இட்லி கடை : திரை விமர்சனம்

இட்லி கடை : திரை விமர்சனம்

டான் பிக்சர்ஸ் மற்றும் வொன்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, தனுஷ் இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம், இட்லிகடை.
அழகான சிறு கிராமத்தில்,தனது பெயரிலேயே இட்லி கடை நடத்துகிறார் சிவநேசன். அதை வெறும் தொழிலாக நினைக்காமல், மூச்சாக உணர்கிறார். அவரது மகன் முருகன், சமையற்கலை படிப்பு முடிக்கிறார். வெளிநாடு செல்ல விரும்புகிறார். சிவநேசனுக்கு உடன்பாடில்லை. ஆனாலும் மகன் முருகன் வெளிநாடு செல்கிறார்.

அங்கு ஓட்டம் சாம்ராஜ்யம் நடத்தும் விஷ்ணுவர்த்தனிடம் பணிக்குச் சேர்கிறார். இவரது உழைப்பால், அந்நிறுவனம் பெரும் லாபம் காண்கிறது. இதற்கிடையே, விஷ்ணுவர்த்தனின் மகள் முருகனை காதலிக்கிறாள்.

அந்த நிலையில் சொந்த ஊருக்கு வர வேண்டிய கட்டாயம் முருகனுக்கு ஏற்படுகிறது. அதோடு, இங்கேயே இருந்து இட்லி கடை நடத்த திட்டமிடுகிறார். இதற்கு உள்ளூரில் உணவகம் நடத்தும் ஒருவர் எதிராக நிற்கிறார். கொல்லத் துடிக்கிறார். இன்னொரு பக்கம், முருகனை தேடி, காதலியின் அண்ணன் அஸ்வின் கடும் கோபத்துடன் வருகிறார்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.நாயகன் முருகனாக தனுஷ் வாழ்ந்திருக்கிறார். தனது சிறு வயதில் அனுபவித்த விசயங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதே இக்கதை என படம் துவங்கும் முன்பே அறிவிக்கிறார் தனுஷ்.

எப்பதுமே சிறப்பாக நடிக்கும் அவர், தனியாக சொல்ல வேண்டியது இல்லை. ஆனாலும், தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு வெற்றிச் சிரிப்பு சிரிப்பவனிடம், “இப்போ சந்தோசமா” என்று அமைதியாக கேட்கிறாரே.. ஆகா.. சிறப்பான நடிப்பு!

தன்னையே சுற்றிவரும் நாயகியிடம், காதலை வெளிப்படுத்தாமல்.. அதே நேரம் புறக்கணிக்கவும் செய்யாமல் காதலை வெளிப்படுத்தும் காட்சியையும் சொல்ல வேண்டும்.

இப்படி படம் முழுக்க முருகனாகவே வாழ்ந்திருக்கிறார் தனுஷ்.

நித்யா மேனனும் வழக்கம் போல் பாத்திரம் அறிந்து நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் நாயகன் மீது காண்பிக்கும் கோபம்.. அவனைப் பற்றி புந்தவுடன் காட்டும் அன்பு.. அட போட வைக்கிறது.

குறிப்பாக, “கடைய வித்துட்டே.. சமைச்சி வச்சிருக்கேன் திண்ணு” என ஆங்காரமாக சொல்வது.. கடை விற்கப்படவில்லை என்பதை அறிந்தவுடன், பாசத்துடன், “சமைச்சு வச்சிருக்கேன்.. திண்ணுங்க.. ரெஸ்ட் எடுங்க” என குழைந்து சொல்வது.. சிறப்பு!இந்தப் படத்தில் அருண் விஜயை வில்லன் என்று சொல்ல முடியாது. இரண்டாவது நாயகன் என்றே சொல்லலாம்.

அவரது குணம் ஏன் கொடூரமாக இருக்கிறது என்பதற்கான பின்புலத்தை அருமையாக சொன்னதாலும், அதை உணர்ந்து அவர் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாலும் அவர் கதாபாத்திரம் மீது கோபம் வரவில்லை. அதுவும் கடைசி காட்சியில் சிரிக்கவே வைத்துவிடுகிறார்.

சத்யராஜ் எப்போதும்போல் சிறப்பான நடிப்பு. அதிலும், மகன் செய்யும் தவறுகளை பாசத்தால் பொறுத்துக்கொண்டு கண்ணீர்விடும் அந்தக் காட்சியில் நெகிழ வைத்து விடுகிறார்.

தனுஷின் அப்பாவாக வரும் ராஜ்கிரண் அற்புத நடிப்பை வழங்கி இருக்கிறார். அதுவும் இருவரும் வயல் வெளியில் நடந்து செல்லும் காட்சி.. “இந்த கிராமத்திலேயே இரு” என ராஜ்கிரண் சொல்ல.. அதை மறுத்து தனுஷ் பேச… மனதை உருக்கும் காட்சி.சில காட்சிகளே வந்தாலும், படம் முழுதும் வந்து கலகலப்பூட்டிய உணர்வைத் தருகிறாரா் பார்த்திபன்.அவரது ஸ்டைலில் அதிரடி போலீஸ். அதுவும் கடைசியில் அவர் செய்யும் காரியம் கைதட்டல் போட வைக்கிறது.

இன்னொரு நாயகியாக வரும் ஷாலினி பாண்டேவும் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்து இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசை, ( இந்தப் படத்திலும்) பலம். ஒவ்வொரு பாடலும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் ஈர்க்கிறது. அதிலும் கிராமிய காட்சிகளுக்கு என்று ஒரு விதமாகவும், வெளிநாட்டு காட்சிகளுக்கு வேறு விதமாகவும் வித்தியாசப்படுத்தி இசை அமைத்து காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கிறார்.

கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவு அருமை. பிரகாசின் இசை போலவே, இவரது ஒளிப்பதிவும் வெளிநாடு, கிராமம் என காட்சிகளை அழகாக வேறுபடுத்திக் காண்பித்து இருக்கிறது.

அனைத்து கலைஞர்களும் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார் தனுஷ். தவிர, ரத்தம், கொடூரம் என படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கும் நேரத்தில் சக மனிதர்களுடனான உறவுகளை முன்னிலைப் படுத்தி படம் அளித்திருப்பது.. அதுவும் ரசிக்கும்படி அளித்திருப்பது சிறப்பு. இது அனைத்து வயதினருடனும் தொடர்பு கொள்ளவைக்கும் திரைப்பம். ஆகவே எல்லோரையும் கவரும்.

சக மனிதன் மீது நேசம் வைக்கவும், பெற்றோர் – மூதாதையரை மதிக்கவும் சொல்லித்தரும் அன்பான ஆசான்தான் இத்திரைப்படம்.

அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங்: 4.1/5

Related Posts