சிட்டுக் குறிஞ்சி: மாய மலைக்குள் மர்ம பயணம்!
பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜூட் ஆனந்த் தயாரித்துள்ளார். ரஜித் மேனன், தீப்ஷிகா, நக்ஷா சரண், வி ஜே பப்பு, ஜி எம் குமார் நடித்துள்ளனர். வி ஜே மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ள ‘சிட்டுக் குறிஞ்சி’ படம், வித்தியாசமான கதைக் களமும் புதுமையான காட்சி அமைப்புகளும் கொண்ட துணிச்சலான படைப்பாக அமைந்துள்ளது.
மலை சார்ந்த நிலப்பரப்பு குறிஞ்சி. சிட்டு என்பது சிறிய பறவை வகை. பறவைகள் நிறைந்த மலை ஊரே ‘சிட்டுக் குறிஞ்சி’. இயற்கை எழிலும் மர்ம முடிச்சுகளும் இணையும் இந்தப் பயணம் எப்படி இருக்கிறது?
வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானலுக்கு அதிகாலைப் பேருந்தில் தனியாகப் பயணித்து வரும் மலையாள இளைஞன் (ரஜித் மேனன்), அலுவல் காரணமாக வனத்துறை அதிகாரியைச் சந்திக்கிறான். உடனடியாகத் தங்கும் அறை கிடைக்காத சூழலில், ஊரின் விளிம்பில் அமைந்த ஒரு வீட்டில் வசிக்கும் தம்பதியிடம் அவன் தங்க வைக்கப்படுகிறான்.
கணவனுக்காகக் காத்திருக்கும் அந்த இல்லத்தரசி (நக்ஷா சரண்) இவன் மீது பாசம் பொழிந்து, சமைத்துப் போட்டு, துணிமணிகளைத் துவைத்துக் கொடுத்து அன்பாகப் பழகுகிறாள். திடீரென ஒரு நாள் அந்த வீடு மாயமாகிறது. அதோடு அவன் பார்த்த அந்தப் பெண் வேறொருவரின் மனைவியாக மாறுகிறாள்.
வன அதிகாரி, பால் விற்பவர் என அனைவரும் சற்றே மாறுபட்ட பெயர், தோற்றம் அல்லது குரலுடன் தோன்றி, அவனைத் தெரியாது என மறுக்கின்றனர். அப்பெண்ணிடம் வம்பு செய்வதாக ஊர் மக்கள் கோபப்பட, காவல்துறையும் வருகிறது. நண்பனான மற்றொரு மலையாளி (வி ஜே பப்பு) வந்து அவனைக் காப்பாற்றுகிறான்.
அப்போது முன்பு வந்த கீரை விற்கும் பெண் மட்டும் இவனைக் கண்டுபிடித்துப் பேசுகிறாள். நண்பர்களுக்குச் சந்தேகம் வலுக்க, அவர்கள் காட்டுக்குள் தேடிச் செல்கின்றனர்.
அங்கே இவன் முதலில் தங்கிய வீடு பாழடைந்த இடிபாடுகளாகக் கிடக்கிறது. அதே வாயில், அதே அறை, அப்படியே தத்ரூபமாக உள்ளது. திருமணப் புகைப்படம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை நினைவுகூர்ந்து அந்த இடத்தில் தோண்டிப் பார்க்கும்போது, அதில் உள்ள புகைப்படத்தில் கணவனாக இருப்பது இந்த மலையாள மேனனே. மனைவியாக இருப்பதோ வேறொரு பெண் (தீப்ஷிகா).
ஊரில் உள்ள முதியவர் ஒருவரிடம் (ராமச்சந்திரன்) விசாரிக்கும்போது அவர் மேனனைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். முன்பு அந்த வீட்டில் வாழ்ந்த காதல் தம்பதி அண்ணாமலை (இதே ரஜித் மேனன்) மற்றும் புகைப்படத்தில் உள்ள அவரது மனைவி (தீப்ஷிகா) என்பது தெரியவருகிறது.
