‘ஜென்டில்வுமன்’ : திரைவிமர்சனம்

‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்றொரு சொலவடை உண்டு. தடம் மாறிப்போய் துரோகம் இழைக்கும் கணவனையை மனைவி கொன்றால்… அதுதான், ‘ஜென்டில்வுமன்’.
கணவன் மீது காதலாகி கசிந்துருகுகிறாள் நாயகி. அவன் சொல்வதுதான் அவளுக்கு வேதவாக்கு.
ஒரு நாள் அவனது செல்போனை எதிர்பாராமல் துழாவ… அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவருகிறது. அதிர்ந்து போகிறாள் நாயகி.கணவனுக்கு, ‘மரண தண்டனை’ கொடுத்து விடுகிறாள்.
கொலை வழக்கை, காவல் துறை விசாரணை செய்ய.. அதிலிருந்து நாயகி தப்பித்தாளா என்பதுதான் கதை.
நாயகியாக, லிஜோமோல் ஜோஸ். சமீப காலமாகவே, மிகத் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் தோன்றி, அசரடிக்கிறார். இந்தப்படத்திலும் அப்படித்தான்!
கணவன் மீது காட்டும் அதீத பாசம், நேசம்… அவனது குணம் தெரிந்த பிறகு எடுக்கும் அதிரடி முடிவு, பிறகு காவல்துறையிடமிருந்து தப்பிக்க திட்டங்கள் வகுப்பது.. என சிறப்பாக உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.கணவர் கதாபாத்திரத்தில் ஹரி கிருஷ்ணன். இரட்டை வேடம் போடும் ஆண்களை தோலுரித்துக் காட்டி இருக்கிறார். எப்போதும் பட்டையும் கொட்டையுமாக பக்திமானாக வேடம் போடுவது.. ஆனால் ரியல் கேரக்டர் வேறு மாதிரி இருப்பது என அசத்தலான நடிப்பை அளித்து இருக்கிறார்.
இன்னொரு நாயகியாக, லாஸ்லியா, ஆண் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கும் பெண்கள் எப்படி இயிருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டான வேடம். அதை உணர்ந்து சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.
ராஜீவ் காந்தி, தரணி, வைரபாலன், சுதேஷ் என பிறரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடிப்பை கொடுத்து உள்ளனர்.கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. க்ரைம் கதைக்கு ஏற்ற பின்னணி இசையும் மிரட்டுகிறது.
சா.காத்தவராயன் ஒளிப்பதிவும், இந்த த்ரில்லர் படத்துக்கு பலம்.
இளையராஜா சேகரின் படத்தொகுப்பு கச்சிதம்.
ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர் படத்தை அளித்து அதனூடே பெண் சுதந்திரம் பேசி இருக்கிறார் இயக்குநர், ஜோஸ்வா சேதுராமன்.
‘ஜென்டில்வுமன்’ .. மேன், உமன் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
– யாழினி சோமு