விமர்சனம்: கேப்டன் மில்லர்
ஆங்கிலேய ஆட்சிக்காலம். ஜெயபிரகாஷூம் அவரது மகன் ஜான் கொக்கன் இருவரும் ஜமீன்தார்கள். வெள்ளையர்களுக்கு அடங்கி, குறிப்பிட்ட பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அப்பகுதியி்ல் உள்ள. கோயிலுக்குள், ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என சாதி வெறியுடன் செயல்படுகிறார்கள்.
இன்னொரு பக்கம், இவர்களது அதிகாரத்தை ஒழிக்க போராளி இயக்கத்தில் செயல்படுகிறார் சிவராஜ்குமார். தனது தம்பி தனுஷையும் இயக்கத்துக்கு அழைக்கிறார்.
அவரோ, சுதந்திரத்தை வாங்கி இந்த ராஜாவுக்குத் தானே கொடுக்கப் போற அவனுங்க நம்மள கோயில் உள்ளே விட மறுக்கின்றனர். நான் பட்டாளத்துல போய் சேரப்போறேன் என ஆங்கிலேயர்களின் பட்டாளத்தில் தனுஷ் சேர்கிறார்.
இதற்கிடையே, பிரியங்கா மோகனனும் போராளிகளின் இயக்கத்தில் சேர்கிறார். அவரை கொல்ல ஜமீன்தார் ஜெயபிரகாஷ் ஆட்கள் முயல்கிறார். அப்போது ப்ரியங்காவை தனுஷ் காப்பாற்றுகிறார்.
பிறகு ராணுவத்தில் சேரும் தனுஷ், சுதந்திர போராட்டத்திற்காக பாடுபடும் தனது மக்களையே சுட்டு வீழ்த்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், தனது அண்ணன் செங்கோலன், பிரியங்கா மோகனின் கணவர் உள்ளிட்டோரை தனுஷ் சுட்டுக் கொன்று விட்டதாகவும் பழி ஏற்படுகிறது. இதைப் போக்க, போராளி கூட்டத்தில் சேர்கிறார். அப்போது தனுஷ் செய்யும் ஒரு காரியத்தால் அந்த ஊரையே ஆங்கிலேயர்கள் அழிக்க வருகின்றனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து தனது ஊரை தனுஷ் காப்பாற்றினாரா, கோயில்களுக்கு மக்கள் சென்றார்களா அராஜகம் செய்த ராஜாவின் குடும்பத்தினர் என்ன ஆனர்கள் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

தனுஷ் ஒட்டுமொத்த படத்தையும் தோளில் சுமக்கிறார். ஒட்டுமொத்த நடிப்பையும் கொட்டித் தீர்த்து இருக்கிறார். வழக்கம்போல அனாயாசமான நடிப்பு, துடிப்பான சண்டைக் காட்சி என அதகளப்படுத்துகிறார்.
ஆங்கிலேய படையில் இருந்து கொண்டே ஜெனரல் ஒருவரை சுட்டு விட்டு தானும் சுட்டுத் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கும் காட்சியில் அதிரவைக்கிறார்.
அதே போல பிரியங்கா மோகன் அசத்துகிறார். இவரது கையில் துப்பாக்கியா.. என டிரெய்லரில் பார்த்து சந்தேகப்பட்டவர்கள் எல்லோரும் அசந்துபோகும் அளவுக்கு சிறப்பாக நடித்து இருக்கிறார்.
அதே போல, சிவராஜ்குமார், இளங்கோ குமரவேல், நிவேதா சதீஷ், சந்தீப் கிஷன் உள்ளிட்ட அனைவரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா, படத்திற்கு இன்னொரு பலம். ஒவ்வொரு காட்சியிலும் அசத்துகிறார். குறிப்பாக தனுஷ் வரும் காட்சிகள் அனைத்துமே அசத்தல். கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி அதிரவைக்கிறது.
ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள், மிகச் சிறப்பு.
அதே போல படத்தின் எடிட்டர் நாகூரான் ராமசந்திரனின் கட்ஸ் சிறப்பு.
ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆங்கிலேயர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை காட்சிப்படுத்திய விதம் அசரடிக்கிறது.
அனல் ஈசன் என்கிற எளிய மனிதன்,எப்படி கேப்டன் மில்லராக மாறுகிறான் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
பாராட்டுகள்.
கேப்டன் மில்லர் – அனைவரையும் கவர்வான்.
