கோ.ப.செ.: “இரு சின்னஞ்சிறு உயிர்களின் உணர்வுப் போராட்டம்!”: கவிஞர்/ எழுத்தாளர் நிஜந்தன் நெகிழ்ச்சி!

கோ.ப.செ.: “இரு சின்னஞ்சிறு உயிர்களின் உணர்வுப் போராட்டம்!”: கவிஞர்/ எழுத்தாளர் நிஜந்தன் நெகிழ்ச்சி!
தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி உருவாக்கத்தில், ஏகன் அறிமுக நாயகனாக நடிக்கும்    ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. அருளானந்து  – மாத்யூ தயாரித்திருக்கும் இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ஐஸ்வர்யா தத்தா  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பிரபலங்கள் பலர், நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.  செய்தி வாசிப்பாளர் நிஜந்தனும் தனது கருத்தை பதிவிட்டு உள்ளார். இவர் ஒரு சிறந்த படைப்பாளியும் ஆவார்.
11 நாவல்களும் ஒரு கவிதைத் தொகுப்பும் எழுதி உள்ளார். நாடகங்களில் நடித்தும் இருக்கிறார்.
அதோடு  கல்வி தொடர்பாக சில குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார்.  அண்ணா பல்கலைக்கழகத்திற்காக இவர் உருவாக்கிய  குறும்படம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றது.
‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படம் , வரும் 2ம் தேதி,  வெள்ளிக்கிழமை, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.குறித்து நிஜந்தன் பதிவிட்டுள்ளதாவது:
“தங்கையை உயிருக்கு உயிராகப் பார்த்து வளர்க்கும் ஒரு இளைஞனின் கதைதான் இது. இரு சின்னஞ்சிறு உயிர்கள் வளர்ந்து எதிர்கொள்ளும் உணர்வுப் போராட்டம்தான் இந்தப் படைப்பு.
வாழ்வில் தாயும் தந்தையும் ஆழ்மனத்தின் தேடல்களாகவும், வாழ்வு ஓட்டத்தின் சங்கிலிகளாகவும் மாறிவிடுகிறார்கள். அவர்களுடனான சமூகப் பிணைப்பு உணர்வுப் பிழம்பாக ஆகிவிடுகிறது.
நவீன உலகில் பாரம்பரிய உறவு முறை காணும் பிம்பப் போராட்டம் படம் நெடுகத் தெரிகிறது. துணிவான முடிவு மூலம் இயல்பான வாழ்வின் நாடியை பின்னியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
தமிழ்த் திரைக் களம் காணாத ஒரு கதையம்சத்தை இயக்குனர் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதையும் மிகவும் தொய்வு இல்லாத திரைக்கதையில் சுவாரஸ்யத்துடன் படைத்திருக்கிறார்.
கதை நாயகன் ஏகன் நடிப்பு ஆழமானது. யோகிபாபுவின் நடிப்பு வழக்கம் போல் எள்ளலும் துள்ளலும் கொண்டது. பிரிகிதா, ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸ்வி கொட்டாச்சி, குட்டி புலி தினேஷ், லியோ சிவகுமார் என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
உணர்வுகளை இசை ஆக்கியிருக்கிறார் என் ஆர் ரகுநந்தன். ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ் காட்சிகளின் வழியாக அழுத்தம் காட்டியிருக்கிறார்.
ஒரு இயக்குனர் தான் பெற்ற பரிணாமத்தைத்தான் படமாக மாற்றுகிறார். அந்தப் படம்
பார்வையாளர்களை பரிணாமம் அடையச் செய்ய வேண்டும். அது போன்ற ஒரு கலை அனுபவத்தை ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ வழங்குகிறது.
நவீன கதையோட்டங்களை விரும்பும் தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தை ரசித்து மகிழ்வார்கள்.
இயக்குனர் சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள்” என்று நிஜந்தன் தெரிவித்து உள்ளார்.

Related Posts