நடிகைக்கு ஹெலிகாப்டர் ‘பரிசு’! ஊடகங்களையும் ஏமாற்றிய மோசடி பேர்வழி!
”பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸூக்கு, மோசடி மன்னனம் சுகேஷ் சந்திரசேகர், ரூ. 30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டரை, காதலர் தின பரிசாக அளித்தார்” என பரபரப்பாக செய்தி வெளியிட்டு இருக்கின்ற பல ஊடகங்கள்.
இதன் பின்னால், இதைவிட அதிர்ச்சிகரமான உண்மைகள் இருக்கின்றன.
யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்?
பெங்களூருவைச் சேர்ந்த இந்த நபர், சாதாரண மோசடி ஆள் கிடையாது. குரலை மாற்றிப் பேசி, பெரிய அரசு அதிகாரிகள் போல நடித்து, தொழிலதிபர்களிடம் பல நூறு கோடிகளைச் சுருட்டிய கில்லாடி. டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மிரட்டிப் பறித்தது, இரட்டை இலை சின்னத்திற்காகப் பேரம் பேசியது என இவர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் உள்ளன. இப்படி மோசடி செய்தே சில ஆயிரம் கோடி ரூபாய்களை சேர்த்து வைத்தவர் இந்த நபர்.
சுகேஷ் – ஜாக்குலின் காதல் கதை..
இந்தக் காதல் கதை 2021-ல் தொடங்கியது. திகார் சிறையில் இருந்துகொண்டே சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினைத் தொடர்பு கொண்டார். தன்னை ஒரு பெரிய பிசினஸ் மேக்னட் என்றும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் பொய் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் ஜாக்குலின் இவரைத் தவிர்க்க முயன்றார். ஆனால், உள்துறை அமைச்சகம் அல்லது பிரதமர் அலுவலகத்திலிருந்து பேசுவது போன்ற ‘ஸ்பூஃபிங்’ (Spoofing) அழைப்புகளைச் செய்து ஜாக்குலினை நம்ப வைத்தார் சுகேஷ்.
இந்தத் தொடர்பு நாளடைவில் காதலாக மாறியது. சுகேஷ் சிறையிலிருந்து பரோலில் வந்து சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள தனது சொகுசு பங்களாவில் தங்கினார். அப்போது அடிக்கடி சென்னைக்குத் தனி விமானத்தில் பறந்து வந்து அவரை சந்தித்தார் ஜாக்குலின். இருவரும் ஒரு தம்பதியைப் போல நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் பின்னர் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பின.
ஜாக்குலின் மீது அன்பைப் பொழிய சுகேஷ் தேர்ந்தெடுத்த வழி ‘விலையுயர்ந்த பரிசுகள்’, வெறும் பூக்களோ, சாக்லேட்களோ அல்ல; மாறாக 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகளை வாரி வழங்கினார். இதில் 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாரசீக பூனை, 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குதிரை, குச்சி (Gucci) மற்றும் சேனல் (Chanel) பிராண்டட் பைகள், வைரத் தோடுகள் மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் அடங்கும். ஜாக்குலினின் குடும்பத்தினருக்குக் கூட வெளிநாடுகளில் பணம் மற்றும் கார் போன்ற உதவிகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்தச் சொர்க்கலோக வாழ்க்கை 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சுகேஷ் சிக்கியபோது சரிந்தது. அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பரிசுகளும் தொழிலதிபர்களிடம் மிரட்டிப் பறிக்கப்பட்ட ‘கறைபடிந்த பணம்’ என்பது தெரியவந்தது. இதனால் ஜாக்குலின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜாக்குலின் ஆரம்பத்தில் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என மறுத்தாலும், பின்னர் சுகேஷிடமிருந்து பரிசுகளைப் பெற்றதை ஒப்புக் கொண்டார். தவிர, “சுகேஸின் குற்றப்பின்னணி எனக்குத் தெரியாது.. என்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்றும் கோரி இருக்கிறார். சிறையில் இருந்தபடியே ஜாக்குலினுக்கு கடிதம் எழுதி வருகிறார் சுகேஸ். “அவர் ஒரு மோசடிக்காரர், என்னை ஏமாற்றிவிட்டார்” என்று கூறி, அவர் கடிதம் எழுதுவதைத் தடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் போராடி வருகிறார், ஜாக்குலின்.
பறக்காத ஹெலிகாப்டர்!
இந்த நிலையில்தான். வழக்கம்போல ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சுகேஸ், “30 கோடி ரூபாய் ஹெலிகாப்டர் அனுப்பி இருக்கிறேன்” என டுபாக்கூர் விட்டு இருக்கிறார். நிஜமாகவே, ஹெலிகாப்டரையே வான்வழியாக அனுப்பிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் தீயாய் பரவின. அடேங்கப்பா, சிறையில் இருந்துகொண்டே ஹெலிகாப்டர் பரிசா எனச் சாமானியர்கள் வாய் பிளக்க, சமூக வலைதளங்களில் இதுதான் டாப் ட்ரெண்டிங் டாபிக் ஆனது.
உண்மையில், சுகேசிடம் தற்போது சட்டப்பூர்வமாக ஒரு பைசா கூடக் கிடையாது. அவருக்குச் சொந்தமான சென்னையின் பிரம்மாண்ட பங்களா, 26 சொகுசு கார்கள் மற்றும் பல கோடிக்கணக்கான ரூபாய் வங்கி இருப்புகள் என அனைத்தையும் அமலாக்கத்துறை ஏற்கனவே பறிமுதல் செய்துவிட்டது.
ஏற்கெனவே ஜாக்குலினுக்கு அவர் கொடுத்த பழைய பரிசுகளையும் அதிகாரிகள் முடக்கிவிட்டனர். அப்படியிருக்கையில், சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவர் எப்படி 30 கோடியில் ஹெலிகாப்டர் வாங்க முடியும்?
இது முழுக்க முழுக்க சுகேஷ் நடத்தும் ஒரு ‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’. “என்னிடம் இன்னும் பணம் இருக்கிறது, நான் இன்னும் பவர்ஃபுல் ஆள் தான்” என்பதைக் காட்ட அவர் போடும் நாடகமே இந்த ஹெலிகாப்டர் அறிவிப்பு.
துரதிர்ஷ்டவசமாக, பல ஊடகங்கள் இந்தச் செய்தியின் பின்னணியைச் சரிபார்க்காமல், ஒரு கைதியின் கற்பனைக் கடிதத்தை உண்மையான செய்தியாக வெளியிட்டு மக்களைக் குழப்பிவிட்டன.
- டி.வி.சோமு

