தனக்கும் ஜெ.வுக்குமான சம்பவம் பற்றி ரஜினி என்ன சொன்னார்?: ‘எம்புரான்’ பட விழாவில் பிருத்விராஜ் பதில்!

தனக்கும் ஜெ.வுக்குமான சம்பவம் பற்றி ரஜினி என்ன சொன்னார்?: ‘எம்புரான்’ பட விழாவில் பிருத்விராஜ் பதில்!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில்  மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ (Lucifer) திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘எல் 2: எம்புரான்’ (L2: Empuraan).  உருவாகி உள்ளது. இதில், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் என மலையாள திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

இந்நிலையில்  படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சத்யம் திரையரங்கத்தில் இன்று (மார்ச்.24) நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரித்திவிராஜ், மோகன்லால், மஞ்சு வாரியர், அபிமன்யு சிங், டரிட்டோ தாமஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நட்சத்திரங்கள் பேசியதாவது…

நடிகர் டொவினோ தாமஸ்:

“இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என எப்போதுமே ஆசைப்பட்டுள்ளேன். லூசிஃபரில் எனக்கு குறைவான காட்சிகளே இருந்தன.

ஆனால் அந்த கதாபாத்திரம் எனது நடிப்பு பயணத்தில் மிகப் பெரிய தாக்ககத்தை கொடுத்தது. படத்தில் நான் முதலமைச்சராக நடித்துள்ளேன். நிஜ வாழ்க்கையில் நிறைய விசயங்களை மாற்ற வேண்டியுள்ளது. அதை இப்போது சொல்ல முடியாது!” 

நடிகை மஞ்சு வாரியர்

“பிரம்மாண்டமான படத்தில் வாய்ப்பு என்பது எல்லோருக்கும் கிடைக்காது. கனவு மாதிரி இருக்கும். லூசிபஃர் மாதிரியான பவர்ஃபுல்லான திரைப்படத்தில் ரொம்ப கனமான கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. அந்த பிரியதர்ஷினி கதாபாத்திரத்தை அனைவரும் வரவேற்றனர்.

அந்தப் பயணம் எம்புரானிலும் தற்போது தொடர்கிறது. ‘லூசிஃபர்’ மாதிரியே ’எம்புரான்’ திரைப்படமும் அனைவருக்கும் 100% பிடிக்கும் என நம்புகிறேன். மோகன்லாலுடன் குறைவான படங்களே நடித்துள்ளேன். மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!”.

சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா

“இந்தியா முழுவதும் இது ஒரு மிகப்பெரிய படம் இது. முதலில் ’லூசிஃபர்’ திரைப்படத்தை உருவாக்கும் போது மிக எளிதாக எடுத்து விட்டோம். ஆனால் அந்த படம் வெளியாகி இந்தியா முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதனால் இரண்டாம் பாகம் எம்புரான் திரைப்படம் உருவாக்கும் போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பிருத்விராஜ் இப்படத்தின் வேலைகள் குறித்து அடிக்கடி எனக்கு போன் பண்ணி பேசுவார். அவருடைய இயக்கத்திற்கு நான் மிகப் பெரிய ஃபேன். இந்த படத்தின் பட்ஜெட்டில் நிறைய மலையாளப் படங்கள் எடுக்கலாம். அந்தளவிற்கான பொருட்செலவில் இந்த படத்தை எடுத்துள்ளோம்.

நான் முதன் முதலில் சென்னை வந்த போது ஏவிஎம் ஸ்டுடியோவில் மோகன்லால் அவர்களுடைய படத்தை தான் பார்த்தேன். இப்போது அவருக்கே சண்டை காட்சிகள் அமைத்திருக்கிறேன். லாடாக்கில் சண்டை காட்சிகள் எடுக்கும் போது பருவநிலை மாறுபாடு ஏற்பட்டதால் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தோம்!” 

பிருத்வி ராஜ்:

“2019ஆம் ஆண்டு லூசிஃபர் படம் வெளியாகும் போது இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு இடங்களிலும் வெளியீடு செய்வதற்கு அன்றைக்கு எந்தவித டெக்னிக்கல் உதவிகளும் சரியான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

ஆனால் இப்போது எம்புரான் படமானது உலகம் முழுவதும் வெளியாவதற்கான எல்லா வேலைகளும் பார்த்துள்ளோம். தமிழில் டப்பிங் படமாக இல்லாமல் ஒரிஜினல் தமிழ் படமாக இருக்கும். தமிழ் ரசிகனாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக எம்புரான் படத்தை தமிழில் பார்க்கலாம். மலையாள சினிமாத் துறையின் மிகப்பெரிய கனவாக உத்வேகமாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் வெற்றி பெற்றால் மலையாளத்தில் மேலும் பல படங்கள் உருவாக்கப்படும்.  தியேட்டரில் வந்து பாருங்கள்!”

