‘காயல்’: திரை விமர்சனம்

‘காயல்’: திரை விமர்சனம்

கடலோர பயணத்தில், வாழ்க்கைப் பயணத்தைச் சொல்லும் திரைப்படம்.

அனுமோல் – ஐசக் வர்கீஸ் தம்பதியரின் மகன் வெளிநாட்டில் வசிக்கிறார். மகள் காயத்ரி கல்லூரியில் படிக்கிறார். அவரும், நாயகன் லிங்கேஷும் மனதார காதலிக்கின்றனர்.

காயத்ரியின் தந்தை காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் தாய் அனுமோல், சாதியை காரணமாகச் சொல்லி மறுக்கிறார்.

அதன் பிறகு காயத்ரிக்கு என்ன ஆனது என்பதே கதை.

நடிகை காயத்ரி வழக்கம்போல சிறப்பாக நடித்து இருக்கிறார். காதலனிடம் வெளிப்படுத்தும் நேசம், அப்பாவிடம் காட்டும் பாசம் என ரசிக்கவைக்கிறார். “சாதி என்ன பெரிய சாதி” என தாயிடம் வாதாடும் காட்சியில் கூடுதலாக ஈர்க்கிறார். அவரது முடிவு நெகிழ வைக்கிறது.

காயத்ரியின் தந்தையாக வரும் ஐசக் வர்கீஸ், அற்புதமானநடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மனைவி மீதான காதலை பார்வையிலேயே வெளிப்படுவது.. அவரையே ஒரு கட்டத்தில் வெறுப்பது.. மகளை நினைத்து நினைத்து கண்ணீர் விடுவது.. அந்த சோகத்தில் மது அருந்தி புலம்புவது.. “மகள் இடத்தில் இன்னொருத்தியா” என ஸ்வாகதா மீது சிறு சிறு செய்கையிலேயே காண்பிக்கும் வெறுப்பு..

இவ்வளவு சிறந்த நடிகரை தமிழ்த் திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லையே என்கிற வருத்தம் ஏற்படுகிறது.

அனுமோல், ரமேஷ் திலக் வழக்கம்போல் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.

நாயகனின் ஒருதலைக் காதலியாக ஸ்வாதா வருகிறார். நன்றாக நடிப்பவர்தான். ஆனால் இதில் அவரது கதாபாத்திரம் மனதில் ஒட்டவில்லை. நாயகனை டார்ச்சர் செய்து காதலிப்பது என்பது எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

நாயகன் லிங்கேஷ், சிறப்பாக நடிக்க முயற்சி செய்து இருக்கிறார்.

ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன.

கார்த்திக் ஒளிப்பதிவு அருமை. கடலோங்களை கண் முன் நிறுத்துகின்றன.இக்குநர் தமயந்தியைப் பொறுத்தவரை அவசியமான ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு உள்ளார். அதனால் பாராட்டலாம்.

அதே போல கந்த சஷ்டி கவசம், (தமிழ்) சுப்ரபாதம் என பின்னணியில் ஒலிப்பது சிறப்பு. ஆனால் இளையராஜாவின் இசையில் உருவான இரு பாடல்களை பயன்படுத்தி இருக்கிறார். மனிதர் சண்டைக்கு வரப்போகிறார்.

படத்தின் மைனஸ்கள்… நல்ல கையை சொன்ன திரைமொழி உவப்பானதாக இல்லை. மிக மெதுவாகச் செல்லும் திரைக்கதை. செயற்கையான காட்சிகள், வசனங்களிலேயே காட்சிகள் என படத்துடன் ஒட்டமுடியவில்லை.

தைரியமான பெண்ணான காயத்ரிஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதைச் சொல்லவில்லை.

ஆனாலும் நல்ல கருத்து உடைய படத்தை அளித்த தமயந்தியை பாராட்டலாம்.