பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் பதில் சொல்வார்களா?
நாங்குனேயில் பட்டியல் இன மாணவனை, பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி படுகாயப்படுத்தினர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை பலரும் கண்டித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பத்திரிகையாளர் டி.வி.சோமு, தனது முகநூல் பக்கத்தில், ‘பட்டியல் இனத்தினரின் சாதி வெறி! கண்டிப்போமா?’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை பதிந்து உள்ளார். கட்டரையின் முடிவில், திரைப்பட இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் பதில் சொல்வார்களா என கேட்டு, அவர்களையும் டேக் செய்து உள்ளார்.
அந்த கட்டுரை:
நாங்குநேரியில் பட்டியல் இன சிறுவன்மீது, இதர ( பிற்படுத்தப்பட்ட) சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், சாதி வெறியில் – கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
‘இந்த நிலையில், இந்த கட்டுரை தேவையா.. இது ஆதிக்க சாதிவெறி’என சிலர் என் மீது ஆத்திரம் கொள்ளக்கூடும். ஆனால் இப்போது சில சம்பவங்களை குறிப்பிடுவது அவசியம்..
பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு சாதியினர், அதே பட்டியல் இனத்தைச் சேர்ந்த இன்னொரு சாதியினர் மீது நடத்தும் ஒடுக்கு முறைகளை எவரும் பொருட்படுத்துவதில்லை..

சில உதாரணங்கள்..
@ திண்டுக்கல் – வெட்டல் நாயக்கன்பட்டி… நதியா – பாலமுருகன் காதலித்து மணம் செய்துகொண்டனர். திருமணம் செய்து வைத்த போஸ் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
@ விழுப்புரம் – கரடி சித்தூர்.. பரிமளா – வீரன் – காதல் மணம். மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், பொது இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்டனர், ஒரு இளம்பெண் கொல்லப்பட்டார்.
@ தேனி – காட்சிபுரம்.. 11 வயது சிறுமியை, மூவர் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி படுகொலை செய்ததாக வழக்கு.
@ விழுப்புரம் பள்ளி நேயனூர்.. கோகிலா – கார்த்திகேயன் காதல் திருமணம். கோகிலாவை அவரது பெற்றோரே ஆணவப்படுகொலை செய்ததாக வழக்கு.
@ மதுரை சந்தையூர் பகுதியில் தீண்டாமைச் சுவர் சர்ச்சை
@ விழுப்புரம் ழுவந்தாங்கால் – ஆரோக்கியச்சாமி இயற்கை எய்த.. அவரது உடலை தங்கள் தெரு வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு..
# மேற்கண்ட அத்தனை சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டோர், பட்டியல் இனத்தின் ஒருபிரிவினரே. (பறையர்)
பாதிக்கப்புக்கு ஆளானவர்கள், பட்டியல் இனத்தின் இன்னொரு பிரிவினர். ( அருந்ததியர்)
ஆதிக்க சாதி என, பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பலரைச் சொல்கிறோம். பட்டியல் இனத்திலும் ஆதிக்க சாதியாக பலர் உள்ளனர்.
மேலும், தங்கள் சார்பானவர்கள் தவறு செய்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும்… நியாயமாக நடந்தவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரின் வழக்கமாக உள்ளது என்கிற விமர்சனமும் உண்டு.
ஒரு உதாரணம்…
திருவண்ணாமலை ஆரணி சேவூர் ஊராட்சி… பள்ளி வளாகத்துக்கு அருகிலேயே மாணவர்கள் சிலர், சிகரெட் பிடித்து, மாணவிகள் மீது புகை ட்டனர். அவர்களை ஆசிரியர்கள் கண்டித்தனர்.
விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் தலைமையில் கூட்டமாக வந்தவர்கள், ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். கல்வித்துறையில் புகார் செய்தனர்.
மாணவர்களின் ஒழுங்கீன செய்கையை கண்டித்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
@ அது மட்டுமல்ல.. பிற்படுத்தப்பட்டோர் மீது பொய்யாக பி.சி.ஆர். புகார் கொடுப்பதும் நடக்கிறது. இதை சமூகவலைதளங்களில் வெளியான வீடியோக்களில் பார்த்தோம்.
# இவை குறித்தெல்லாம்.. பட்டியல் சாதியில் செல்வாக்காக உள்ளோர் – முற்போக்காளர்கள் – மனித உரிமை போராளிகள் பேசுவதே இல்லை.
நாங்குநேரி சம்பவத்துக்காக குரல் கொடுக்கும் நாம், ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோராக துயருரும் மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.
இதற்கு அது சரியான நேரம்..!
தொல்.திருமாவளவன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் இந்த சதீய வெறி – ஆணவம் – கொடுமை குறித்தும் கவனம் செலுத்துவார்களா?
– டி.வி.சோமு
