மருதம்: திரை விமர்சனம் 4.2/5

அருவர் பிரைேவேட் லிமிடெட் சார்பில் சி.வெங்கடேசன் தயாரிக்க, அறிமுக இயக்குநர் வி கஜேந்திரன் உருவாக்கத்தில், விதார்த் நாயகனாக நடித்துள்ள திரைப்படம், மருதம்.மருதம் என்றால், தமிழ்த்திணையில் வயலும் வயல் சார்ந்த இடமும் என்று பொருள். இந்தத் திரைப்படம் அது குறித்துதான். அதாவது ஒரு விவசாயியும் அவரது போராட்டமும்தான் அதிரவைக்கும் (நிஜக்) கதை.
ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வரும் எளிய சம்சாரி, கண்ணியப்பன். மூதாதையர் வழியாக அவருக்கு வந்த வயலில் விவசாயம் செய்து வருகிறார். அவருக்கே தெரியாமல், அவரது நிலத்தின் மீது மோசடியாக கடன் பெறுகிறார் வங்கி அதிகாரி. கடனை திருப்பி செலுத்தவில்லை என்று நிலம் ஏலத்துக்கு வருகிறது.
விவசாயி கண்ணியப்பன் அதிர்கிறார். தனக்கு நிகழ்ந்தை சட்ட ரீதியாக எதிர்த்து எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.
விவசாயி கண்ணியப்பனான விதார்த். அவரது நடிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. “விவசாயியாகவே வாழ்ந்தார்” என்கிற விமர்சனம் எல்லாம் அரதப் பழசு. ஆகவே அவரது நடிப்பை ரசிக்க படத்தை பார்ப்பதே சிறந்த வழி.
அவரது மனைவி சிந்தாமல்லியாக வரும் நாயகி ரக்ஷனா, அற்புதத் தேர்வு. இந்த இளம் வயதில், ஒரு குழந்தைக்குத் தாயாக சிறப்பாக நடித்துஇருக்கிறார்.
அருள்தாஸ், சரவண சுப்பையா, மாறன், தினந்தோறும் நாகராஜ் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.
என்.ஆர்.ரகுந்தன் இசை, வழக்கம்போல் இதம். பின்னணி இசை, படத்தின் கதாபாத்திரம் போலவே கூடவே ஓடி வருகிறது. சிறப்பு.
ஒளிப்பதிவாளர் அருள் கே சோமசுந்தரம், கிராமத்துக் காட்சிகளை கண் முன் நிறுத்துகிறார். வயல்வெளிகளுக்கு நடுவே நாமே நடப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
பி.சந்துருவின் எடிட்டிங் கச்சிதம்.
எழுதி இயக்கி உள்ள வி.கஜேந்திரன், விவசாயிகளின் வாழ்க்கை, நில மோசடி, அரசு அதிகாரிகள் சிலரின் அடாவடி போக்கு, அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என மிக அவசியமான ஒரு படத்தை – படைப்பை அளித்து இருக்கிறார்.
இதை பரபரப்பான பின்னணியில் சுவாரஸ்யமான திரைக்கதையோட்டத்தில் அளித்திருப்பது கூடுதல் சிறப்பு.
அனைவரும் பார்த்தே ஆக வேண்டிய படம்.
ரேட்டிங்: 4.20/5