மரியா: திரை விமர்சனம்

ஒரு இளம் கன்னியாஸ்திரியின், விரகதாபங்களை மிக நேர்மையுடன் இயல்பாக எடுத்துச் சொல்லும் துணிச்சலான முயற்சி இப்படம். இதன் மூலமாக, மனித உணர்வுகளுடன் விளையாடும் மதங்களை கேள்வி கேட்கிறது.
குடும்பத்தினர் நிர்ப்பந்தத்தால் கன்னியாஸ்திரி ஆகிறாள் இளம் பெண் மரியா. சந்தர்ப்ப சூழலால் தனது உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்குகிறாள். அந்த வீட்டில் இருக்கும் இரு இளம் ஜோடிகள், இரவில் உறவு கொள்ளும்போது வெளிப்படும் ஒலிகள், மரியாவின் இதயத்தில் எதிரொலிக்கிறது. அவளுக்கும் பிறரைப் போல தானும் வாழ ஆசை பிறக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.கதை நாயகியாக – இளம் கன்னியாஸ்திரியாக – நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிறரைப் போல இயல்பான வாழ்க்கை அமையவில்லையே என்கிற ஏக்கத்தையும், ஆதங்கத்தையும் பார்வையிலேயே வெளிப்படுத்துகிறார். எப்போதும் சற்றே நீண்டு நிற்கும் அவரது உதடுகள், அந்த ஆதங்கத்தை இன்னும் கூடுதலாக வெளிப்படுத்துவது ஆச்சரியம்.
“நீ மட்டும் எல்லா சுகமும் அனுபவிச்சுத்தானே என்னை பெத்தே.. உனக்கு விருப்பம்னா நீ கன்னியாஸ்திரி ஆகியிருக்க வேண்டியதுதானே” என தாயிடம் எகிறுவது, ஒரு இளைஞன் தீண்டியவுடன் வெளிப்படுத்தும் உணர்வு என நடிப்பில் அசத்துகிறார்.
அதோடு இந்தக் கதாபாத்திரத்தில் நடித்த துணிச்சலையும் பாராட்ட வேண்டும்.
சாத்தான் வழிபாட்டு குழுவின் தலைவராக நடித்திருக்கும் பாவல் நவகீதன் மனதுக்கு நெருக்கமாகிறார். கடவுள் குறித்தும் சாத்தான் குறித்தும் தீட்சண்யமான பார்வையுடன் அவர் பேசும் தொணி, ஈர்க்கிறது.நாயகியின் தாயாக நடித்திருக்கும் பாலாஜி வேலன், உறவினராக நடித்திருக்கும் சிது குமரேசன், அவரது காதலராக நடித்திருக்கும் விக்னேஷ் ரவி, சுதா புஷ்பா, அபிநயா என மற்றவர்களும் பாத்திரம் அறிந்து நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் ஆகியோரது இசை சிறப்பு. கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வை உணர்ந்து படம் முழுதும் பயணித்திருக்கிறது பின்னணி இசை.
லொகேசன்கள் குறைவுதான். காட்சிகளும் மெல்லத்தான் நகர்கின்றன. ஆனாலும் இயல்பான ஒளியில் அமைந்த மணிஷங்கர்.ஜியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
மெல்ல நகரும் – நீளும் – காட்சிகள் என்பது குறையாகத் தோன்றலாம். ஆனாலும் இந்தக் கதைக்கு இதுவே சரி. தவிர, நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதை, சிறு சிறு உணர்வுகளையும் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் விதம், குறியீடுகள் மூலம் சூழலை உணர்த்துவது என கவனத்தை ஈர்கிகறார் இயக்குநர் ஹரி கே.சுதன். இடைவேளையுடனேயே படம் நிறைவடைந்தி திருப்தி ஏற்படுகிறது. அதன் பிறகு, மத ரீதியான விசயங்களை ஆழமாக தொட்டிருக்கிறார், இதுவும் சிறப்பான முயறஅசியே.
சர்ச்சையான ஒரு விசயத்தை தைரியமாக – நேர்மையாக சொல்லியிருப்பது பாராட்டுக்குஉரியது.