‘ராகு கேது’ சர்ச்சை: “கவர்ச்சி கஸ்தூரி, கடவுளா?” : இந்து அமைப்பு எதிர்ப்பு!

‘ராகு கேது’ சர்ச்சை: “கவர்ச்சி கஸ்தூரி, கடவுளா?” : இந்து அமைப்பு எதிர்ப்பு!

பிரபல நடிகை கஸ்தூரிக்கு, இந்து அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், துரை பாலசுந்தரம் இயக்கியுள்ள, ‘ராகு கேது’  திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகிறது, தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் புராண திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தில் சிவனாக சமுத்திரகனியும், பார்வதியாக கஸ்தூரியும் நடிக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் துரை பாலசுந்தரம், “ராகு மற்றும் கேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியவை குறித்த படம் இது” என்று தெரிவித்து உள்ளார்.இந்நிலையில், ‘இந்து சமத்துவகட்சி தமிழ்நாடு’ அமைப்பின் தலைவர், விக்ரம் ஜி, “ஆபாசமாக நடிக்கும் கஸ்தூரி, கடவுள் பார்வதி வேடத்தில் நடிப்பதா” என எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

tamilankural.com இதழிடம் பேசிய அவர், “கஸ்தூரி பல படங்களில் ஆபாசமாக நடித்து உள்ளார். சமீபத்தில்கூட ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படத்தில் உடலின் பெரும் பகுதி தெரியும்படி நடித்தார். அதோடு ஒரு காட்சியில் பீர் பாட்டிலை வாயில் செருகிக்கொண்டு தோன்றினார்.

அப்போதே இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அது மட்டுமல்ல… கஸ்தூரி தனது எக்ஸ் பதிவில், ‘அந்தப் படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது’ என்றும் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட நபர், நாங்கள் மனமுருகி வழிபடும் பார்வதி தேவியின் கதாபாத்திரத்தில் நடிப்பது இந்து மதத்தை அவமதிப்பதாகும். ஆகவே, எங்களது, ‘இந்து சமத்துவகட்சி தமிழ்நாடு’ அமைப்பின் சார்பாக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதை சாதாரணமாக விட மாட்டோம்… தமிழ்நாடு முதலமைச்சருக்கு இதைக் கொண்டு செல்வோம். அதே போல ஒன்றிய அரசுக்கும் தெரிவிப்போம்..” என்று ஆவேசமாக சொல்லி முடித்தார் விக்ரம் ஜி.

‘ராகு கேது’ திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக இருக்கும் சூழலில், கிளம்பி இருக்கும் எதிர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts