படையாண்ட மாவீரா: திரை விமர்சனம்

படையாண்ட மாவீரா: திரை விமர்சனம்

வி கே புரொடக்ஷன்ஸ சார்பில் நிர்மல் சரவணா ராஜ், மற்றும் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வ. கௌதமன் இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம், படையாண்ட மாவீரா.‘சாதி வெறியர் –  வன்முறையாளர்’ என்றும், ‘மக்கள் போராளி’ என்றும் இருவேறு பிம்பங்கள் கொண்டவர், மறைந்த காடுவெட்டி குரு. வன்னியர் சங்க தலைவராகவும்,  பா.ம.க. எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர்.

அவரது வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம் என்கிறார் படத்தை இயக்கி, நாயகனாக – காடுவெட்டி குருவாக நடித்த வ.கௌதமன்.   ‘குருவின் வாழ்க்கைச் சம்பவங்களோடு,  சில கற்பனைகளும் கலந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன்’ என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார் கௌதமன்.

ஆகவே எது உண்மை, எது கற்பனை என்கிற விவாதத்துக்குள் செல்லாமல்,  படத்தின் விமர்சனத்தைப் பார்ப்போம்.

குருவின் தாத்தா, படையாட்சி என சாதிப் பெயரால் அழைக்கப்பட்டாலும், சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்.  ஊர்க் குளத்தைப் பயன்படுத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி தரவேண்டும் என்று வேல் கம்போடு போராடி , அதனால் தன் இனப்பகையை சம்பாதித்தவர். அவரது மகன்,  – காடுவெட்டி குருவின் தந்தை –  ஜெயராமன், தந்தை வழியில் அனைவருக்காகவும் போராடுபவர். ஊரில் அவரது செல்வாக்கு அதிகரிக்க,  மாமன்காரனே அவரை கொன்று விடுகிறார்.  பதிலுக்கு, (வளர்ந்து இளைஞனான பிறகு) எதிரியைக் கொல்கிறார் குரு.

அதோடு ஊர் மக்கள் அனைவரிடமும் தாத்தா, தந்தையைப் போலவே சாதி வேற்றுமை பார்க்காமல் உதவுகிறார்.  குறிப்பாக பட்டியலின மக்கள் படிக்க உதவுகிறார்.  ஒட்டு மொத்த ஊர் நலனுக்காக – ஊரைப் பாதுகாக்க – காவல்துறை, அரசு நிர்வாகம் என அனைத்து அதிகார வர்க்கத்தையும் பகைத்துக் கொள்கிறார்.

அந்தப் பகுதியில் மக்களின் வாழ்வைக் கெடுக்கும் சிமெண்ட் ஆலையை குரு எதிர்க்கிறார், ஓர் அரசியல்வாதி குருவுக்கு ஒரு வேன் நிறைய பணமாக நூறு கோடி அனுப்புகிறார்.. இன்னொரு  சந்தர்ப்பத்தில் ஒரு நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு பேரம் பேசுகிறது…  ஆனால் மண்ணுக்காகவும் தன் மக்களுக்காகவும்  அவற்றைப் புறந்தள்ளுகிறார் குரு.

இடையில் சந்தனக் காட்டுக்குச் சென்று, வீரபத்ரனை சந்திக்கிறார்.. போர் வீரருக்கான உடை அணிந்த ஒருவர் குருவிடம், “எங்கட போராட்டத்துக்கு துணை நிக்கிறியள்.. நன்றி” என்கிறார்.

குருவின் மக்கள் போராட்டம் தொடர்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

இந்தப் படத்தில் கௌதமனின் கம்பீர நடிப்பு, விஜயகாந்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.  நடிப்பு மட்டுமல்ல, உடல் மொழி, நடனம், சண்டை.. எல்லாவற்றிலும். கௌதமனுக்கு இது ப்ளஸ்தான்.

அவரது மகன், தமிழ் கௌதமனும் சிறப்பாக நடித்து இருக்கிறார். சோகம், ஆக்ரோசம் என பலவித உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். சிறந்த எதிர்காலம் உண்டு.

நாயகனின் மனைவியாக வருகிறார் பூஜிதா பொன்னாடாகாடு. வடக்கத்திய சாயலுடன் அந்நியமாய் தெரிகிறார்.

சமுத்திரக்கனி  சரண்யா, ரெடின்  உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை அளித்து உள்ளனர்.

அட மன்சூர் அலிகானா இது…  இத்தனை இயல்பாகவும் நடிக்கத் தெரியுமா இவருக்கு. சிறப்பு.  இயக்குநர் கௌதமனுக்கு கூடுதல் பாராட்டு.

காவல் அதிகாரியாக வரும், பாகுபலி பிரபாகர் நடிப்பு படு செயற்கைத்தனம்.

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு பிரம்மாதம் . காடுகள் , மலைகள் , மக்கள் கூட்டம் என அனைத்தையும் கண்முன் நிறுத்துகிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறது.

ஜி வி பிரகாஷ்குமாரின் இசை படத்துக்கு பெரும் பலம். பாடல்கள் அனைத்தும் சிறப்பு. பின்னணி இசையும் அருமை.

காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு என்று கௌதமன் சொன்னாலும், அனைத்துத் தரப்பினரும் ரசிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், கமர்சியலாக  அளித்திருக்கிறார்.

Related Posts