ஊர் முக்கியஸ்தர் (ஜி எம் குமார்) ஆதரவில் அவர்கள் அங்கே வாழ்ந்ததும் வெளிச்சத்துக்கு வருகிறது. அதே பெயர்களில் வன அதிகாரி, பால் விற்பவர் வருவதும், கீரைக்காரியாக மட்டும் வேறொருவர் (சுஜாதா சிவகுமார்) தோன்றுவதும் தெரிகிறது.
இதற்கிடையில் நெல்லூரில் பேருந்து ஏறும் பெண் (இவரும் தீப்ஷிகாவே) ஓடி வந்து ஏறும்போது கீழே விழாமல் காப்பாற்றுகிறான் ஓர் இளைஞன் (ஸ்ரீராம் கார்த்திக்). தன்னைப் படைப்பாளி எனக் கூறிக் கொள்ளும் அவன், ஒரு நாவல் எழுதுவதாகவும், இறுதிக் கட்டம் மட்டும் முடியவில்லை என்றும் சொல்கிறான்.
கதை என்னவென்று அவள் கேட்க, இதுவரை திரையில் கண்ட காட்சிகளையே அவன் விவரிக்கிறான். புத்தகத்தை அவளிடம் கொடுத்துவிட்டு அவன் மறைந்து போகிறான். உடன் வந்த பயணிகள் அவள் தனியாகவே பேசிச் சிரித்து வந்ததாகக் கூறுகின்றனர்.
நாவல் தொடர, கொடைக்கானலில் அந்தக் காதல் தம்பதி கொடூரமாகக் கொல்லப்பட்ட காட்சி விரிகிறது. செய்தித்தாள்கள் வழியாக அது ஆணவக் கொலை என்பதை நெல்லூர் பெண் தெரிந்துகொள்கிறாள்.
கொல்லப்பட்ட கணவரின் மறுபிறவியான மலையாள இளைஞன் அங்கே காத்திருக்கிறான். மனைவியின் மறுபிறவியான நெல்லூர் பெண் எடுக்கும் முடிவு என்ன, இறுதியை அவள் எப்படி எழுத நினைக்கிறாள் என்பதே கதை.
சூழல்கள், கதாபாத்திரங்கள், நடிகர்கள் என அனைத்தையும் புதிதாகக் கலைத்துப் போட்டு விளையாடும் துணிச்சலான பரிசோதனை முயற்சி பாராட்டுக்குரியது.
மலையாள இளைஞன் வரும்போதும், காதல் தம்பதி வரும்போதும், நெல்லூர் பெண் வரும்போதும் அதிகாலைப் பேருந்தில் ஒலிக்கும் ”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்” முருகன் பாடல் உணர்வுப்பூர்வமாகப் பொருந்துகிறது.
கீரைக்காரிக்கான நடிகைகளை மாற்றுவது, முதல் கீரைக்காரியிடம் நாயகன் துப்பு எடுப்பது, கட்டப்பட்ட வீட்டுக்குள்ளும் சிதைந்த வீட்டுக்குள்ளும் மேனன் நடப்பதை மாறி மாறிப் பொருத்தும் காட்சிகள் நேர்த்தியாக அமைந்துள்ளன.
பிரான்சிஸ் ராஜ்குமாரின் ஒளிப்பதிவு மலை அழகை ரசனையோடு காட்டுகிறது. மகேந்திரன் கணேசனின் படத்தொகுப்பு கதையைத் தொடர உதவுகிறது.
ரஜித் மேனன், தீப்ஷிகா, வி ஜே பப்பு, ஜி எம் குமார் ஆகியோர் இயல்பாக நடிக்க, நக்ஷா சரண் கவனிக்க வைக்கிறார். சுஜாதா சிவகுமார் குறுகிய நேரமே வந்தாலும் தோற்றம், நடை, பாவனையில் அசத்துகிறார்.
‘ஏன் இப்படி? எப்படி இப்படி?’ என்ற மர்மக் கேள்விகளைத் தாங்கி, வித்தியாசமான கதைசொல்லல் அனுபவத்தைத் தருவதே ‘சிட்டுக் குறிஞ்சி’யின் தனித்துவம்.

