‘அருள்வான்’: காட்டுக்குள்ள சொர்க்கம்… கல்விக்கான யுத்தம்!

‘அருள்வான்’: காட்டுக்குள்ள சொர்க்கம்… கல்விக்கான யுத்தம்!

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி.சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அருள்வான்’. அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் மற்றும் பேபி கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கல்வியின் அவசியத்தை மையமாக வைத்து, காடுகளும் மலைகளும் நிறைந்த சவாலான பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.

இந்த சந்திப்பில் படக்குழுவினர் தங்களின் மறக்க முடியாத அனுபவங்களையும், படத்தின் சுவாரசியங்களையும் துள்ளலான நடையில் பகிர்ந்து கொண்டனர். அதன் விவரம் இதோ:

“மேகங்களுக்கு மேலே சொர்க்கத்தில் படப்பிடிப்பு!” :நடிகர் காளி வெங்கட்

“இந்தப் படத்தில் நடித்ததை என் வாழ்க்கையில மறக்கவே முடியாதுங்க! மனுஷங்களும் மிருகங்களும் நடமாடுறதே கஷ்டமான ஒரு கரடுமுரடான மலைப்பகுதியில தான் ஷூட்டிங் நடந்துச்சு. அங்க முட்புதர்கள் நிறைந்த இடத்துல கேமராமேன் சுகுமார் சார் பின்னாடியே ஓடுவாரு. நாங்க அவரைத் தொரத்திக்கிட்டு ஓடுறதே பெரிய சவாலா இருக்கும்.

ஒரு நாள் நாலு கிலோமீட்டர் தூரத்துல இருக்குற ஒரு பள்ளத்தாக்குல ஷூட்டிங். அங்க போறதுக்கு வண்டி, வாகனம் எதுவுமே கிடையாது; நடந்துதான் போகணும். அத்தனை நடிகர்களும் தங்களுக்குத் தேவையான ‘டென்ட்’டை அவங்களே தூக்கிட்டுப் போய், அங்கேயே டென்ட் அடிச்சு தங்கணும்னா பாத்துக்கோங்களேன்! ஒரு செங்குத்தான மலைப்பாதையில நடக்கும்போது நெஞ்சு ‘திக் திக்’னு அடிச்சுக்கிச்சு.

ஆனா, இயக்குநர் இந்தக் காட்சிகளை எனக்குப் போட்டுக் காட்டியபோது அப்படியே மிரண்டுட்டேன்! கேமராமேன் சுகுமார் ஏற்கனவே காட்டுல பிறந்தவர் மாதிரியே படம் பிடிப்பாரு. ஆனா, இந்த விசுவல்ஸ் எல்லாம் மேகத்துக்கு மேலே… ஏதோ சொர்க்கத்துல ஷூட்டிங் நடத்துன மாதிரி பிரம்மாண்டமா இருந்துச்சு. எல்லாவற்றையும் விட, இது விளிம்புநிலை மக்களின் அடிப்படைக் கல்வியைப் பேசும் முக்கியமான படம். அருள்நிதி சார் சும்மா கதை தேர்ந்தெடுக்க மாட்டார், அவர் இருக்காருனாலே படம் ஹிட் தான்!”

“கலைப்படைப்பை கமர்ஷியல் படமாக மாற்றிய அருள்நிதி!” : சக்திவேலன் (சக்தி ஃபிலிம் ஃபேக்டரி)

“சினிமா விநியோகம்ங்கிறது பிசினஸ் சார்ந்ததா இருந்தாலும், சில படங்கள் மட்டும்தான் மனசுக்கு ரொம்ப நெருக்கமா அமையும். அப்படி ஒரு ஆபூர்வமான படம்தான் இந்த ‘அருள்வான்’. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைப் பற்றி எனக்குள் பல கேள்விகள் உண்டு. கல்வி வாய்ப்பு கிடைக்காத மக்களைப் பற்றி இந்த காலகட்டத்தில் பேசும் படமாக இது உருவாகியுள்ளது. 2000-ஆம் ஆண்டு நடக்கும் கதையாக விவரித்திருக்கிறார்கள்.

இயக்குநருக்கும் கேமராமேனுக்கும் காடு, மலை, மக்கள்னாலே ஒரு தனி அஃபெக்ஷன் இருக்கு போல! சுகுமார் சார் காட்டோட மொத்த அழகையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கார். ஆரவ் – ரம்யா பாண்டியன் தம்பதியோட நடிப்பு ரொம்ப முதிர்ச்சியா இருக்கு.

