புரட்சித் தலைவருக்கு சைதை துரைசாமி கண்ணீர் கடிதம்

அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாள் இன்று.
பெருநகர சென்னையின் முன்னாள் மேயரும் மனித நேய அறக்கட்டளையின் தலைவர் சைதை சா.துரைசாமி அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின். நினைவிடத்தில் காலையில் மரியாதை செலுத்தினார்.
தனது இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சைதை துரைசாமி அவர்கள் கண்ணீர் மல்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
புரட்சித் தலைவருக்கு கண்ணீர் கடிதம்
என் இதய தெய்வமே,
மனிதர்கள் வாழ்வியலுக்கு சித்தர்கள், புலவர்கள், மத போதகர்கள், தத்துவ ஞானிகள், அரசியல் தலைவர்கள், பொருளாதார அறிஞர்கள் கூறிய கருத்துக்களை எல்லாம் திரைப்படத் தலைப்பாக, வசனமாக, பாடலாக, காட்சியமைப்பாக கொடுத்த முதல் சீர்திருத்தக் கலைஞன் நீ. அதனால் மக்கள் உன்னை குலதெய்வமாகக் கும்பிடுவதையும், படிக்காத பாமர மக்கள் வாத்தியார் என்று போற்றுவதையும் எண்ணி அரசியல் தலைவர்கள் மெய் சிலிர்கிறார்கள் தலைவா.
மக்கள் பணத்தை வாரி வழங்கிய கடையெழு வள்ளல்கள் பற்றி ஏட்டில் மட்டுமே படித்திருக்கிறோம். நீ மட்டும் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை வாரி வழங்கிய கலியுக வள்ளல். அந்த கருணையில் மனதைப் பறிகொடுத்த மக்களாலே நீ படுத்துக்கொண்டே ஜெயித்தாய். இறுதிவரையிலும் முதல்வராகவே இருந்தாய். இன்று வரையிலும் உன் அரசியல் செல்வாக்குக்கு ஈடு இணையில்லை என்று நிரூபித்து வருகிறார் தலைவா
திரைப்படத்தில் சொன்னதை எல்லாம் நிஜமாக நடத்திக் காட்டிய சாதனையாளன் நீ. ஏழை மக்களின் பசியை தீர்க்க ரேஷன் கடைகளில் மாற்றம் கொண்டுவந்தாய். மாணவர்களுக்கும் பள்ளியில் பயிலாத குழந்தைகளுக்கும் சத்துணவு கொடுத்த உன் தாயுள்ளத்தை நினைத்து தாய்மார்கள் பெருமைப்படுகிறார்கள். தனியாருக்கு சுயநிதி பொறியியல் கல்லூரி எனும் உன் தொலைநோக்கு சிந்தனையாலே இன்றைய தமிழர்கள் ஐ.டி. துறையில் உலகம் முழுக்க வெற்றி நடை போடுகிறார்கள். உன் இடஒதுக்கீடு புரட்சியாலே தமிழகம் தலை நிமிர்ந்தது.
மதுவைக் கட்டுப் படுத்த நீ கொண்டுவந்த அவசர சட்டத்தில் முதல்முறை மதுவிலக்கு சட்டத்தில் பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறை இரண்டாவது முறை 7 ஆண்டுகள், மூன்றாவதுமுறைநாடுகடத்தப் படுவார்கள்என்றஅவசரசட்டம்மட்டும்நிறைவேறியிருந்தால்இன்றுதமிழகப்பெண்களின்தாலிதப்பியிருக்கும்என்பதை நினைத்து மதுஒழிப்புப்போளிகள்ஆதங்கப்படுகிறார்கள்தலைவா.
அரசு சலுகைகள் எதுவும் பெறாமல், முதல்வராக இருந்த காலகட்டத்தில் எந்த ஒரு சொத்தும் வாங்காத ஒரே நேர்மையாளன் நீ, என்னை சேவையின் பாதையைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன உன் அறிவுரையை எண்ணி வியக்கிறேன் தலைவா.
மனித நேயம் இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை மூலமும், நேர்மையான மேயராகப் பணியாற்றியதற்கும் உன் வழிகாட்டுதலே காரணம் என்பதை எண்ணி எண்ணி பெருமைப்படுகிறேன் தலைவா.
1984ல் என்னையும் சேர்த்து 12 இளைஞர்களை அமைச்சர்களாக்கும் உன் திட்டம் நிறைவேறியிருந்தால் கட்சியிலும் ஆட்சியிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் தலைவா. “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்’’ என்று கேள்வி எழுப்பி அதற்கு விடையாகவும், மறைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகும் உன் செல்வாக்கு மக்கள் மத்தியில் கண்ணுக்குத் தெரியாத மின்சாரமாக நிலைத்திருப்பதை கண்டு உலகமே வியந்து பாராட்டுகிறது தலைவா.
என்றும் உன் பக்தன் சைதை சா. துரைசாமி
இந்த கடிதம் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.