“எதைச் செய்யணுமோ அத விட்டுட்டு…..”: மோடி & ஒன்றிய அரசுக்கு நடிகர் விஷால் கண்டனம்!

ஆனந்த விகடன் இதழில் இணையதளத்தில், பிரதமர் மோடியின் அமெரிக்க விஜயம் மற்றும் அமெரிக்காவில் சட்டபூர்வமற்ற முறையில் நுழைந்த இந்தியர்களை கைச்சங்கலி போட்டு திருப்பி அனுப்பிய விவகாரம் இரண்டையும் வைத்து ஒரு கார்டூன் வெளியானது. இதைத் தொடர்ந்து அத்தளத்தை ஒனறிய அரசு முடக்கியது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விசாலும் இது குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருப்பதாவது:
சமீபத்தில் நூற்றாண்டு பெருமை கொண்ட விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் இணையதள பக்கத்தில் இந்திய நாட்டின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் நிகழ்வை ஒட்டி ஒரு சித்திரம் வெளியிடப்பட்டது. அதற்கு கண்டனங்கள் சில இடங்களில் இருந்து வெளிவந்தாலும் ஒன்றிய அரசு விகடன் இணையதளத்தையே முடக்கியது.ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்குவதற்கு சமம்.
அதேவேளையில் திரைத்துறை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறிப்பாக பைரசி போன்ற பிரச்சனைகளுக்கு தொடர்ந்து ஒன்றிய அரசை நாம் வலியுறுத்தி வந்தாலும் அதற்கு இதுவரை எந்த தீர்வு எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
அதேபோல் நாட்டில் புழங்கும் பல்வேறு தவறான செயலிகள் மூலம் திரையில் சக நடிகர், நடிகைகள் மற்றும் மூத்த கலைஞர்கள் பற்றி தவறான செய்திகளை பொய்யாக பேசி பரப்புவதும், சமூகத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிட்டு இன்பம் காணும் ஒரு குறுகிய மனம் படைத்த கும்பலை கண்டறிந்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் விமர்சனம் குறித்து எடுக்கப்பட்ட வெகு வேகமாக நடவடிக்கை போல் நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலி தற்குறிகள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப காசுகளுக்காக அறத்தை மறந்து, தர்மத்தை மறந்து உண்மையை அறியாமல் பொய்யான போலியான கற்பனைகளை அவதூறாக பரப்பி வருபவர்கள் மீதும் திரைப்படங்கள் பைரசி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பபட்டால் நன்றாக இருக்கும்” என்று விசால் குறிப்பிட்டு இருக்கிறார்