குறிப்பா அருள்நிதி சாரோட என்ட்ரிக்கு அப்புறம், ஒரு அருமையான கலைப்படைப்பா இருந்த இந்தத் திரைப்படம், அப்படியே செம்ம கமர்ஷியல் படமா மாறிடுச்சு! அவர் ஒரு மிகப்பெரிய பர்ஃபெக்ஷனிஸ்ட். இன்றைய சூழலில் அரசியல் புரிதலோடு விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைத் திரைமொழியில் பேசும் இயக்குநர்கள் ரொம்பக் குறைவு. கணேஷ் விநாயகன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்!”

“100 முறைக்கும் மேல் கேட்ட ‘அல்லிப்பூவே’ பாடல்!”:நடிகை பேபி கிருத்திகா

“நான் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகை, சினிமாவுல எனக்கு எந்தப் பின்னணியும் கிடையாது. இப்படிப்பட்ட சூழல்ல, இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்துல, இத்தனை பெரிய ஸ்டார்ஸ் கூட நடிக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் என் பெரிய நன்றி! என்னோட கனவு இன்னைக்கு நிஜமாகியிருக்கு.

இந்தப் படத்துல ஜி.வி. பிரகாஷ் குமார் சார் இசையில, யுகபாரதி சார் வரிகள்ல உருவான ‘அல்லிப்பூவே’ பாட்டுதான் என்னோட ஆல்டைம் ஃபேவரைட். அதை நான் 100 தடவைக்கும் மேல கேட்டு ரசிச்சிருக்கேன். நூற்றுக்கணக்கான கலைஞர்கள் தங்களோட கஷ்டங்களை மறந்து உழைச்சிருக்காங்க, மக்கள் கண்டிப்பா ஆதரவு தரணும்!”

“மேப்பிலேயே இல்லாத லொகேஷன், போன் சிக்னல் கூட கிடையாது!” : நடிகை ரம்யா பாண்டியன்

“உண்மையைச் சொல்லணும்னா, கொஞ்ச நாளைக்கு கிராமத்துக் கதைகள்ல நடிக்கக் கூடாதுனுதான் முடிவு பண்ணியிருந்தேன். ஆனா இயக்குநர் கதை சொன்னப்போ, அதோட கரு என்னை ரொம்ப ஈர்த்தது. கல்வி கற்க வசதியே இல்லாத மக்கள் இன்னைக்கும் நம்ம மண்ணுல வாழ்றாங்கனு கேட்டப்போ, இதுல நாம நடிச்சே ஆகணும், அது நம்ம பொறுப்புனு தோணுச்சு.

நாங்க ஷூட்டிங் போன இடம் உலக வரைபடத்திலேயே இல்லாத ஒரு இடம்! போன் சிக்னல் கிடையாது, தூங்குறதுக்கோ சாப்பிடுறதுக்கோ எந்த வசதியும் இல்லை. ஆனா அங்கேயும் மனித ஜீவன்கள் வாழ்றாங்க. அவங்களோடு பழகிய நாட்கள் சுவாரசியமானவை.

படத்தோட டீசர்லயே விசுவல்ஸ் அற்புதம்னு பார்த்திருப்பீங்க. தியேட்டர்ல இது செம்ம விசுவல் ட்ரீட்டா இருக்கும். அருள்நிதி சார் இருக்காருனாலே ‘படம் வித்தியாசமா இருக்கும்’னு என் பிரண்ட்ஸ் சொல்வாங்க, அந்த நம்பிக்கையை இந்த படமும் காப்பாத்தும். சக நடிகர் ஆரவ்வோட அர்ப்பணிப்பைப் பார்த்து வியந்துட்டேன். நடுங்குற குளிரில் அருவிக்குக் கீழே உடம்பெல்லாம் சந்தனம் பூசிக்கிட்டு அவர் நடிச்சது சாதாரண விஷயமே இல்லை!”

“பேபி கிருத்திகாவிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்!” : இயக்குநர் கணேஷ் விநாயகன்

“இந்தத் திரைப்படத்தைக் கடந்து வர்றதுக்குள்ள நிறைய வலிகளையும் துன்பங்களையும் தாண்டியிருக்கோம். என் முந்தைய படங்களுக்கு நான்தான் தயாரிப்பாளர்களைத் தேடிப் போயிருக்கேன். ஆனா, இந்த ‘அருள்வான்’ படத்துக்குத் தயாரிப்பாளர் எஸ்.ஜி.சரவணன் சாரே என்னை கூப்பிட்டு வாய்ப்புக் கொடுத்தார். சினிமா மீது அவருக்கு அவ்வளவு காதல். தன் நிறுவனத்துக்கு ’90 பிக்சர்ஸ்’னு பேர் வச்சிருக்கார், ஏன்னா 90 படங்களாவது தயாரிக்கணும்கிறது அவரோட லட்சியம்!

