“புலிகள் மீதான தடையை நீக்காத காரணம் இதுதான்!”: ‘அந்தோனி’ பட விழாவில் சீனு ராமசாமி அதிர்ச்சி தகவல்!
இசைஞானி இளையராஜாவின் இசையில், ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அந்தோனி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் உணர்ச்சிகரமாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, “இந்த ‘அந்தோனி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து நான் கண்கலங்கினேன். ஒரு நாடு சிதிலமடைந்த பிறகு, போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்பார் இன்றிக் கைது செய்யப்படலாம் என்கிற அச்சம் நிலவும் மண்ணிலிருந்து வந்த இளைஞர்களின் நினைவுகளில் குண்டு விழுந்த சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் இந்த அந்தோனியை நான் பார்க்கிறேன்,” என்று உருக்கமாகப் பேசினார். மேலும் அவர் ஒரு அதிரடியான அரசியலையும் முன்வைத்தார்: “விடுதலைப் புலிகள் மீது ஏன் இன்னும் தடையை நீக்கவில்லை? புலிகள் யாரும் உயிரோடு இல்லை என்று தெரிந்துவிட்ட பிறகும் ஏன் அந்தத் தடையை நீக்காமல் இருக்கிறார்கள்? யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்பதற்காகத்தான் அந்தத் தடையை நீக்காமல் வைத்திருக்கிறார்கள். நான் யாரோடும் உடன்பட்டோ முரண்பட்டோ பேசவில்லை, என் கருத்தைச் சொல்கிறேன்,” என்று துணிச்சலாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், நாயகன் கயல் வின்சென்ட்டிடம், “நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது, என்னை மன்னித்துவிடு” என்று மேடையிலேயே மன்னிப்பு கேட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பதை அவர் வழங்கிய ‘ஆசி’யாகவே கருதுவதாகவும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் ரமணதாஸ் பேசுகையில், ஈழத்திலிருந்து உலகத் தரத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட கால ஏக்கம் என்று குறிப்பிட்டார். “தமிழ்நாடு என்பது எங்கள் ரத்தத்தோடும் சதையோடும் கலந்தது. தயவுசெய்து எங்கள் கதைகளை உங்கள் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்க்காதீர்கள், வீட்டுக்குள் வந்து பாருங்கள். உங்கள் உறவுகள் ஒரு புது இடத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதாகவே இந்தப் படம் இருக்கும்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இணைத் தயாரிப்பாளர் விக்கி பேசும்போது, போர் தொடங்கிய பிறகு இந்திய – இலங்கை கூட்டுத் தயாரிப்பில் எந்தத் தமிழ் நிறுவனமும் ஈடுபடாத நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தப் படம் அந்தத் தடையை உடைத்துள்ளதாகத் தெரிவித்தார். பாலு மகேந்திரா அவர்கள் ஈழத்தில் படம் எடுக்க வேண்டும் என்கிற கனவு இந்தப் படத்தின் மூலம் நனவானதில் தங்களுக்கு மகிழ்ச்சி என்று அவர் கூறினார். ‘உலக சினிமா’ பாஸ்கரன் பேசுகையில், இந்தப் படம் உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் படங்களுக்கு இணையான தரத்தில் இருப்பதாகவும், நாயகன் வின்சென்ட் ‘என் ராசாவின் மனசிலே’ ராஜ்கிரண் போலவும், நாயகி ‘உதிரிப்பூக்கள்’ அஸ்வினி போலவும் தெரிவதாகப் புகழ்ந்தார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசுகையில், நாம் எப்போதும் இந்தக் கரையில் இருந்துதான் அந்தக் கரையைப் பார்த்திருக்கிறோம், ஆனால் ‘அந்தோனி’ அந்தக் கரையின் உண்மையான வாழ்க்கையை நமக்குக் காட்டும் என்று பாராட்டினார். இயக்குநர்களில் ஒருவரான ஜெனோசன் ராஜேஷ்வர், தாங்கள் சொந்தமாக கேமராவை வாங்கிக்கொண்டு போய் இலங்கையிலேயே படப்பிடிப்பு நடத்திய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். மற்றொரு இயக்குநரான சுகிர்தன் கிறிஸ்துராஜா, “இந்தப் படத்திற்கு ஒரு டிக்கெட் எடுத்தால் நீங்கள் யாழ்ப்பாணம் சென்று அழகான கிராமத்தில் இளையராஜா பாடல்களைக் கேட்டபடி ஜன்னலோரம் அமர்ந்து செல்வது போன்ற உணர்வை இந்தப் படம் கொடுக்கும்” என்று சிலாகித்துப் பேசினார்.
நாயகன் கயல் வின்சென்ட் பேசுகையில், தான் ஒரு கதாநாயகனாக இல்லாமல் கதை நாயகனாக நடித்திருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், நடிகை டிஜே பானு தெலுங்குப் படத்தில் வந்த 50 லட்சம் ரூபாய் சம்பள வாய்ப்பை மறுத்துவிட்டு, ஈழத்து மண்ணின் கதையில் நடிக்க வேண்டும் என்கிற அர்ப்பணிப்போடு வந்ததைப் பாராட்டிப் பேசினார். மார்ச் மாதம் வெளியாக இருக்கும் ‘அந்தோனி’, போருக்குப் பிந்தைய ஈழத் தமிழர்களின் வாழ்வியலை உரக்கச் சொல்லும் ஒரு முக்கியப் படைப்பாக அமையும் என விழாவில் பலரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

