சிவில், மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி! சைதை துரைசாமி அறிவிப்பு

சிவில், மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலுடன் இணைந்து மனிதநேய அறக்கட்டளை மையம் நடத்துகிறது.
சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையிலான மனிதநேய அறக்கட்டளை மையம் சார்பில் சிவில் சர்வீஸ், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் ‘ குரூப்’ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மனிதநேய அறக்கட்டளை, கடந்த 20 ஆண்டுகளாக, சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி பெற உதவி வருகிறது. இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் பலர் வெற்றி பெற்று மத்திய,மாநில அரசு உயர் பதவிகளில் உள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேய ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்துடன் இணைந்து நடத்திய இலவச பயிற்சியில், 267பேர் வெற்றி பெற்று சிவில் நீதிபதிகளாகவும், 9 பேர் மாவட்ட நீதிபதிகளாகவும் பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் நீதிபதி பதவிக்கும்,ஐகோர்ட்டு நடத்தும் மாவட்ட நீதிபதி பதவிக்குமான முதல்நிலை தேர்வுக்கு பார் கவுன்சிலுடன் இணைந்து மனித நேய மைய அறக்கட்டளை இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இது தொடர்பாக இந்த மையத்தின் தலைவர் சைதை துரைசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
மாவட்ட நீதிபதி மற்றும் சிவில் நீதிபதி முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மனிதநேய கல்வியகம் நடத்த இருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு படிக்க விரும்பும் வழக்கறிஞர்கள், முதலில், www.mntfreeias.com என்ற இணையதளத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
அத்துடன், ‘எண் 28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி., நகர், சென்னை- – 600 035’ என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் கொடுத்தவர்கள் மட்டுமே பயிற்சி வகுப்பில் அனுமதிக்கப்படுவர். தொடர்பு எண்: 044- – 2435 8373, 84284 31107.
சிவில் நீதிபதி பதவிக்கு, 3 ஆண்டு வழக்கறிஞராக பயிற்சி பெற்றவர்களும், மாவட்ட நீதிபதி பதவிக்கு, 7 ஆண்டு பயிற்சி பெற்றவர்களும் தேர்வு எழுத தகுதி உள்ளவர்கள். பதிவு செய்தவர்களுக்கு, வரும் 21ம் தேதி முதல் தொடர்ந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சி வகுப்புகள் நடக்கும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.