நடிகர் மேகன்லால்:

“நாங்கள் டிரையாலஜி படத்தை உருவாக்கியுள்ளோம். மொத்தம் மூன்று படங்கள் தான். முதலில் லூசிஃபர் இரண்டாவது எம்புரான் மூன்றாவது படம் இனிமேல் தான் எடுக்கப் போகிறோம். பொழுதுபோக்கு திரைப்படம் எடுப்பது மிக கஷ்டம். அதற்காக அனைத்தையும் முயற்சி செய்கிறோம்.

புது படைப்புக்காக நாங்கள் இணைந்து வேலை செய்கிறோம். இந்த படம் அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. முன்பதிவுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வெளிநாடு என உலகம் முழுவதும் மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் வேலை செய்துள்ள அனைவரும் சிறப்பாக வேலை செய்துள்ளனர்.

இந்த மாதிரியான படங்கள் வெற்றி பெற்றால் தான் நாங்கள் அடுத்த படத்தை எடுக்க முடியும். பெரிய படங்களும் ஓட வேண்டும். சின்ன படங்களும் கண்டிப்பாக ஓடவேண்டும். அப்பொழுது தான் சினிமாத்துறை சிறப்பாக இருக்கும். 47 வருடங்களில் 400 படங்கள் நடித்துள்ளேன். கடவுளுடைய ஆசியால் நன்றாக இருக்கிறேன். எனக்கு நல்ல இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் கிடைத்திருக்கின்றனர்!” 

பின்னர் செய்தியாளர்களிடம் மோகன்லால் பேசுகையில், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பது உங்களுக்கு எப்படி இருக்கிறது? என்று கேட்டதற்கு, “நான் ஒரு நடிகர் எனக்கு சிறிய கதாபாத்திரம் கொடுத்தால் கூட நான் நடிப்பேன்” என்றார்.

கேரளா சினிமா தோல்வியை சந்திக்கிறது என்கிற கேள்விக்கு, “அனைத்து மொழி சினிமாத்துறைகளிலும் நல்ல படங்கள் வெளியாகிறது. வெற்றித் தோல்வி எல்லா சினிமாத்துறைகளிலும் இருக்க தான் செய்கிறது. அதற்காக அந்த மொழி சினிமாத்துறையை நிறுத்த முடியாது அல்லவா? தவறாக நினைக்காதீர்கள் தயவு செய்து இந்த மாதிரியான வார்த்தைகளை பரப்பாதீர்கள். மம்முட்டிக்காக சபரிமலை சென்று நான் வேண்டினேன். அதை எதற்கு வெளியே சொல்ல வேண்டும். அது தவறில்லையே. மம்முட்டி நலமாக உள்ளார்” என்று பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிருத்விராஜ், “இந்த படத்தில் முதல் பாகம் பார்க்காதவர்களுக்குக் கூட இந்த படம் எளிதில் புரியும். தனிப்பட்ட படமாகவும் இது புரியும். மூன்றாவது படத்தையும் இப்படி தான் எடுக்க உள்ளோம். இந்த படத்தைப் பார்ப்பவர்கள் லூசிஃபரையும் தேடி போய் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை.

கேரளாவில் இருந்து வரக்கூடிய படம் என்பதால் படத்தில் சொல்லக்கூடிய கதையில் கேரளா அரசியலை வைத்திருக்கிறோம்.  ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, போயஸ் கார்டன் பகுதியில் ரஜினியின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன்.  அது சுவாரஸ்யமாக இருந்ததால் முதல் பாகத்தில் வைத்தோம்.

மற்றபடி ரஜினியைப் பார்த்தது திட்டமிடப்படாத ஒன்று. படம் முடிந்த பிறகு தான் போய் பார்த்தோம். என்னை மிகவும் வாழ்த்தினார். தமிழ் பேசும் நடிகர்கள் எம்புரான் படத்தில் தற்போது நடித்துள்ளனர். பின்னாளில் பெரிய நட்சத்திரங்களுடனும் வேலை செய்ய காத்திருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

Related Posts