’பராசக்தி’: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்து சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது இந்நிலையில், உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதில், 1965ல் நடந்த ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து, ‘செம்மொழி’ என்ற பெயரில் கதை எழுதி, 2010ல் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு பதிவு செய்த இந்த கதையை, பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்ததாகவும், தயாரிப்பாளர் சேலம் தனசேகரன், தனது கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க, அவர் அதை இயக்குநர் சுதா கொங்கராவிடம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், பராசக்தி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இரு கதைகளும் ஒன்று தானா? இல்லையா? என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுவுக்கு ஜனவரி 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார். மேலும், மனுதாரரின் புகார் மீது அனைத்து தரப்பினரையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த நீதிபதி, செம்மொழி பட கதைக்கும் பராசக்தி கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. பராசக்தி படத்தின் கதை தன்னுடையது என்பதற்கு மனுதாரர் எந்த ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை என பட தயாரிப்பு நிறுவனம் தரப்பு வாதிட்டது. இதையடுத்து, பராசக்தி படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

