‘டிஎன்ஏ’: திரைப்பட விமர்சனம்
குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி உள்ளது, டி.என்.ஏ. திரைப்படம்.
காதல் தோல்வியால் துவண்டு போய் குடி நோயாளியாக வலம் வருகிறார் நாயகன் அதர்வா. மது அடிமை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று திரும்புகிறார்.
இன்னொரு புறம், சிறு அளவில் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார் நாயகி நிமிஷா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. குழந்தையும் பிறக்கிறது.
ஆனால் மருத்துவமனையிலேயே குழந்தையை மாற்றிவிட்டனர் என்று கதறுகிறார் நிமிஷா. இதையடுத்து அன்று என்னதான் நடந்தது என்று துப்பறிய ஆரம்பிக்கிறார் அதர்வா. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யமான டுவிஸ்டுகளுடன் கொடுத்திருக்கிறார்கள்.
நாயகன் அதர்வாவுக்கு வித்தியாசமான கதாபாத்திரம். குடிநோயாளியாக, அதற்கு சிகிச்சை பெறுபவராக, பாசக்கார கணவனாக, குழந்தையை காணாமல் தவிக்கும் தந்தையாக, துப்பறியும் நிபுணராக கலக்குகிறார். அதே போல சண்டைக் காட்சிகளில் தூள் பறத்தி இருக்கிறார்.
நாயகி நிமிஷா சஞ்சயனும் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறது. சற்றே மன நிலை மாறுபட்ட வேடம்.. தன்னை நினைக்கு குமைவது, குழந்தை மாற்றப்பட்டதை அறிந்து தவிப்பது என அருமையான நடிப்பு!
ரிட்டயர்டு ஆகப்போகும் போலீசாக நடித்த இருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். அட.. பொறுத்தமான வேடம். இயல்பான நடிப்பு.
மருத்துவமனை ஊழியராக நடித்து இருக்கும் இயக்குநர் சுப்ரமணிய சிவா, மிரட்டுகிறார்.
டேபிள் மீது கர்ச்சீப்பில் இருக்கும் நகைகளில் பாதியை மருத்துவர் பக்கம் தள்ளும்போது பார்க்கிறாரே ஒரு பார்வை… ‘சூப்பர் சிவா’ என்றே சொல்லலாம்!
சேத்தன், ரமேஷ் திலக், ரித்விகா உள்ளிட்ட அனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
பார்த்திபனின் ஒளிப்பதிவு துருத்தாமல், கதையோடு பயணித்து நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.
சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சாஹி சிவா, மற்றும் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கு இடை அமைத்து உள்ளனர். புதிய வரவு, நல்வரவாகட்டும்.
பின்னணி இசையில் ஜிப்ரான், எப்போதும் அதிரவைக்கிறார்.
வி.ஜே.சாபு ஜோசபின் எடிட்டிங் கச்சிதம்.
ஆரம்பத்தில் காதல் தோல்வி கதைபோல சென்றாலும் போகப்போக, குழந்தை கடத்தில், பதறும் பெற்றோர், க்ரைம் த்ரில்லர் என விரிகிறது. அதை சரியான திரைக்கதை யுக்தியில் அளித்து இருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். தகவல்களுக்காக மெனக்கெட்டு இருக்கிறார் என்பதும் தெரிகிறது.
தத்து எடுப்பதில் இருக்கும் பிரச்சினைகள்… குழந்தை கடத்தலுக்கு அதுவும் ஒரு காரணமாகிவிடுவது குறித்தும் சொல்லி இருக்கிறார்.
சென்டிமெண்ட், க்ரைம் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து இரு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.
அனைவரும் பார்த்து ரசிக்கலாம்!
