தி.மு.க.வினரை கட்சியில் சேர்த்த காங்கிரஸ்! இது ஜோதிமணிக்கு தெரியுமா?

“கூட்டணியில் இருந்துகொண்டு, எங்கள் கட்சி பிரமுகர்களை உங்கள் கட்சியில் சேர்க்கலாமா” என ஆவேசமாக தி.மு.க.வை நோக்கிக் கேட்டிருக்கிறார் காங்., எம்.பி. ஜோதிமணி.
விசயம் இதுதான்..
தி.மு.க. முக்கிய பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு படத்தை பதிந்திருந்தார். அதோடு, “கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, திமுகவில் இணைந்து விட்டார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்தப் பதிவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.
“காங்கிரஸ் கட்சிக்கு இது அவமானம். கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி, திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர். அவர், காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.
காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, திமுக தலைவர் ஸ்டாலின். கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.” என்று ஜோதிமணி ஆவேசமாக தெரிவித்து இருக்கிறார்.
எதிர்ப்புக்குப் பிறகு செந்தில் பாலாஜி தனது பதிவை நீக்கிவிட்டார். இதையும் ஜோதிமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்தச் செய்தியைப் படித்தவுடன் எனக்கு பொறிதட்டியது. “கூட்டணியில் இருந்துகொண்டே தி.மு.க.வினரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்தாரே அப்போதைய தலைவர் கே.எஸ். அழகிரி!” என்கிற சிந்தனை ஓடியது.
இது போன்ற தகவல்களை எப்போதும் பாதுகாத்து வைப்பது என் வழக்கம்.
குறிப்பிட்ட ஃபைலை தேடிப்பிடித்தேன்.
இது நடந்தது 2023ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி.திண்டுக்கல் – நாகல் நகர் சந்தைபேட்டையில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. முன்னதாக, பிற கட்சியினர் காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இவர்களில் 47-வது வார்டு தி.மு.க. முன்னாள் வார்டு முன்னாள் அவைத்தலைவர் ராஜேந்திரன், தி.மு.க. முன்னாள் நிர்வாகிகள் அக்கீம், அஜித், அப்துல் ரகுமான் உள்ளிட்ட பல தி.மு.கவினரும் உண்டு.
இவர்கள்,தி.மு.கவில் இருந்து விலகி – விலக்கப்பட்டு இருந்தவர்களா அல்லது காங்கிரஸில் சேரும் வரை தி.மு.க.வில்தான் இருந்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால், பத்திரிகை செய்திகளில், “முன்னாள் திமுகவினர்” என்று குறிப்பிடவில்லை. “திமுக முன்னாள் நிர்வாகிகள்” என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இவர்களுக்கு சால்வை அணிவித்து, காங்கிரஸ் கட்சியில் இணைத்தவர், அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரிதான்!
அப்போது தி.மு.க. – காங்கிரஸ் இரண்டும் கூட்டணியில்தான் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன் 2016 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் என தொடர்ந்து இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்தன.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இ.வி.கே.எஸ். இளங்கோவன் வென்றார். இது நடந்தது 2023 பிப், மார்ச்.
அதே ஆண்டு ஜூலை 17ம் தேதிதான், தி.மு.க. பிரமுகர்களை தங்களது கட்சியில் இணைத்துக்கொண்டது காங்கிரஸ். அதுவும் மாநிலத் தலைவரே வரவேற்றார்.
இதை திமுக கண்டுகொள்ளவில்லை.
அதே போல, தி.மு.கவின் அமைப்பு சாரா ஓட்டுநர்களின் மாவட்ட அமைப்பாளராக இருந்த தாம்பரம் நாராயணன் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். முன்னதாக, “நாற்பதாண்டு கால அரசியல் அனுபவம் உள்ள என்னை திமுக சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை” என்ற ஆதங்கத்தையும் தெரிவித்தார். அவரை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.
இன்று வரை இரு கட்சிகளின் கூட்டணி தொடர்கிறது.
இந்த நிலையில், “கூட்டணி கட்சியில் இருந்து ஆட்களை சேர்த்துக்கொள்வது அவமானம்” என்றெல்லாம் ஆவேசப்பட்டு இருக்கிறாரே ஜோதிமணி… அவருக்கு இந்த விசயங்கள் எல்லாம் தெரியுமா….
எப்போதோ எடுத்து வைத்த செய்தி மற்றும் படம்.. இப்போது உதவுகிறது!
– டி.வி.சோமு
படம் நன்றி: தினத்தந்தி நாளிதழ்