எம்.ஜி.ஆரின் ஆன்மா வெளியிட்ட புத்தகம்!
இரு கரங்கள் தந்து வாரி வாரி வழங்கிய அந்தப் பெருமகனார், ஏழைகளின் பசிப்பிணி போக்கிய புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பாதங்கள் பட்ட புண்ணிய பூமி அது. சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்து வளாகத்தில், காது கேளாதோருக்கான பள்ளிக்கு அருகாமையில், ஒரு மிக எளிய ஆனால் ஆழமான நிகழ்வாக அரங்கேறியிருக்கிறது இயக்குநர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமியின் ‘ (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூல் வெளியீட்டு விழா.
மக்கள் திலகத்தின் நேரடி அன்பைப் பெற்று வாழ்ந்த முன்னாள் மாநகராட்சி நிர்வாக மேலாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள், இதயபூர்வமாக இந்நூலினை வெளியிட, அதன் முதல் பிரதியை அந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியர் ‘சந்தியா’ நடராஜன் அவர்கள் நெகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார். ஆடம்பரங்கள் ஏதுமின்றி, அன்பும் கலையுமே பிரதானமாக நின்ற அந்தத் தருணம் அங்கிருந்தோரின் இதயங்களை நனையச் செய்தது.
இருபத்தி நான்கு மொழிகளில் ஒளிரப்போகும் ஆன்மா
இந்தியத் திருநாட்டின் மத்திய அரசின் சார்பில், இந்த நூலின் உன்னதமான நோக்கத்தையும் அதன் அத்தியாவசியத் தேவையையும் உணர்ந்து, இதனை இருபத்தி நான்கு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்கான பெரும் வாக்குறுதியை மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு திரு. எல். முருகன் அவர்கள் ஏற்கனவே வழங்கியிருப்பது, இந்த முயற்சிக்குக் கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரமாகும்.
இயக்குநர் சீனு ராமசாமியின் நெஞ்சார்ந்த பகிர்வு:
“உலகின் மிகச் சிறந்த சினிமாக்களை நமது பிள்ளைகளுக்கு அவர்களின் பள்ளிப் பருவத்திலேயே நாம் காட்டத் தொடங்கினால், அது ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் மென்மையான, ஆழமான பல மாற்றங்களை விதைக்கும். இந்த நூலின் வழியே ஒட்டுமொத்தத் தமிழகத்தில் சிறார்கள் மற்றும் பொதுமக்களிடையே சினிமா ரசனை குறித்த ஒரு பெரும் விழிப்புணர்வு தளிர்விட்டிருப்பது என் மனதிற்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருகிறது.”
திரைக்கலையை வெறும் பொழுதுபோக்காகப் பார்க்காமல், அதை அடுத்த தலைமுறையின் ஆன்மாவைச் செப்பனிடும் கருவியாக மாற்றத் துடிக்கும் ஒரு படைப்பாளியின் ஏக்கம், இந்த நூலின் வழியே ஒட்டுமொத்தத் தமிழகத்தின் இல்லங்களுக்கும் சென்றடையத் தொடங்கியுள்ளது.
இது குறித்து மேலும் கூறிய சீனு ராமசாமி, “எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லத்தில் நூலை வெளியிட்டது, அவரது ஆன்மாவே வெளியிட்ட உணர்வைத் தந்தது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

