கேம் ஆப் லோன்ஸ்: திரை விமர்சனம்

ஜே.ஆர்.ஜி. புரொடெக்ஷன் சார்பில், ஜீவானந்தம் தயாரிக்க, றிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி உருவாக்கத்தில் வரும் 17ம் தேதி வெளியாக இருக்கிறது GOL – கேம் ஆப் லோன்ஸ்.

“அதிரடி த்ரில்லர்” என்று சில படங்களை சொல்வது உண்டு. இந்த GOL திரைப்படம், அவசிய த்ரில்லர்.
சூதாட்டத்தில் 14 லட்ச ரூபாயை இழந்து சிறுவன் தற்கொலை, ஆன்லைன் மூலம் கடன் வாங்கியவர் தற்கொலை – என்றெல்லாம் செய்திகளைப் படிக்கிறோம், கடந்து செல்கிறோம்.
தற்கொலை செய்துகொள்ளும் நபர்கள், அவர்கள் குடும்பத்தினர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்று சில விநாடி வருந்திவிட்டு மறந்துவிடுகிறோம்.
ஆனால் இந்த கொடூர நிஜங்களை ஒரு கதையாக.. உண்மைக் கதையாக அளித்து அதிரவைத்து இருக்கிறது, GOL திரைப்படம்.
ஆம்… ஆன்லைன் சூதாட்டத்தும், ஆன்லைன் கடனுக்கும் அடிமையான ஒரு குடும்பத்தலைவன், என்ன ஆகிறான் என்பதை க்ரைம் த்ரில்லராக ரசிக்கும்கடி கொடுத்து இருக்கிறார்கள்.
நாயகனாக நிவாஸ் ஆதித்தன் நடித்து உள்ளார். இவர் ‘காக்கா முட்டை’, ‘சித்திரம் பேசுதடி 2’ படங்களில் கவனம் ஈர்த்தவர். இதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.சூதாட்டத்தில் வெறித்தனமாக ஈடுபவது, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பது, பிரிந்து போகும் மனைவியிடம், “இன்னும் ஒரு சான்ஸ் கிடைத்தால் நல்லபடியா மாறிடுவேன்” என ஏக்கமும், கெஞ்சலுமாக சொல்வது என சிறப்பாக நடித்து உள்ளார்.
இன்னொரு நாயகன் என்று சொல்லத்தக்க அளவில் நடித்து இருக்கிறார் வில்லனாக வரும்,அபிநய். அவரது கொடூரங்கள்.. மிரட்டல்.
குழந்தை நட்சத்திரம் ஆத்விக்கும் சிறப்பாக நடித்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் வரும் நிவாஸ் ஆதித்தன், எஸ்தர் உள்ளிட்டோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
சபரியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். மிகச் சில இடங்கள்தான் என்றாலும் வெவ்வேறு கோணங்கள் மற்றும் லைட்டிங்கில் வித்தியாசப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.
ஜோ கோஸ்டா இசை, அதிரடி த்ரில்லருக்கு ஏற்ற பின்னணியை கொடுத்து இருக்கிறது.
முதல் படத்திலேயே மிகப்பெரிய சமூகப் பிரச்சினையை எடுத்துக்கொண்டது.. அதை த்ரில்லர் பாணியில் சுவாரஸ்யமாக சொன்னது ஆகிய காரணங்களால் கவனம் பெறுகிறார் அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி.
ரேட்டிங்: 4.1/5