பைசன் காளமாடன்: திரை விமர்சனம்: ரேட்டிங் 4.1/5
தன்னைச் சுற்றி நடக்கும் அரசியல், சாதீயப் பார்வை, பொறாமை, அதிகார ஆணவம் எதையும் பொருட்படுத்தாமல், கபடி கபடி என அதையே மூச்சாக கொண்ட எளிய குடும்பத்து இளைஞன். அவனை(யும்) சுற்றி நடக்கும் அரசியல், சாதீயம், தேசப் பற்று என்கிற பொதுப் புத்தி… இவற்றை அதி அற்புதமான திரைக்கதையில் கொடுத்து இருக்கிறார் இயக்குதநர் மாரி செல்வராஜ்.
சிறு கிராமத்தில் பிறந்து பல்வேறு இடர்ப்பாடுகளை மீறி, ஆசிய அளவில் கபடியில் முத்திரை பதித்த.. 995 ஆம் ஆண்டில் கபடி விளையாட்டுக்காக அர்ஜூனா விருது பெற்ற இரண்டாவது தமிழக வீரர் மணத்தி கணேசன். இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, புனைந்திருக்கிறார் மாரி.திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் கிட்டான். மிகச் சிறு வயதில் இருந்தே.. அந்த ஊரின் பாரம்பரியப்படி.. கபடி விளையாட்டில் தீவிர ஈடுபாடு. இந்த ஆர்வத்தால் பிள்ளைக்கு ஆபத்து ஏற்படுமோ என, தடுக்கிறார் தந்தை. காரணம், அவர் அனுபவப்பட்டவர். இந்நிலையில் கிட்டானின் பள்ளி ஆசிரியர், அவன் கபடியில் தொடர உதவுகிறார்.
இதற்கிடையே அந்தப் பகுதியில் இரு வேறு சாதித் தலைவர்களான பாண்டியராஜா – கந்தசாமி ஆகியோருக்கிடையே கடும் மோதல் நிலவுகிறது. வெட்டு, குத்து, கொலைதான்.
இப்படி பல்வேறு சிக்கலான சூழலுக்கு நடுவே, கபடியில் கிட்டான் எப்படி சாதித்தான் என்பதே பைசன் – காளமாடன் படத்தின் கதை.கிட்டானாக துருவ் விக்கிரம். மூன்று வேறுவிதமான கெட் அப்புகள். ஆகா.. அசத்தலான நடிப்பு. கபடி தவிர அவரது கண்களில் வேறு எதையும் பார்க்க முடியவில்லை. தனது தந்தை, கபடிக்கு தடை போடும்போது பார்வையிலேயே சோகத்தைக் கொட்டுவது, தன்னைத் துரத்தும் காதலியை விரட்டுவது, கொலைகள் நடக்கும்போதும் பயந்து பதுங்குவது, கபடியில் பாய்ந்து தாக்குவது… சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் துருவ் விக்ரம்.
அவரது தந்தை வேலுச்சாமியாக, பசுபதி. இவரது நடிப்பைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மகன் மீதான பாசம், அவனுக்கு ஏதும் ஆகவிடக்கூடாது என்கிற பதட்டம், மகனை எப்படியாவது டில்லிக்கு விளையாட அனுப்பிவிட வேண்டும் என போலீசார் காலில் விழுவது… அற்புதம்!
சாதி தலைவராக அமீர், குறைவான காட்சிகள் வந்தாலும் நிறைவான நடிப்பு. இன்னொரு சாதி தலைவராக வரும் லாலும் வழக்கம் போல் சிறப்பாக நடித்து இருக்கிறார். குறிப்பாக, விண்வெளி வீரராக நடித்தாலும், மலையாள வாடடையை விடாத அவர், இந்தப் படத்தில் வசனங்களை தமிழ்ப்படுத்தி இருக்கிறார். வாழ்த்துகள். “அவன் கண்ணுல வேற ஏதும் இல்லடே” என்று அவர் சொல்லும் காட்சி மனதில் நிற்கிறது.தம்பியின் வெற்றியைக் காணத் துடிக்கும் அக்காவாக முத்திரை பதித்து இருக்கிறார் ரஜிஷா விஜயன்.
