கிட்டி: விமர்சனம் : மிரட்டலான மைண்ட் கேம்!
பலவித த்ரில்லர் படங்கள் வந்திருக்கின்றன. இது புதுவிதமான படைப்பு. கொலை நடந்ததா, நடந்திருந்தால் யார் செய்தது, செய்தார்கள் என்றால் ஏன் செய்தார்கள்… இப்படி முடிச்சுக்கு மேல் முடிச்சுப் போட்டு, அசரடிக்கும் புதிர்கள் ஏராளம்.
கையில் கத்தியுடன் காவல் நிலையம் வரும் ஆட்டோ ஓட்டுநர் விஜய், தன்னை ஏமாற்றிய காதலியையும், தாக்கிய அடியாள் ஒருவரையும் கொன்றுவிட்டதாகக் கூறுகிறான். அதற்கு முன்பே அவன் ஒரு கொலை செய்ததாகவும் தகவல்… இன்னும் பின்னோக்கிச் சென்று, அவன் சிறுவனாக இருந்தபோது ஒரு கொலை செய்ததாக இன்னொரு தகவல்…
அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களுடன் நகர்கிறது திரைக்கதை.
ஆட்டோ ஓட்டுநர் விஜயாக – நாயகனாக – அசோக் நடித்துள்ளார். காதல், மோதல், மிரட்டலான காட்சிகளில் முத்திரை பதிக்கிறார். அதோடு, இன்னொரு விதமான கதாபாத்திரத்திலும் அதிரவைக்கிறார். காவல் அதிகாரியாக வரும் யுகன், தன் கடமையைச் சரியாகச் செய்திருக்கிறார். வழக்கின் உண்மைத் தன்மையை ஆராயும் அக்கறை, துடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சங்கவி, பூஜா இருவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.
மருத்துவராக வரும் இயக்குநர் அரவிந்தராஜ் அசத்தியிருக்கிறார். சிறப்பான கதாபாத்திரம். இயல்பாக நடித்திருக்கிறார்.
இசை காதர். இந்த விசித்திரப் பின்னணிக்குத் தேவையான அதிரடி இசையைப் பொருத்தமாக அளித்திருக்கிறார். அதேநேரம், காதல் காட்சிகளில் கனிரசமாகவும் பொழிந்து ரசிக்க வைக்கிறார்.
வி.எஸ்.வேலனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சண்டைக் காட்சிகளிலும், மறைபொருள் காட்சிகளிலும் இவரது கேமரா சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது.
வழக்கமான படமாக இல்லாமல், வித்தியாசமான மர்மக் கதையாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் நெடுமாறன் மோகன்தாஸ்.
கொலையாளி யார் என்பதை யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு இறுதிவரை கொண்டு சென்றிருக்கிறார். அதுவும் மனோதத்துவ ரீதியாகக் கொண்டு சென்றது கூடுதல் சிறப்பு. விறுவிறுப்பான கதைகளை விரும்புபவர்களுக்கு சுவையான விருந்து.
ரேட்டிங்: 3.7/5

