பிரதர்: திரை விமர்சனம்

சென்னையில் அப்பா, அம்மா, ஆகியோருடன் வாழ்கிறார் ஜெயம் ரவி. சின்ன வயதில் இருந்தே வெளிப்படையாக பேசுவதால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். இதற்கிடையே அக்காவுக்கு திருமணம் ஆகி ஊட்டிக்குச் செல்கிறார். அங்கே கணவன், மாமியார்,மாமனார், குழந்தைகள் என வாழ்கிறார்.
இவரது தொல்லை தாங்க முடியாத பெற்றோர், அவரை அக்கா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கேயும் இவரது பேச்சினால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. அக்கா தனது குழந்தைகுடன் கணவரை குடும்பத்தை விட்டுப் பிரிகிறார்.
இதனால் ஜெயம் ரவியின் பெற்றோர் அவர் மீது கடும் ஆத்திரம் அடைகிறார்கள். அக்கா குடும்பத்தை சேர்த்து வைக்காமல் எங்களை அப்பா அம்மா என அழைக்கக்கூடாது என சொல்லி விடுகிறார்கள்.
அதற்கான முயற்சியில் இறங்குகிறார் ஜெயம் ரவி.
அந்த முயற்சியல் வெற்றி பெற்றாரா என்பதே மீதிக் கதை.ஜெயம் ரவி, அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எல்லோருக்கும் உதவுவது, உண்மையைப் பேசுவது, அதனால் பிரச்சினைகளை எதிர்கொள்வது என சிறப்பாக நடித்து உள்ளார். அதே நேரம், அக்காவின் நிலையை நினைத்து பதறுவது, பெற்றோர் முன் கூனஇக் குறுகி நிற்பது, மாமனாரிடம் உருக்கமாக மன்னிப்பு கேட்பது என அசத்தல் நடிப்பு.
ஜெயம் ரவியின் அக்காவாக வரும் பூமிகாவும் சிற்பபான நடிப்பை அளித்து உள்ளார். தம்பி மீது காட்டும் பாசம், அவருக்காக வாதிடுவது, சுயமரியாதை முக்கியம் என வீட்டைவிட்டு வெளியேறுவது என மனதில் பதிகிறார் பூமிகா.
ஹீரோயின் ப்ரியங்கா மோகனுக்கு அவ்வளவாக வேலை இல்லை.
மற்றபடி நட்டி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட அனைவரும் இயல்பாக நடித்து உள்ளனர். வி.டி.வி.கணேஷின் காமெடி காட்சிகள் படத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் அற்புதம்.
ஊட்டியை அத்தனை அழகாக காண்பித்து இருக்கிறது விவேகானந்த் சந்தோஷத்தின் கேமரா.
அடிதடி – மசாலா – கவர்ச்சி இல்லாமல் குடும்பக் கதையை காமெடியாக கொடுத்த இயக்குநர் எம்.ராஜேஷ் பாராட்டத்தக்கவர். அதே நேரம்நாயகன் ஜெயம் ரவி கதாபாத்திரம் சரியா, தவறா என்ற குழப்பமே படம் முழுவதும் தொடர்கிறது. அதை இன்னும் அழுத்தமாக உருவாக்கி இருக்கலாம்.
மற்றபடி குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படம்.