உடற்கல்வி ஆசிரியராக வரும் ‘அருவி’ மதன் இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். கடைக்காரரிடம், “இவன் நம்ம பையன், எப்போ வந்தாலும் புரோட்டா கொடுங்க” என்பது, தனது சாதிக்கார கும்பலே கிட்டானை தாக்க வரும்போது அவரது நடிப்பு… அசத்தல்!துருவை சுற்றி சுற்றி வந்து காதல் டார்ச்சர் கொடுக்கும் பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன். நல்ல நடிகைதான். பாத்திரப்படைப்பினால் அவர் மீது எரிச்சல்தான் வருகிறது.
காட்சிகளை நேரில் நிறுத்தும் சிறப்பான ஒளிப்பதிவு – எழில் அரசுன்.கே.
குறிப்பாக, சண்டைக் காட்சிகள், கபடி போட்டியின் பரபரப்பு, இரவில் தந்தையும் மகனும் தப்பி வரும் காட்சி என பல சொல்லலாம்.
நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில், ‘தீ கொளுத்தி’ பாடல் அனலடிக்கிறது என்றால், , ‘சீனிக்கல்லு’ பாடல் சக்கரையாய் கரைய வைக்கிறது. பின்னணி இசையும் ஒரு கதாபாத்திரமாக படம் முழுதும் வருகிறது.
சக்தி திருவின் எடிட்டிங் கச்சிதம்.
கபடி ஆடுகளம், அந்தக்கால டேப்ரெக்கார்டர், டிவி, ஒலி பெருக்கி என 90களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கலை இயக்குநர் குமார் கங்கப்பன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.திரைக்கதையில் கபடி விளையாடும் மாரி செல்வராஜ், இதிலும் வெற்றி கண்டிருக்கிறார்.
நாயகன் எப்படியும் வென்று விடுவார் என்றாலும், அதை மறைத்து, வெற்றிபெறுவாரா இல்லையா என எதிர்பார்ப்போடு கதையை கொண்டு செல்வது எளிது.
இந்தப் படத்தில், நாயகன் வெற்றி பெற்றுவிட்டார்.. அதாவது தடைகளைத் தாண்டி ஆசிய போட்டியில் விளையாடச் சென்றுவிட்டார் என்பதை ஆரம்பித்திலேயே காண்பித்து விடுகிறார் இயக்குநர். (அதைத்தாண்டி ஒரு சின்ன ட்விட்ஸ் இருக்கிறதுதான்.) ஆனாலும் மணத்தி கணேசன் கதை என ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவதால் நாயகனுக்கு நிச்சய வெற்றி என்பது முதல் காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது.
ஆனாலும், அந்த உயரத்தை நாயகன் எப்படி எட்டினான் என்கிற திரைக்கதையை அமைப்பதற்கு துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலான முயற்சியில் ( வழக்கம்போல்) வென்றிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
வசனங்களும் சிறப்பு.
சமூக மூடத்தனங்களை பொருட்படுத்தாமல், முன்னேற துடிக்கும் இளைஞனுக்கு இந்த சமுதாயம் போட்டிருக்கும் வேலி, அதை உடைக்க அவன் படும் பாடு ஆகியவற்றி அற்புதமாக தந்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
ஒரே பார்வை இன்றி, இன்னொரு பக்கமும் பார்த்திருக்கிறார் இந்தப் படத்தில்.
குலசாமி, ஆட்டம், நாய், மாடு என வழக்கமான குறியீடுகள், வாழையில் கிளிக் ஆன வயது மூத்த ஈர்ப்பு ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்.
அவை இல்லாமலேயே சிறப்பான படங்களை மாரியால் பொய்ய முடியும்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்க வைக்கிறது பைசன் திரைப்படம்..
மொத்தத்தில் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங்: 4/1//5
– டி.வி.சோமு