மனிதர்கள்:திரை விமர்சனம்: உள்ளுக்குள் மிருகம்!

வியாழக்கிழமை மனிதர்களின் மனத்தினுள் இருக்கும் மிருகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டி அதிர வைக்கும் திரைப்படம்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆறு நண்பர்கள், ஊரைவிட்டு கொஞ்சம் ஒதுங்கிய இடத்தில் மது அருந்த ஆரம்பிக்கிறார்கள். உச்சகட்ட மது போதையில் சண்டை ஏற்பட.. நடு இரவில் மது பாட்டிலால் குத்துபட்டு சரிந்து விழுகிறார் ஒருவர். இதர நண்பர்களுக்கு பயம் கவ்வுகிறது. உடலைத் தூக்கி டிக்கியில் போட்டுக்கொண்டு காரில் கிளம்புகிறார்கள். வழி எங்கும் திக் திக் அனுபவங்கள். இறுதியில் என்ன நடந்தது என்பதே கதை.
நண்பர்களாக கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன் தனபால், அர்ஜுன் தேவ், சம்பா சிவம், பிரேம் ஆகிய ஆறு பேர்.மிகப் பதற்றமான சூழலில், நிதானம் தவறாமல் முடிவுகளை எடுப்பது, நண்பர்களிடம் காட்டும் கண்டிப்பு என சிறப்பாக நடித்து உள்ளார் கபில் வேலவன். உம் என்ற முகம், அதில் கலந்திருக்கும் வில்லத்தனம் என அற்புத நடிப்பு.
மற்றவர்களும் ஓகேதான். ஆனால் அதீத அழுகை, கத்தல் என சில சமயங்களில் எரிச்சல் வந்துவிடுகிறது.
முழுக்க ஓர் இரவில் நடக்கும் கதை, ஆகப்பெரும்பாலும் காருக்குள்ளேயே நகரும் காட்சிகள்… இந்த இக்கட்டான சூழலிலை அநாயாசமாக கடந்து கவனிக்க வைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரகாம். அருமையான ஒளி அமைப்பும் கை கொடுத்து இருக்கிறது.
அதுவும், கார் ஹெட்லைட்டை மட்டும் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் கவர்கின்றன.
பதற்றம், பரிதவிப்பு, பயம் என பல்வேறு உணர்வுகளை தனது பின்னணி இசையில் அளித்து இருக்கிறார் அனிலேஷ் எல் மாத்யூவின். பின்னணி இசையும் படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே வந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
திரைக்கதையின் பரபரப்பை கூடுதலாக்கி இருக்கிறார் படத்தொகுப்பாளர் தின்சா.திருவிழா நடக்கும் ஊரை கார் கடக்கும் காட்சிகளை நேரில் பார்ப்பது போல இருக்கிறது. கலை இயக்குநர் மகேந்திரன் பாண்டியனுக்கு பாராட்டுக்கள்.
ஓரே இரவில் நடக்கும் சம்பவம், அதையொட்டி நடக்கும் பரபர நிகழ்வுகளை நேரடியாக கண் முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.
அடுத்தடுத்து தொடரும் சம்பவங்கள், ஆர்வத்தை அதிகரிக்கும் காட்சிகள், கவனத்தை ஈர்க்கும் வசனங்கள் என ரசிக்க வைக்கிறார். அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சி பகீர்.