தேசிங்கு ராஜா 2 : திரை விமர்சனம்
எழில் இயக்கத்தில் விமல் நாயகனாக நடித்து 2013ம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தேசிங்கு ராஜா 2 வெளியாகி உள்ளது. ஆனால் முழுதுமாக இது வேறு கதை.
குலசேகரன், ஒரு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இன்னொரு காவல் நிலையத்தில் வர்ணஜாலம் என்கிற பெண்மணி இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இருவரிடையே, யார் பெரிய ஆள் என்பதில் எப்போதுமே முட்டல் மோதல்தான்.
இந்த நேரத்தில் ‘மார்க்கெட் ரௌடி’ ஒருவன் கொல்லப்படுகிறான். இந்த கொலையை செய்தது, அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன் என ரவுடி கும்பல் சநேதகப்படுகிறது. ஆகவே எம்எல்ஏ மகனை கொலை செய்ய திட்டமிடுகிறது. தன் மகனைக் காப்பாற்ற இன்ஸ்பெக்டர் குலசேகரனை நாடுகிறார் எம்.எல்.ஏ.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே, தேசிங்கு ராஜா2 படத்தின் கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரனாக விமல் வருகிறார். ரியல் போலீஸ் போல இல்லாமல், தனது இயல்பின்படி, காமெடி போலீசாக வந்து கலகலப்பூட்ட பார்க்கிறார். இன்னொரு (பெண்) இன்ஸ்பெக்டர் வர்ணஜாலமாக புகழ் வருகிறார். அவர் பேச்சும், உடல் மொழியும்.. ஐயோ… முடியலை!
காவல் உயர் அதிகாரியாக வருகிறார் நாயகி பூஜிதா பொன்னடா. விரைப்பான காவல் உடையிலும்கூட அவரது அழகு மிளிர்கிறது. இயல்பாக நடிக்கவும் செய்து இருக்கிறார்.
எம்.எல்.ஏ.வாக வரும் ரவி மரியா வழக்கமான பாணியில் நடித்து கவர முயற்சிக்கிறார். மேலும் சினேகா குப்தா, ஜனா, பூஜிதா பொன்னடா, ஹர்சிதா பண்ட்லாமுரி, சிங்கம்புலி, வையாபுரி, மொட்டை ராஜேந்திரன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து இருக்கிறது.
வித்யாசாகர் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. செல்வா ஆர்-ன் ஒளிப்பதிவு ஈர்க்கிறது.
எப்படியாவது ரசிகர்களை சிரிக்கவைத்துவிட வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்து இருக்கிறார் இயக்குநர் எழில். ஆனால் தேசிங்குராஜா முதல் பாகத்தைப் பார்த்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தையே அளிக்கிறது.

