‘மார்கோ’வின் வெற்றிக்குப் பின், Cubes Entertainment புதிய பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான ‘கட்டாளன்’ படத்தை கோலாகலமாகத் தொடங்கியது !!

“மார்கோ” எனும் ஆக்சன், த்ரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது, தனது Cubes Entertainment தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மிக பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் படமான “கட்டாளன்” படத்தினை தயாரிக்கிறார். இப்படம் இன்று கொச்சியில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்ட பூஜையுடன், கோலாகலமாக துவங்கியது.
இவ்விழாவின் முக்கிய சிறப்பாக, ‘பாகுபலி’ படத்தில் நடித்துப் புகழ்பெற்ற சிறக்கல் காளிதாசன் யானை கலந்து கொண்டது. அதோடு, ஆடம்பர கார்களும், மோட்டார் பைக்குகளும் விழாவுக்கு அழகை கூட்டின. மேலும், படத்தின் கதைக்களத்தை பிரதிபலிக்கும் விதமாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட அரங்கில், பூஜை கோலாகலமாக நடத்தப்பட்டது.
இந்த மாபெரும் விழாவில், படத்தின் முன்னணி நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்றனர். அந்தோணி வர்கீஸ், கபீர் துகான் சிங், ரஜிஷா விஜயன், ஹனான் ஷா, ஜகதீஷ், சித்திக், பார்த்த் திவாரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
₹45 கோடி செலவில் உருவாகும் “கட்டாளன்” திரைப்படம் பான்-இந்திய ஆக்சன் திரில்லராக உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது. இப்படத்தை அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்க, காந்தாரா, மகாராஜா போன்ற படங்களால் தென்னிந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற கன்னட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ‘மார்கோ’வில் KGF புகழ் ரவி பஸ்ரூரை மலையாள சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய Cubes Entertainment, இப்போது கட்டாளன் மூலம் மற்றொரு பெரிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறது.
டைட்டில் டிசைனுக்காக, ஜெயிலர், லியோ, ஜவான், கூலி போன்ற பான்-இந்தியன் ப்ளாக்பஸ்டர்களில் பணியாற்றிய IdentLabs குழு இப்படத்தில் பணியாற்றுகிறது. நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், மலையாள Vlogger-பாடகி ஹனான் ஷா, ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு, மூத்த நடிகர்கள் ஜகதீஷ் மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
உலகப் புகழ்பெற்ற ஆக்சன் கலைஞர் கேச்சா காம்பக்டி (பொன்னியின் செல்வன் பார்ட் 1, பாகுபலி 2, ஜவான், பாகி 2, Ong Bak 2 போன்ற படங்களில் பணியாற்றியவர்) இப்படத்தின் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். உன்னி R வசனங்களை எழுதியுள்ளார். எடிட்டிங் – ஷமீர் முகம்மது, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – தீபக் பரமேஸ்வரன். மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் S2 Media.
இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.