முதல்ல காளி வெங்கட்டை வச்சு சின்ன பட்ஜெட்டுல ஆரம்பிச்ச படம் இது. ஆனா தயாரிப்பாளர்தான் ‘பெரிய டெக்னீஷியன்ஸை போடுங்க’னு படத்தை பிரம்மாண்டமாக்கினார். எடிட்டர் லாரன்ஸ் கிஷோருக்கு ‘தேன்’ படத்துக்காக மாநில விருது கிடைச்சது, இந்தப் படத்துக்காக அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். படம் ஆர்ட்டும் இல்லாம, கமர்ஷியலும் இல்லாம ரெண்டும் கலந்த புது அனுபவமா இருக்கும்.

ரோடு வசதியே இல்லாத மலையில 18 நாட்கள் சாப்பாடு கூட ஒழுங்கா இல்லாம, காட்டு மிருகங்கள் நடமாட்டத்துக்கு மத்தியில ஒட்டுமொத்த டீமும் தங்கியிருந்தோம். அந்தச் சின்ன வயசுல பேபி கிருத்திகா கொடுத்த அர்ப்பணிப்புக்கு அவங்களுக்குத் தேசிய விருது நிச்சயம் கிடைக்கும்!

ஆரவ்கிட்ட கதை சொல்லும்போது, ‘இதுல கலெக்டர், ஒரு மாணவினு ரெண்டு முக்கிய கேரக்டர், உங்களுக்கு ஓகேவா?’னு கேட்டேன். ‘இது சமூகம் சார்ந்த விஷயம், நான் பண்றேன்’னு உடனே ஒத்துக்கிட்டார். படத்தோட முதல் பாதியில மண்ணுக்காகப் போராடும் போராளியா ஆரவ் வருவாரு. இரண்டாம் பாதியில சமூகத்துக்காகப் போராடும் மனிதரா அருள்நிதி மிரட்டியிருக்காரு. அருள்நிதி என் 14 ஆண்டுகால நண்பர், கதை பிடிச்சா லாபம், நஷ்டம் பார்க்காம நடிக்கக் கூடியவர். ‘தேன்’ படத்தை ரிலீஸ் பண்ணிக் கொடுத்த சக்திவேலன் சார், இந்தப் படத்தையும் பார்த்துட்டு உடனே ரிலீஸ் பண்ண ஒத்துக்கிட்டாரு. படம் கண்டிப்பா ஜெயிக்கும்!”

“5 நாள் கால்ஷீட் 20 நாளா மாறினாலும் சளைக்காமல் நடித்தோம்!” :நடிகர் அருள்நிதி 

“இயக்குநர் என்கிட்ட முதல்ல கதை சொல்லும்போது, வெறும் அஞ்சு நாள் கால்ஷீட் கொடுத்தா போதும்னுதான் சொன்னாரு. ஆனா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள போனதுக்கப்புறம் அஞ்சு நாள்… பத்து நாளாகி, அப்புறம் 15 ஆகி, கடைசியில 20 நாளா மாறிடுச்சு!

ஆனா கதையைக் கேட்டதுக்கப்புறம், நான் முழு நீளப் படத்துல நடிச்சிருந்தா கூட இந்த மாதிரியான ஒரு வெயிட்டான கேரக்டர் எனக்குக் கிடைச்சிருக்குமானு தெரியல. இந்தப் படத்துல ‘முத்துவேல்’ அப்படிங்கிற மாவட்ட ஆட்சியர் (District Collector) கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். குழந்தைகளுக்கான கல்வியோட அவசியத்தைப் பேசும் இந்தத் திரைப்படம், எல்லாத் தரப்பு மக்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்னு நம்புறேன்!”

“என் சினிமா பயணத்தில் மீண்டும் அமையாத கதாபாத்திரம்!” :நடிகர் ஆரவ்

“இயக்குநர் கணேஷ் விநாயகன் இந்த கதையை என்கிட்ட சொன்னப்போ, இப்படி ஒரு அற்புதமான கேரக்டர் என்னோட சினிமா பயணத்துல மறுபடியும் அமையுமாங்குறது சந்தேகம்தான். அதனால யோசிக்கவே இல்லை, உடனே நடிக்க சம்மதிச்சேன்.

படப்பிடிப்புத் தளத்துல அருள்நிதி சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையல. ஆனா காளி வெங்கட் சாருடன் இணைந்து நடிச்சிருக்கேன். சில சீன்ஸ்ல அவரோட அசாத்தியமான நடிப்பைப் பார்த்து நானே வியந்து போய் நின்னுட்டேன்! ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை இந்த ‘அருள்வான்’ கொடுத்திருக்கு.”