ஆட்டோகிராப்: ரீ ரிவ்யூ!
தொடர்ந்து நான்கு வெற்றிப் படங்களை அளித்த இயக்குநர் சேரன், இயக்கியதோடு நடிகராகவும் அறிமுகமான திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. படத்தைத் தயாரித்தவரும் அவரே!
2004ம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது.
சேரனுடன் சிநேகா, கனிகா, மல்லிகா, கோபிகா உள்ளிட்டோர் நடித்தனர்.
தனது சொந்த வாழ்வில் நடந்த சம்பவங்களில் கற்பனை கோர்த்து, அழகான காவியமாக அளித்து இருந்தார் சேரன். ஆனால் ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் விரும்பவில்லை.
“கதை தரமா இருக்கு சார்.. ஆனா என் ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்களே..”, “ஒரு வருசம் கால்சீட் தரணும் போல இருக்கே…” என்றெல்லாம் காரணம் சொல்லி மறுக்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் கிடைப்பதிலும் சிக்கலாகிறது.
இதையடுத்து, இயக்குநர் என்பதோடு தயாரிப்பாளர், ஹீரோ என்று கூடுதலாக இரட்டை அவதாரம் எடுத்தார் சேரன்.
படப்பிடிப்பின் போது பணப் பிரச்சினை!
சில நாட்களில் எடுக்க தீர்மானித்த காட்சிகள் பல நாட்கள் இழுத்தன. மழை உள்ளிட்ட காரணங்கள். ஒரு கட்டத்தில் பணம் சுத்தமாக இல்லை.
கல்யாண மண்டபத்தில் காட்சி எடுக்க வேண்டும். கையில் காசில்லை. நடிகர் ரஜினியிடம் சொல்லியதால், அவர் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பணம் வாங்காமல் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கிறார். மின்சார கட்டணம் மட்டும் கட்ட வேண்டும்.
மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. மின்சார கட்டணம் கட்டுவதற்குக் கூட பணம் இல்லை. மண்டப மேனேஜர், சத்தமாக கத்துகிறார். “கரண்ட் பில் கட்டக்கூட வழியில்ல.. எதுக்கு படம் எடுக்கிறே” என்கிறார்.
அன்று படப்பிடிப்பைப் பார்க்க வந்திருந்த சேரனின் அப்பா, இதைக் கேட்டு அழுகிறார்.
– இப்படி பல்வேறு சம்பவங்களைச் சொல்லலாம்.
நெருக்கடிகளைத் தாண்டி வெளியான ஆட்டோகிராப் திரைப்படம், தமிழ்நாடு எங்கும் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, ஃபிலிம்பேர் விருது என விருதுகளை பெற்றது.
அடிதடி, சண்டை, ரத்தம் என பெரிய நடிகர்கள் ஒரு பக்கம் போக.. சேரன் வேறு திசையில் நகர்ந்தார்.
ஆம்.. ஆட்டோகிராப், ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கைச் சம்பவங்கள்தான். அதிரடி காட்சிKளோ, திடுக்கிடும் திருப்பங்களோ கிடையாது.
இன்னதென்று அறியாத பருவ கால உணர்வை, இளைஞன் ஒருவன் மீண்டும் நினைக்கும் கதை.
‘ஹேப்பி வயசுக்கு வந்த டே’ என வெகுளியாக வாழ்த்திய விடலைப் பருவ அண்ணன்களின் மொத்த உருவமாகவே வாழ்ந்து இருந்தார், சின்ன வயசு சேரனாக நடித்த சிவப்பிரகாசம். ‘நீ அழகா இருக்க’ என வழிந்து நம்மை ரசிக்க வைத்தார்.
சிவப்பிரகாசமும் மல்லிகாவும் காதல் என்பதை அறியாமலேயே பழகும் விதம் நெகிழ வைத்தது.
முதல் காதலியின் வீடு தேடிச் சென்று திருமண அழைப்பிதழை சேரன் கொடுக்க.. மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவான மல்லிகா பரவச உணர்வுடன் நிலைக் கண்ணாடியில் முகம் பார்க்க… சிலிர்க்க வைக்கும் காட்சி.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
படம் வெளியானதில் இருந்து இன்று வரை இருக்கும் கேள்வி…
“இதுவே ஒரு பெண்… தான் காதலித்த ஆண்களை மீண்டும் சந்திக்க வருவது போல படம் எடுக்க முடியுமா..”
