்குள்ளவர் அசோகர் பற்றியெல்லாம் தெரிந்துகொள்கிறோம். வடவருக்கு சேர, சோழ, பாண்டியர் குறித்து தெரியுமா..
தவிர சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து தந்தை பெரியார் கட்டுரை, சிலப்பதிகாரம் ஆகியவற்றை நீக்கினார்கள்.
இதையெல்லாம் சேருங்கள்..
இன்னொரு முக்கிய விசயம்…
நேற்று ராஜேந்திரன சோழன் குறித்து பெருமை பொங்க பேசிய மோடி, அந்த மன்னன் வெட்டிய கங்கைகொண்ட சோழபுரத்தில் வெட்டிய சோழகங்கம் என்கிற பொன்னேரி குறித்தும் பெருமை பொங்க நினைவு கூர்ந்தார்.
இந்த ஏரி கி.பி.1025ம் ஆண்டு வெட்டப்பட்டது. இது ஆயிரமாவது ஆண்டு.
இந்த பொன்னேரி,16 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்டது. பல நூற்றாண்டுக்கு ஆக்கிரமிப்புக்குப் பிறகும் 5.கி.மீ சுற்றளவைக் கொண்டிருக்கிறது. இந்த ஏரியை சீர் செய்தால், விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பேருதவியாக இருக்கும்.
இதை குறிப்பிட்டு கடந்த 2023ம் ஆண்டே பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கவன ஈர்ப்பு கூட்டங்கள் நடத்தினார். கையெழுத்து இயக்கம் நடத்தினார். தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து, மருதையாற்று வடிநிலக் கோட்டத்தின் செயற்பொறியாளர் அலுவலகம், சோழகங்கம் ஏரியை சீரமைப்பது குறித்து விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது.
அதன்படி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், “சோழகங்கம் ஏரியை தூர்வாரி அதன் முழுமையான கொள்ளளவை எட்ட வேண்டும் என்றால், அதில் படிந்து கிடக்கும் ஒரு கோடியே 52 லட்சத்து 14,941 கனமீட்டர் வண்டல் மண்ணை அகற்றி, அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள சுரங்கங்களில் கொட்டி நிரப்ப வேண்டும் இதற்கு மட்டும் ரூ.452.23 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சோழகங்கம் ஏரிக்கு நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு வருவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த ரூ.200 கோடி, 13 கி.மீ வரத்துக் கால்வாய், உபரிநீர்க் கால்வாய் ஆகியவற்றை தூர்வார ரூ.8.50 கோடி, ஏரியின் மதகுகளை சீரமைக்க ரூ.2 கோடி என மொத்தம் ரூ.662.73 கோடி செலவாகும்” என்று விரிவாக விளக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில்கூட சோழகங்கம் என்கிற பொன்னேரியை சீரமைப்பது குறித்து தமிழ்நாடு அரசுக்கு நினைவூட்டினார் அன்புமணி.
இதன் விளைவாக, ஏரியை தூர்வார ரூ.12 கோடி ஒதுக்கியது மாநில அரசு.
இது குறித்த அன்புமணியின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அவர், “12 கோடி ரூபாயில் எந்தவித முன்னேற்றமும் நடக்காது. திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இரு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், இப்போது திட்ட மதிப்பு ரூ.700 கோடிக்கும் கூடுதலாக அதிகரித்திருக்கக்கூடும். ஆனால், அதன் மதிப்பில் வெறும் 1.5% தொகையை – ரூ.12 கோடியை – மட்டும் ஒதுக்கி விட்டு சோழகங்கம் எனப்படும் பொன்னேரியை தூர்வாரி சீரமைக்கப் போவதாக மாநில அரசு சொல்கிறது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதி ஒரு தடையே கிடையாது. அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, மாவட்ட கனிம வள நிதி அறக்கட்டளையில் இருக்கும் நிதியைக் கொண்டும், கூடுதல் நிதியை பன்னாட்டு அமைப்புகளிடம் கடன் வாங்கியும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும்” என்றார்.
இப்போது நமது கோரிக்கை இதுதான்.
அரியலூர் மாவட்ட கனிம வள அறக்கட்டளையில் இருந்து நிதியைப் பெறட்டும். அதே போல “மீதித் தொகையை ஒன்றிய அரசு ஒதுக்கும். மக்களின் நல்வாழ்வுக்காக ராஜேந்திர சோழன் அமைத்த ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த அந்த ஏரியை சீர் செய்வோம்” என மோடி அறிவிக்க வேண்டும். செயல்படுத்த வேண்டும்.
ஆக, மோடி செய்ய வேண்டியது ராஜ, ராஜேந்திர சோழர்களுக்கு இங்கே சிலை வைப்பது அல்ல. பொன்னேரியை சீரமைப்பதும், தொல்லியல் துறையை முழுமையாக மாநில அரசுக்கு மாற்றுவதும்தான்.
சந்தடி சாக்கில் மாநில அரசுக்கு ஒரு கோரிக்கை…
ராஜராஜ சோழனுக்கு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்திலும், ராஜேந்திர சோழனுக்கு ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திலும் அரசு விழா கொண்டாடுகிறது மாநில அரசு.
இவற்றை திருவள்ளுவர் ஆண்டுப்படி கணக்கிட்டு கொண்டாட வேண்டும்.
இந்த கோரிக்கையை கடந்த நான்கு வருடங்களாக பல்வேறு ஊடகங்களில் வைத்து வருகிறேன்.
அறம், பார்த்தாவது முதலமைச்சர் செய்கிறாரா என பார்ப்போம்.
– டி.வி.சோமு