குற்றம் புதிது: திரை விமர்சனம்

உண்மையிலேயே புதிய குற்றம்.. புதிய திருப்பங்கள் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர்தான்!
காவல்துறை உயர் அதிகாரியின் மகள், கடத்தப்படுகிறார். அந்தப் பெண், கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வருகிறது. கொலைகாரனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
இந்த நிலையில், புட் டெலிவரி செய்யும் கதிரேசன் என்கிற இளைஞன், தானே கொலையாளி என காவல்துறையில் சரண் அடைகிறார். இன்னும் இரண்டு கொலைகளைச் செய்ததாகவும் கூறுகிறார்.
ஆனால் அதன் பிறகு அதிரடியான பல திருப்பங்கள்… இறுதியில் கொலையானது யார்… ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதே கதை.
படத்தின் நாயகன் விஜய் தர்ஷன் சிறப்பாக நடித்து இருக்கிறார். அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு பாவப்பட்ட மனிதராய் தோற்றம் காட்டுகிறார்.. அவர் விஸ்வரூபம் எடுக்கையில் வியக்க வைக்கிறார். காதல் காட்சியிலும் இயல்பாக நடித்து இருக்கிறார். குறிப்பாக, மனநலம் பாதிக்கப்பட்டவராக, நீதிமன்றத்தில் காவல் அதிகாரியை அங்கிள் என அழைக்கும் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.நாயகி சேஷ்விதா கனிமொழி அழகாக இருக்கிறார்.. அழகாக நடிக்கிறார். அப்பா மீது பொழியும் பாசம், காதலனுடனான நேசம்… பாத்ரூமில் இருந்தபோது ஒருவன் மறைந்திருந்து போட்டோ எடுக்க.. ஆவேசமாவது, பிறகு, பிரச்சினை வந்தவுடன் கொடுக்கும் ஐடியா என சிறப்பாக நடித்து இருக்கிறார்.
தந்தை மீது பாசம் பொழியும் மகளாக நடித்திருக்கிறார். தொடக்க காட்சியில் நள்ளிரவில் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வருவதாக அவர் சொல்லுபோதே இவரை வைத்துதான் திரைக்கதை சுழலப் போகிறது என்பதை உணர முடிகிறது.
பாலியல் ரீதியான கொடூரனாக மிரட்டி இருக்கிறார் ராம்ஸ்.
கரண் பி. கிருபா பின்னணி இசையில், பின்னுகிறார். படத்தின் விறுவிறுப்பு அதிகரிக்க இவரது பினனணி இசையும் முக்கிய காரணம்.
கேமராமேன் ஜாசன் வில்லியம்ஸும் அசத்தி இருக்கிறார். இரவு நேரக் காட்சிகள்… குறிப்பாக, ஆளை வெட்டும் காட்சிகளை மறைத்து மறைத்து எடுத்தவிதம்.. மிரட்டல்.
எஸ் கமலக்கண்ணன் எடிட்டிங் கச்சிதம்.
இயக்குநர் நோவா ஆம்ர்ஸ்ட்ராங், ஒரு நல்ல த்ரில்லரை அளித்து இருக்கிறார். அதோடு, பாலியல் ரீதியாக பெண்களுக்கு டார்ச்சர் கொடுப்பவர்களுக்கு நேரும் கதியையும் சொல்லி இருக்கிறார்.
குற்றம் புதிது – ரசிக்க வைக்கிறது.