அமரன்: திரைப்பட விமர்சனம்: பாய்ச்சலா பதுங்கலா?

அமரன்: திரைப்பட விமர்சனம்: பாய்ச்சலா பதுங்கலா?

2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள படம் ‘அமரன்’.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே இப்படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகமானது. அது படத்தின் டிக்கெட் முன்பதிவிலும் எதிரொலித்ததை பார்க்க முடிந்தது. இத்தகைய எதிர்பார்ப்புடன் தீபாவளி ரேஸில் களமிறங்கிய ‘அமரன்’ அதை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) இந்திய ராணுவத்தில் அதிகாரியாகச் சேர்கிறார். பிறகு, காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் ஒரு அங்கமாகிறார்.இதற்கிடையே, தனது காதலியான இந்துவை (சாய் பல்லவி) திருமணம் செய்து கொள்கிறார்.

இருவருக்கும் இடையேயான காதல், திருமண வாழ்க்கை, மற்றும் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான முகுந்தின் அதிரடி நடவடிக்கைகள் – வீரமரணம். இதுதான் ‘அமரன்’ படத்தின் கதை.

சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் இந்தத் திரைப்படம் மிக முக்கியமானது. ஏற்கெனவே சில படங்களில் சீரியஸ் ரோலில் நடித்து இருக்கிறார். ஆனால் இந்தப் படத்தைப் போல் அவர் மெனக்கெட்டதில்லை என்றே சொல்ல வேண்டும்.

எந்த வொரு இடத்திலும் தனது வழக்கமான நடிப்பு வந்துவிடாதபடி சிறப்பாக நடித்து உள்ளார். அதே போல இராணுவ வீரர் கதாபாத்திரம் என்பதால் உடலை வலுவேற்றி இருக்கிறார்.

காதலியிடம் காட்டும் நேசம், பெற்றோரிடம் காட்டும் பாசம், சக வீரர் கொல்லப்ட்டார் என்றவுடன் வெளிப்படுத்தும் ஆவேசம் என ஜொலிக்கிறார் சிவகார்த்திகேயன்.அவரைவிட முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு. முகுந்தின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் என்கிற அந்த கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறார். காதல் விவகாரத்தில் காதலனுக்கும், தனது பெற்றோருக்கும் இடையே அல்லாடுவது, கணவன் இறப்புச் செய்தி அறிந்து கதறி அழாமல் இறுக்கமான முகத்துடனேயே இருப்பது என அற்புதமாக நடித்து உள்ளார்.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் பெற்றோர்களாக வருபவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

படத்தின் இன்னொரு நாயகன், ஜி.வி.பிரகாஷ். பாடல்கள் அத்னையும் அற்புதம். அதே போல பின்னணி இசையிலும் கவர்கிறார்.

சதீஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு. காதல் காட்சிகளாகட்டும், சண்டைக் காட்சிகளாகட்டும் தூள் பறத்தி இருக்கிறது அவரது கேமரா.

அன்பறிவ்-ன் ஸ்டண்ட் காட்சிகள் பிரமிப்பு.

இடைவேளை வரை, முகுந்த் – இந்து இருவரின் காதல் காட்சிகள்தான் ஓடுகின்றன. ஆனால் ரசிக்கும்படிஅமைக்கப்பட்டு உள்ளன. போர் காட்சிக்கு இடையான காதல் காட்சிக்கும் முக்கியத்துவம் அளித்து இருக்கிறார்கள்.

வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்கும்போது ஒரு பிரச்சினை உண்டு. அதாவது கதை அனைவருக்கும் ஏற்கெனவே தெரிந்திருக்கும். திரைக்கதையால்தான் ரசிகர்களைக் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

பொதுவாக ராணும் குறித்த படங்கள் என்றால் வீரர்களில் ஒருவராக நகைச்சுவை நடிகர் இருப்பார்.. அவர் கெக்கே பிக்கே என காமெடி செய்வார்.. அடுத்து பழங்குடியினர் என்கிற பெயரில் ஒரு கவர்ச்சி டான்ஸ் வைப்பார்கள்… அப்படி எல்லாம் இல்லாமல் நேர்க்கோட்டில் கதையை நகர்த்திச் சென்று சுவாரஸ்யமான படத்தை அளித்து இருக்கிறார்கள்.

பாய்ந்திருக்கிறான் அமரன்

  • யாழினி