”ஆஞ்சநேயருக்கு அவரது பலம் தெரியாது.. அதுபோலத்தான் விதார்த்துக்கும்” ; புகழாரம் சூட்டும் ‘அஞ்சாமை’ இயக்குநர்

”ஆஞ்சநேயருக்கு அவரது பலம் தெரியாது.. அதுபோலத்தான் விதார்த்துக்கும்” ; புகழாரம் சூட்டும் ‘அஞ்சாமை’ இயக்குநர்

தரமான படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செவ்வனே செய்துவரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த வருடம் ‘இறுகப்பற்று’ படத்தின் மூலம் பல இளைஞர்களின் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு நல்லதொரு தீர்வை சொன்னது.. அந்தவகையில் திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அஞ்சாமை’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது.

விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர்கள் மோகன் ராஜா, லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

ஜூன்-7ஆம் தேதி (நாளை) இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எப்போதுமே அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளாக இருந்து வரும் நீட் தேர்வை மையப்படுத்தி தனது முதல் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுப்புராமன். படம் நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறதா ? இல்லை எதிர்க்கிறதா ? படம் வெளியானால் சர்ச்சையை கிளப்புமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார் இயக்குநர் சுப்புராமன்.

அவர், “இந்த கதையை விதார்த், வாணி போஜன் ஆகியோரை மனதில் வைத்து எழுதவில்லை. அந்த கதாபாத்திரங்களுக்கே உரிய உணர்வுடன் இந்த கதையை எழுதி விட்டு அதற்கு பொருத்தமானவர்களை தேடிய போது இவர்கள் இருவரும் சரியான தேர்வாக இருந்தார்கள்.

இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் வலி நிறைந்ததாக இருக்கும். நான் கதை சொல்லும்போது யாராவது அழுதால் அதை பார்த்து நான் சிரித்து விடுவேன். இதற்கெல்லாம் அழுகிறார்களே என்று. ஆனால் மற்றவர்களுக்கு நான் கதை சொல்லும்போது எனக்கே அது பலமுறை நடந்தது. படப்பிடிப்பில் கூட விதார்த்தை வைத்து காட்சிகளை படமாக்கும்போது அவருடைய கதாபாத்திரத்திற்குள் நானும் சென்று விடுவேன். உடனடியாக அடுத்த ரகுமான் சாரை வைத்து காட்சிகளை எடுக்க வேண்டும் என்றால் அதிலிருந்து வெளியே வருவதற்கு சிரமமாக இருக்கும்.

பெரிய ரேஸில் ஓடுகிறவர்கள் ஓடட்டும், நான் தோட்டத்துக்குள்ளேயே ஒரு ஓரமாக ஓடிக்கொள்கிறேன் என விதார்த் சொல்வது அவரது தன்னடக்கம். ஆனால் அங்கே ஓடுகிறவர்களால் இங்கே ஓட முடியாது. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. அந்த அளவிற்கு இந்த படத்தில் வித்தியாசமாக, ஆழமாக நடித்துள்ளார் விதார்த். ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் மாதிரி பண்ணுவதற்கு இங்கே ஆளில்லை, நீங்கள் பாலிவுட் லெவலில் போக வேண்டியவர் என விதார்த்திடம் நானே கூறி இருக்கிறேன். ஆஞ்சநேயருக்கு அவரது பலம் தெரியாது என்று சொல்வார்கள். அதுபோல தான் விதார்த்திற்கும் அவரது பலம் தெரியவில்லை” என்று கூறினார்.